அர்ச். எலிசபெத்தம்மாள் - விதவை - (கி.பி. 1231).
ஹங்கேரி தேசத்து அரசனுடைய குமாரத்தியான எலிசபெத் சிறுமியாய் இருக்கும்போதே ஜெபத்தியானம், ஒறுத்தல், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களின் மட்டில் ஆசை கொண்டு, அவைகளை வெகு கவனத்துடன் அனுசரித்து வந்தாள்.
ஏழைகளின் மட்டில் இரக்கம் வைத்து, தன்னால் முடிந்த உதவிகளையெல்லாம் அவர்களுக்கு செய்து வந்தாள். பதினான்கு வயதில் ஒரு சிற்றரசனை இவள் மணமுடித்து, உத்தம மனைவியாய் வாழ்ந்து வந்தாள்.
விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்களை வெறுத்து, ஆடம்பரமான கூட்டங்களையும் நாடகங்களையும், வேடிக்கை விளையாட்டுகளையும், சிறந்த விருந்து முதலியவைகளையும் விலக்கி, மனத்தரித்திரமும், தனிமையை விரும்பும் குணமும் உள்ளவளாய் விளங்கினாள்.
இரவு வேளையில் விழித்திருந்து ஜெபிப்பாள். நமது கர்த்தருடைய திருப்பாடுகளைத் தியானித்து கண்ணீர் சொரிவாள். இவளுக்கு இருபது வயது நடக்கும்போது, இவளுடைய கணவன் சிலுவைப் போரில் மரித்தபின் எலிசபெத்தம்மாளுக்கு அநேக துன்பதுரிதங்கள் நேரிட்டன.
துஷ்டரால் இவள் தன் மூன்று பிள்ளைகளுடன் அரண்மனையிலிருந்து துரத்தப்பட்டு வறுமை சிறுமைக்குள்ளானபோது, அவைகளை அவள் மகா பொறுமையுடன் சகித்து வந்தாள். சில காலத்திற்குப்பின் இவள் முன்பு போல அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டாள்.
இப்புண்ணியவதி அர்ச். பிரான்சீஸ்குவின் மூன்றாம் சபையில் சேர்ந்து, அருந் தவங்களைப் புரிந்து வந்தாள். இடைவிடாமல் ஜெபம் செய்து, வியாதியஸ்தரை சந்தித்து, அவர்கள் கால்களைக் கழுவி, கிடைக்கும் நேரத்தில் நூல் நூற்று, ஆடைகளைத் தைத்து ஏழைகளுக்குக் கொடுப்பாள்.
இவளுடைய புண்ணிய வாழ்வைக் கண்ட அநேகர், தங்கள் கெட்ட நடத்தையை விட்டு நல்வழிக்கு திரும்பினார்கள். எலிசபெத்தம்மாள் தன் காவல் சம்மனசானவரின் பேரில் பக்தி வைத்து, தன்னை சகல துன்பத்திலும் காத்து இரட்சிக்கும்படி வேண்டிக்கொள்வாள்.
மகா புண்ணியவதியான இவள் வியாதியுற்று, தன் 24-ம் வயதில் இவ்வுலகை விட்டு நித்திய ஆனந்தத்திற்குள் பிரவேசித்தாள்.
யோசனை
நாமும் நமது காவல் சம்மனசானவரின்மேல் பக்தி வைப்போமானால் ஆன்ம சரீரத் தீமையினின்று அவர் நம்மைக் காப்பாற்றுவார்.