செப்டம்பர் 27

அர்ச். கோஸ்மாசும் தமியானும் - வேதசாட்சிகள் - (கி.பி. 287).

அரபு தேசத்தாரான இவ்விருவரும் கூடப்பிறந்த சகோதரர்கள். இவர்கள் மருத்துவம் கற்றுத் தேர்ந்தபின், பல தேசங்களுக்குப் போய் வைத்தியம் செய்து வந்தார்கள். இவர்கள் உத்தம கிறீஸ்தவர்களானதால் தங்கள் தொழிலை ஏழைகளுக்குத் தர்மமாகச் செய்துவந்தார்கள். மேலும் இவர்களுடைய புண்ணிய பலனால், மனிதர்களுக்கு அசாத்தியமாய்த் தோன்றிய வியாதிகளையும் குணப்படுத்தினபடியால், இவர்களது பெயரும் புகழும் எத்திசையிலும் பரவி, அநேக வியாதியஸ்தர் இவர்களைத் தேடி வந்தனர். மேலும் இவ்விரு சகோதரர்களும் சரீர வியாதியைக் குணப்படுத்தினதுடன் சத்தியவேதத்தின் உண்மையையும் மகிமையையும் மற்றவர்களுக்கு எடுத்துரைத்ததினால், அநேகர் கிறீஸ்தவர்களானார்கள். அக்காலத்திலுண்டான வேத கலகத்தில் இவ்விரு சகோதரர்களும் வேதத்திற்காகப் பிடிபட்டு, அதை மறுதலிக்கும்படி கொடூரமாய் உபாதிக்கப்பட்டும், இவர்கள் வேதத்தில் உறுதியாயிருந்தார்கள். பிறகு அதிபதியின் உத்தரவுப்படி இவர்கள் சமுத்திரத்தில் அமிழ்த்தப்பட்டபோது, மூழ்காமல் மிதந்து கரை சேர்ந்தார்கள்.  பெரும் நெருப்பில் போடப்பட்டும் இவர்கள் சாகவில்லை. சேவகர் இவர்களை அம்பால் எய்தபோது, அம்பு இவர்கள்மேல் படாதிருப்பதைக் கண்ட அதிபதி இவர்களைச் சிரச்சேதம் செய்யும்படிக் கட்டளையிட்டான்.

யோசனை

வைத்தியத்தின் அடிப்படையை முதலாய் அறியாதவர்கள் வைத்தியர் என்று பெயர் வைத்துக்கொண்டு, அற்ப சொற்ப நோவுக்கெல்லாம் பேய் பூதத்தின் சேஷ்டையென்றும், காற்றின் தோஷமென்றும் பிதற்றி, ஜனங்களைப் பயமுறுத்தி ஏமாற்றி, அதற்குக் கருப்பு கோழி இரத்தம் வேண்டும், அது வேண்டும் இது வேண்டுமென்று பல அஞ்ஞான சடங்குகளைச் செய்து தங்கள் வயிற்றை வளர்க்கிறார்கள். இவர்கள் இவ்விரு வேதசாட்சிகளின் சரித்திரத்தைக் கேட்கும்போது எவ்வளவு வெட்கி நாண வேண்டும்!