செப்டம்பர் 22

அர்ச். மௌரீசும் துணைவரும் - வேதசாட்சிகள் - (கி.பி. 286).

உரோமை சக்கரவர்த்திகளில் ஒருவனான மாக்ஸிமியன் கல்லியா தேசத்தின் மீது போர் தொடுத்தபோது, பெரும் படையைத் திரட்டிக்கொண்டு போய் எதிரிகளுக்குத் தூரமாய் படையை நிறுத்தினான். உரோமைப் படைகளில் தேபியன் படையென்று பெயர்கொண்ட ஒரு படை இருந்தது. 

இந்தப் படையிலுள்ள 6600 சேவகர்களும் கிறீஸ்தவர்கள். இந்தப் படைத் தளபதியின் பெயர் மௌரீஸ். எதிரிகளுடன் போர் புரிவதற்கு முன் அரசன் தன் தேவர்களுக்குப் பலி செலுத்த தீர்மானித்து, அந்த சடங்குக்குப் படையிலுள்ள சகல சேவகர்களும் வர வேண்டுமென்று கட்டளையிட்டான். 

கிறீஸ்தவ படையைச் சேர்ந்த சேவகர்கள் அதற்குப் போகச் சம்மதியாததை அறிந்து, அவர்களில் பத்துப் பேரில் ஒருவனைக் கொல்லும்படி கட்டளையிட்டான். இந்த அநியாய தண்டனைக்குப்பின் மீதியான சேவகர்கள் பலி சடங்குக்கு வர வேண்டுமென்று மறுபடியும் அரசன் கட்டளையிட்டான். 

மௌரீசும் அவருடைய, சேவகரும் இராயனைப் பார்த்து: “உமக்கு நாங்கள் பிரமாணிக்கமாயிருந்து, உமது எதிரிகளை ஜெயிக்கத் தயாராயிருக்கிறோம். ஆனால் எங்கள் சத்திய வேதத்திற்கு விரோதமான எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டோம். நீர் செலுத்தும் பலி எங்கள் சத்திய வேதத்தால் விலக்கப்பட்டிருப்பதால், எங்கள் தலை போனாலும் அந்தச் பலி சடங்கில் சேர மாட்டோம” என்று தைரியமாகச் சொன்னார்கள். 

இதை அரசன் கேட்டு கோபாவேசங்கொண்டு, கிறீஸ்தவ சேவகர்கள் அனைவரையும் வெட்டி கொல்லக் கட்டளையிட்டான். மௌரீசும் மற்ற சேவகர்களும் வேதத்திற்காக தலை கொடுத்து வேதசாட்சிகளானார்கள்.           

யோசனை

நாமும் எந்த காரணத்தைக்கொண்டும் மனிதருடைய முகத்தாட்சண்யத்திற்காக தேவ கற்பனையையும் திருச்சபை கட்டளையையும் மீறாதிருப்போமாக.