அர்ச். ஓடோ - மடாதிபதி - (கி.பி. 942).
ஓடோ என்பவருடைய தாய் தந்தையரின் ஜெபதபத்தாலும், தேவமாதாவுக்கு நேர்ந்த பொருத்தனைகளின் பலனாலும், ஆண்டவர் இவரை அவர்களுக்குக் கொடுக்கச் சித்தமானார். ஓடோ சிறுவயதில் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கினார். இவருடைய தந்தை இவரை அரசருடைய அரண்மனை உத்தியோகத்திலேயே இருக்கும்படிச் செய்ய முயற்சித்ததை ஓடோ அறிந்து, அதற்கு இணங்காமல், ஆண்டவருக்கு ஊழியம் செய்ய தீர்மானித்தார். இக்கருத்துடன் அவர் வேடிக்கை, விளையாட்டு, வேட்டை, உல்லாசப் பொழுதுபோக்கு முதலியவைகளை வெறுத்து, தன் அறையில் தனித்திருந்து ஜெபதபங்களையும், ஒருசந்தி உபவாசங்களையும் புரிந்து ஆண்டவரோடு ஒன்றித்திருந்தார். தமக்கு ஏற்பட்ட இடையூறுகளை நிவர்த்தி செய்து, ஓடோ உலகத்தைத் துறந்து ஒரு துறவற மடத்தை ஏற்படுத்தினார். இவருடைய சிறந்த புண்ணிய வாழ்வையும், தர்ம நடத்தையையும் கண்ட அநேக உயர்குல மக்கள், இவருடைய மடத்தில் சேர்ந்து புண்ணிய வழியில் வாழ்ந்தார்கள். ஓடோவின் அர்ச்சியசிஷ்டதனத்தைப்பற்றிக் கேள்விப்பட்ட பாப்பரசர், அரசர்களுக்குள்ளே இருந்த பகை, விரோதங்களை நீக்கி அவர்களைச் சமாதானப்படுத்தும்படி இவரை அனுப்பினார். இந்த மேலான அலுவலில் ஓடோ வெற்றியடைந்து, அரசராலும் மக்களாலும் பெருமைப்படுத்தப்பட்டார். இவர் தமது சீஷர்களைத் திறமையாய் நடத்தி, மௌனத்தையும் தனிமையையும் அவர்களுக்கு விசேஷ விதமாய் போதித்ததினால் அவர்கள் புண்ணியவான்களானார்கள். ஓடோ சமாதான வேலையினிமித்தம் புறப்பட்டுப் போகையில், வழியில் வியாதியுற்று, அர்ச்சியசிஷ்டவராய் மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.
யோசனை
மௌனமும், தனிமையும் ஒருவனைப் பல பாவங்களினின்று விலக்குமென்று அறிவோமாக.