செப்டம்பர் 21

அர்ச். மத்தேயு - அப்போஸ்தலர், சுவிசேஷகர்.

யூதரான இவர் சுங்கச்சாவடியில் ஆயக்காரத் தொழிலை நடத்தி வந்தார்.  ஒரு நாள் சேசுநாதர் ஜெனசரேத் கடற்கரையில் நடந்து செல்கையில், சுங்கச்சாவடியிலிருந்த மத்தேயுவைப் பார்த்து, “என்னைப் பின்செல்” என்றார்.  அக்கணமே மத்தேயு சகலத்தையும் விட்டு  கர்த்தரைப் பின்சென்றார். இதற்குப் பின் மத்தேயு நமதாண்டவருக்கும் அவர் சீஷர்களுக்கும் ஒரு விருந்து வைத்தார். சேசுநாதர் மத்தேயுவுடன் விருந்துண்ணுவதைக் கண்ட பரிசேயர், “ஆயக்காரனுடன் நீர் உணவருந்துவது சரியல்ல”என்றபோது, “சௌக்கியம் உள்ளவர்களுக்கல்ல, ஆனால் வியாதியுற்றோருக்கே நாம் வந்தோம்” என்று சேசுநாதர் மொழிந்தார். நமது கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் மத்தேயு பல தேசங்களுக்குப் போய் வேதம் போதித்து, ஒரு சுவிசேஷத்தை எழுதினார். இவர் எத்தியோப்பியாவுக்கு போய் வேதம் போதிக்கையில், மாயவித்தைக்காரர் இரண்டு பெரிய பாம்புகளை அவர் மேல் சீறிப் பாயும்படி விட்டார்கள். அப்போஸ்தலர் சிலுவை வரைந்தவுடனே சர்ப்பங்கள் காட்டுக்குள் சென்றன. அத்தேசத்து அரசனின் குமாரத்தியான எஜிப் என்பவள் மரித்தபோது, மாய வித்தைக்காரர் அவளை உயிர்ப்பிக்க முடியாமற்போனதைக் கண்ட மத்தேயு, ஆண்டவரைப் பக்தி விசுவாசத்தோடு மன்றாடி, அவளுக்கு உயிர் தந்தார். இதைக் கண்ட அரசனும் பிரஜைகளும் சேசுநாதரை விசுவசித்துக் கிறீஸ்தவர்களானார்கள். இவிசெனி என்னும் வேறொரு இராஜ குமாரத்தி கன்னிமையை விரும்பி கன்னியரானாள். வேறு 200 பெண்களும் அவளைப் பின்சென்று, ஒரு மடத்தில் பிரவேசித்து ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தார்கள். இந்த அரசன் இறந்த பிறகு பட்டத்திற்கு வந்த அந்நிய அரசன், அழகுள்ள இவிசெனியம்மாளை மணமுடிக்க விரும்பி, அவளைத் தன் விருப்பத்திற்கு இணங்கப் புத்திமதி கூறும்படி அப்போஸ்தலருக்கு கட்டளையிட்டான். அவர் அதற்குச் சம்மதியாததால் அரசன் கட்டளைப்படி சேவகர் அவரைக் கோவிலில் வேதத்திற்காகக் கொன்றார்கள்.         

யோசனை

துறவறத்தார் உலக வாழ்விற்குத் திரும்பும்படி அவர்களுக்குத் துர்ப்புத்தி கூறுவது, பெரும் பாவமென்று அறிவோமாக.