அர்ச். சாற்றுர்னினுஸ் - ஆயர், வேதசாட்சி - (கி.பி. 257).
அக்காலத்தில் சாற்றுர்னினுஸ் என்னும் ஆயரை, பிரான்ஸ் தேசத்திற்குப் போய் சத்தியவேதம் போதிக்கும்படி பரிசுத்த பாப்பரசர் அனுப்பினார். அப்படியே இந்த ஆயர் சில துணைவர்களுடன் அத்தேசத்திற்குச் சென்று, பல இடங்களில் பிரசங்கம் செய்து, அநேகரை சத்தியவேதத்திற்கு மனந்திருப்பி, கோவில்களைக் கட்டி, வேதம் பரவுவதற்கு உழைத்து வந்தார். பிறகு துலூஸ் நகருக்குச் சென்று, அதைத் தமது முக்கிய இருப்பிடமாக்கிக்கொண்டார். இவருடைய முயற்சியால் பிற மதத்தினர் அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள். இதனால், பொய் மதத்தார் சாற்றுர்னினுஸைப் பகைத்து வந்தார்கள். மேலும் இவர் இருக்கும் கோவிலுக்கு அருகாமையில் பசாசின் கோவில் இருந்தமையால், அவ்வழியாய்த் தமது இருப்பிடத்திற்கு போகவும் வரவும் வேண்டியிருந்தது. இவர் அந்த கோவிலைக் கடந்து போகும்போதெல்லாம், அக்கோவிலுள்ள பசாசு பூசாரி கேட்கும் கேள்விகளுக்கு விடை கொடுக்காமல் ஊமையாயிருக்கும். இதையறிந்த பூசாரி ஆயர்மேல் கோபம்கொண்டு இவரைப் பழிவாங்க சமயம் தேடிக்கொண்டிருந்தான். ஒருநாள் அந்தப் பசாசின் கோவிலில், திரளான ஜனங்கள் கூட்டமாகக் கூடி, பசாசு கொடுக்கும் விடையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் சாற்றுர்னினுஸ் அவ்வழியாய்ச் சென்றபோது, பசாசு விடையை நிறுத்தி ஊமை போலாயிற்று. இதன் காரணத்தைப் பூசாரி ஜனக் கூட்டத்திற்கு அறிவிக்கவே, அவர்கள் இவர்மேல் பாய்ந்து, இவரைப் பசாசின் கோவிலுக்கு இழுத்துக்கொண்டுபோய், தங்கள் தேவர்களுக்குப் பலியிடும்படி கூறினார்கள். தமக்குப் பயப்படும் பசாசுக்கு தாம் பலியிடுவதில்லையென்று ஆயர் கூறியதை அவர்கள் கேட்டு சினங்கொண்டு, பலியிடும்படி அங்கு கட்டிவைத்திருந்த ஒரு எருதின் வாலில் இவரைக் கட்டி, அதைத் துரத்தவே, அது மிரண்டு காடு, மலை பக்கமாய் ஓடியதினால், இவர் உடல் முழுவதும் காயமடைந்து, வேதனைப்பட்டு வேதசாட்சியானார்.
யோசனை
பசாசு நமக்குத் தந்திர சோதனைகளை வரவிடும்போது, அதைக் காலால் மிதித்து ஜெயித்த வேதசாட்சிகளின் உதவியை அடைய, அவர்களை மன்றாடுவோமாக.