(அ) சர்வேசுரனுடன் சேர்ந்து வாழவும், அவரது வாழ்வில் பங்கடையவும் மனிதனுக்கு உரிமை இல்லை.
(ஆ) சர்வேசுரன் தமது பரிபூரண ஜீவியத்தில் நமக்குப் பங்கு அருள்வதற்கு ஒரே காரணம் அவருடைய எல்லையற்ற நேசம் மட்டுமே.
(இ) வறுமையில் வாடும் பிச்சைக்காரன். அழுக் கேறிய கந்தலாடை, ஒரே அருவருப்பைத் தரும் தோற்றம். அவன் மன்னனின் மாளிகைக்குச் சென்று, ''மன்னா, உம் மாளிகையில் எனக்கு இடம் தாரும். உம் அரச சுக செல்வங்களில் பங்கடைய எனக்கு உரிமை உண்டு: உம்முடன் அரண்மனையில் ஆடம்பரமாய் வாழ எனக்கு உரிமை உண்டு'' என்று கூறத் துணிவானா? கனவிலும் கருத மாட்டான். ஏன்? அவனுக்கு அரண்மனையில் வாழ உரிமை யில்லை. பிச்சைக்காரன் அவன்; அவனுக்குரிய தாழ்ந்த நிலையில் அமைதி காண வேண்டியவன் அவன். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
நாம் இந்தப் பிச்சைக்காரனைப் போலவே இருக் கிறோம். சர்வேசுரனை அணுகி அவரிடம் எவ்வித உரிமையும் நாம் பாராட்ட முடியாது. அவருடைய தனிப் பெரும் அக வாழ்வில், அந்நியோந்நியமாகப் பங்கு கொள்ள நமக்கு உரிமையின் சாயை கூடக் கிடையாது. ''சர்வேசுரா, உம்முடைய வான்வீட்டிற்குள் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உம் தெய்வீக செல்வங்களையும், அளவில்லாத மகிமை, பாக்கியத்தையும் உம்முடன் சேர்ந்து அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு" என்று நாம் கூற முடியாது. அது மதிகெட்ட அகந்தையும், நெஞ்சழுத்தமும் ஆகும். நாம் சர்வேசுரனுடைய சிருஷ்டிகள். சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களுக்குரிய நிலையிலே, தாழ்ந்த நிலையிலே, பணிவுடன் வாழ்ந்து, திருப்தி காண வேண்டும்.
(ஈ) ஆனால் மன்னன் தானே முன்வந்து, பிச்சைக் காரனை அழைத்து : "என்னுடன் சேர்ந்து, என் பெரு வாழ்வில் பங்குகொள்ள உனக்கு எள்ளளவும் உரிமை இல்லை. எனினும் உன்னை என் மகனாக சுவீகரித்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளேன். இன்றிலிருந்து நீ என் சுவீகார மகன். என்னிடமுள்ள யாவற்றிலும் உனக்குப் பங்கு உண்டு. என் இன்பத்திலும் நீ இனி பங்கு பெறுவாய். என்னுடன் இருந்து, என்னை நேசிப்பாய். உன்னையும் என் சொந்த மகனைப் போல் நான் நேசிப்பேன்" என்று கூறுவதாகக் கொள்வோம். இப்போது அந்தப் பிச்சைக்காரன் அரச குடும்பத்தின் அங்கத்தினன் ஆகிறான். அரச குடும்பத்தின் அகவாழ்வில் பங்குகொண்டு, அவனுடைய அந்நியோந்நிய அன்பிற்குப் பாத்திரவானாகிறான். இத்தகைய வாழ்விற்கு அவன் உரிமை யற்றவன்; ஆனால் அரசன், தன் அன்பின் காரணமாகத் தானே முன்வந்து, அவனைத் தன் குடும்ப வாழ்வில் பங்கடையத் தெரிந்து கொண்டான்.
சர்வேசுரனும் இவ்வாறே நமக்குச் செய்துள்ளார். நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டுமென விரும்பி அழைக்கிறார்; அவருடன் சேர்ந்து அவருடன் அந்நியோந்நியமாய் வாழ்ந்து, அவருடைய தெய்வீக வாழ்வில் பங்கு கொள்ளும் பிள்ளைகளாக இருக்க நம்மை அழைக் கிறார்.
தமக்கே உரித்தான தம் சொந்த வாழ்வில் மனிதன் பங்கு பெற வேண்டுமென சர்வேசுரன் விரும்புவதற்குக் காரணம் அவருடைய அளவில்லாத நன்மைத்தனமே! எட்டுத் திசையும் பரவும் நறுமணம் போல், நன்மையான எதுவும், எட்டுத் திசையும் பரவும் இயல்புள்ளது. மற்றவர் களும் அதில் பங்குபெற வேண்டுமென நன்மைத்தனம் விரும்புகிறது. நன்மைத்தனத்திற்கே உரிய இயல்பு அது. நல்ல மனிதன் என யாரைச் சொல்வோம்? சுயநலம் பேணு பவனையா? அல்லது தான் கொண்டுள்ள செல்வங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புபவனையா? சர்வேசுரன் சுயநலம் பேணுபவர் அல்ல; சகல நன்மை களையும் சம்பூரணமாகப் பெற்ற நன்மையின் உரு அவர்.
அதனால்தான் அவர் நமக்கு நன்மை செய்ய விரும்புகிறார். எத்துணை ஏராளமாகச் செய்ய இயலுமோ, அத்துணை ஏராளமாக நமக்கு நன்மை செய்ய விரும்புகிறார். அதாவது தம் அகவாழ்விலேயே பங்கு தர விரும்புகிறார். இதைவிட அதிகமாக அவரால் நம்மை உயர்த்தவும் முடியுமா!
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
போதகம் 2 சர்வேசுரன் தமது பூரண வாழ்வில் நமக்குப் பங்குதர விரும்புவது ஏன்?
Posted by
Christopher