அர்ச். சிப்ரியானும் ஜுஸ்டீனாவும் - வேதசாட்சிகள் - (கி.பி. 304).
அழகுள்ள ஜுஸ்டீனாவின் தந்தை பொய் தேவர்களின் பூசாரி. இவள் சத்திய வேதத்தை அறிந்து கிறீஸ்தவளானபின், தன் பெற்றோரும் சத்திய வேதத்தில் சேரும்படி செய்தாள். தனக்கிருந்த அழகான மேனியின் மட்டில் அநேகர் துர் ஆசை கொண்டிருப்பதை இவள் அறிந்து, அழகான தன் கூந்தலைக் கத்தரித்து, அடிக்கடி வெளியே போகாமல் வெகு கவனமாயிருந்தாள். இவளை விரும்பிய வாலிபர்களில் ஒருவன், இவளைக் கெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் அவையெல்லாம் வீணானது. அதனால் அவன் அந்நாட்டில் பசாசோடு பேசிப் பழகி, பில்லிசூனியத்தில் கைதேர்ந்தவனான சிப்ரியான் என்பவனை நாடினான். அவனிடம் தன் விருப்பத்தை தெரிவித்து, ஜுஸ்டீனாவைத் தன் துர் இச்சைக்கு இணங்கச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டான். சிப்ரியான் தனக்குத் தெரிந்த மாயவித்தையெல்லாம் உபயோகித்தான். பசாசுகள் சிற்றின்ப ஆசைகளை அவளுக்கு உண்டாக்கியபோது, ஜுஸ்டீனா ஜெப தபத்தாலும், ஒருசந்தியாலும், சிலுவை அடையாளத்தாலும் அந்த கெட்ட சோதனைகளை ஜெயித்தாள். தன்னுடைய மாயவித்தையெல்லாம் செயல்படாததைக் கண்ட சிப்ரியான் அதிசயித்து, இதன் காரணத்தைப்பற்றி பசாசை வினவியபோது, நல்ல கிறீஸ்தவர்கள் மட்டில் தனக்கு அதிகாரமில்லையென்று அது சொல்லிற்று. பசாசிலும் மேலான வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருப்பதை சிப்ரியான் அறிந்தபின், பசாசை விட்டுவிட்டு, தான் கற்ற மாய வித்தைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு, அதற்குரிய புத்தகம் முதலிய பொருட்களையெல்லாம் சுட்டெரித்தான். பின்பு சத்தியவேதத்தை அறிந்து கிறீஸ்தவனாகி ஜுஸ்டீனாவை அர்ச்சியசிஷ்டவளாகப் பாவித்து, அவளுடன் சேர்ந்து சத்தியவேதம் பரவச்செய்ய முயற்சிக்கும்போது, இருவரும் வேதத்திற்காகப் பிடிபட்டு தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றார்கள். .
யோசனை
ஒருவனுக்கு உண்டாகும் பொல்லாங்கு பில்லிசூனியத்தால் உண்டானதென்று வீணாகக் கருதி, அதைப் பில்லிசூனியத்தால் நீக்க முயற்சிப்பது பாவம். ஜுஸ்டீனாவைப் பின்பற்றி தீர்த்தம், சிலுவையடையாளம், ஜெப தபம் முதலிய வேத சடங்குகளால் வியாதி முதலிய பொல்லாப்பை அகற்றிக்கொள்வது புத்திசாலித்தனம்.