அடைக்கல மாதா திருநாள்
மூர் என்று அழைக்கப்படும் முகம்மதியர், ஆப்பிரிக்கா தேசத்தைப் பிடித்து, அத்தேசத்தாரை பலவந்தமாய் இஸ்லாமிய மார்க்கத்தை அனுசரிக்கும்படி செய்தார்கள். அதன்பின், ஸ்பெயின் தேசத்தில் பிரவேசித்து, அதில் பெரும் பாகத்தை கைப்பற்றி, ஆட்சி செய்துவந்தார்கள். இவர்கள், கிறீஸ்தவர்களான அந்தத் தேசத்தாரை பல விதத்திலும் துன்பப்படுத்தி, கொடுங்கோல் ஆட்சி நடத்தி, அநேகரை ஆப்பிரிக்கா தேசத்திற்குக் கொண்டுபோய் சிறையில் அடைத்தார்கள். அநேகரை அடிமைகளாக்கினார்கள். மேலும் அநேகரை விலைக்கு விற்றார்கள். தங்கள் கையில் அகப்பட்ட அப்பாவி கிறீஸ்தவர்களை, சத்தியவேதத்தை மறுதலித்து இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்கள். சத்தியவேதத்தை விடாதவர்களையெல்லாம் கொடூரமாக உபாதித்துக் கொன்றார்கள். அச்சமயத்தில் தேவதாய் கிறீஸ்தவர்கள்மீது தயைகூர்ந்து அர்ச். நொலாஸ்கோ இராயப்பர், அர்ச். ரெய்மண்ட், அறகோன் தேசத்து அரசனான ஜேம்ஸ் ஆகிய இம்மூவருக்கும் தனித்தனியாக தரிசனையாகி, அடிமைப்பட்ட கிறீஸ்தவர்களை மீட்பதற்கான ஒரு துறவற சபையை ஆரம்பிக்கும்படி கூறினார்கள். மேற்கூரிய மூவரும் சேர்ந்து ஆலோசனை செய்து, பாப்பரசரின் அனுமதி பெற்று, ஒரு சபையை ஆரம்பித்தார்கள். அதில் சேர்ந்த துறவியர் ஊரூராய்ச் சென்று தாங்கள் பெற்ற தருமத்தால் கணக்கற்ற கிறீஸ்தவ அடிமைகளை மீட்டார்கள். இதனால் பெரும்பாலான முகம்மதியர் ஸ்பெயின் தேசத்தை விட்டு அகன்றார்கள். இந்த அற்புத சம்பவத்தின் ஞாபகார்த்தமாக அடைக்கல மாதாவின் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
யோசனை
பிறமதத்தினர், பதிதர் முதலியவர்கள் சத்தியவேதத்தில் சேரும்படி நாம் வேண்டிக்கொண்டு, அதற்காக தான தர்மம் செய்வோமாக.