நவம்பர் 26

அர்ச். சில்வெஸ்டர் - மடாதிபதி - (கி.பி. 1267).

சில்வெஸ்டர் இத்தாலியிலுள்ள ஒசிமோ என்னும் ஊரில்  உயர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவர் நீதி சாஸ்திரத்தையும் தேவ சாஸ்திரத்தையும் முழுமையாக கற்றறிந்து, குருப்பட்டம் பெற்று, பாவிகளுக்கு நல்ல புத்திமதிகளைக் கூறி, பிறருடைய ஆன்ம இரட்சணியத்திற்காக ஊக்கத்துடன் உழைத்துவந்தார். இதனால் சில பாவிகள் இவரை விரோதித்து துன்பப்படுத்தி வந்தார்கள். ஒருநாள் புகழ்பெற்ற அழகிய தனவந்தனின் சாவுச் சடங்குக்கு சில்வெஸ்டர் போயிருந்தபோது, அவனுடைய முகம் மாறி அவலட்சணமாயிருப்பதைக் கண்டு, சற்றுநேரம் சாவைப்பற்றி தியானித்தார். பின்பு அன்றிரவே தொலைவிலுள்ள வனாந்தரத்திற்குச் சென்று, கடின தபம் செய்துவந்தார். இவருடைய புண்ணிய வாழ்வையும் அர்ச்சியசிஷ்டதனத்தையும்பற்றிக் கேள்விப்பட்ட அநேகர், இவருக்குச் சீஷர்களானார்கள். சில்வெஸ்டர் தம்மிடம் வந்த திரளான துறவிகளுக்கு ஒரு மடம் கட்டி, அவர்களுக்கு புண்ணிய மார்க்கத்தைப் போதித்து வந்தார். சில காலத்திற்குப்பின், இன்னும் அநேகர் இவருக்கு சீஷரானதால், சில்வெஸ்டர் 25 மடங்களைக் கட்டி வைத்தார். இவர்களுடைய பரிசுத்த வாழ்வையும் தவச்செயல்களையும் கண்ட துர்மனப்பசாசு, பலவிதமாய் அவர்களை துன்பப்படுத்தி, அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்ற பலவகையிலும் முயற்சித்தது. ஆனால் சில்வெஸ்டர், ஜெபத்தாலும் ஒருசந்தியாலும் தேவதாயார்மீது வைத்த மிகுந்த பக்தியினாலும் அதை ஜெயித்தார். 90 வயது வரை சில்வெஸ்டர் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களையும் அநேக புதுமைகளையும் செய்து அர்ச்சியசிஷ்டவராய்க் காலஞ் சென்று, மோட்ச சம்பாவனையைச் சுதந்தரித்துக்கொண்டார்.  

யோசனை

நமது சத்துருவாகிய சரீரத்தில் ஆசாபாசம் கிளம்பி நம்மைக் கெடுக்கப்பார்க்கும்போது, அழுகி, நாறி, புழுவுக்கு இரையாகும் அச்சரீரத்தின்  இஷ்டத்திற்குச் சம்மதியாமல் அச்சோதனைகளை ஜெபிப்போமாக.