அர்ச். எரோணிமுஸ் - (கி.பி. 420)
தல்மேசியா நகரத்தாரான எரோணிமுஸ் என்பவருக்குப் புத்தி சாமர்த்தியமும் ஞாபக சக்தியும் இருந்தமையால், மேலான சாஸ்திரங்களை எளிதாய்க் கற்றறிந்தார். கல்வியின் மட்டில் இவருக்கிருந்த ஆசையினிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று பிரசித்தி பெற்ற பண்டிதரை அணுகி அவர்களிடம் அரிதான கலைகளைக் கற்றுக்கொண்டார். இவர் கிறீஸ்தவ வேதத்தின் உண்மையை அறிந்து, ஞானஸ்நானம் பெற்றார். உலகில் உண்டாகும் தந்திர சோதனைகளை ஜெயிக்கும்படி பாலஸ்தீனத்திற்கு சென்று, நமது கர்த்தர் பிறந்த பெத்லேகம் ஊருக்கு அருகாமையிலுள்ள காட்டில் வாழ்ந்து, ஜெப தபங்களைச் செய்துவந்தார். அந்த காட்டிலிருந்த தபோதனர்களையும் முனிவர்களையும் கண்டு பேசி, அவர்களுடைய புத்திமதிகளையும் போதகங்களைக் கேட்டு, இவரும் அவர்களுடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் பின்பற்ற சகல முயற்சிகளையும் செய்தார். அவ்விடத்தில் எரோணிமுஸ் எவ்வளவு கடுந் தவம் புரிந்தாரெனில், அவர் மெலிந்து எலும்புந் தோலுமானார். அப்படியிருந்தும், பசாசு அவரை விடவில்லை. சகல விதத்திலும் அவரைத் துன்புறுத்தி வந்தது. ஆனால் அவர் ஜெபத்தால் அதை ஜெயித்தார். பாப்பரசருடைய கட்டளைப்படி எரோணிமுஸ் வேதாகமங்களை எபிரேய பாஷையிலிருந்து மொழிபெயர்த்தார். மேலும் வேறு அநேக சிறந்த நூல்களை இவர் எழுதினார். இதனால் வேதபாரகர் என்னும் பட்டம் இவருக்கு உண்டானது. இவ்வளவு பெருந் தபசியும் புண்ணியவாளராயிருந்தும், இவர் முற்றிலும் தம்மை தாழ்த்துவார். இவர் பொதுத் தீர்வையைப்பற்றி நினைக்கும்போது பயந்து நடுங்கி, அந்நாளில் நான் என்ன கணக்கு கொடுப்பேன் என்று புலம்பி, கல்லால் தமது மார்பை அடித்துக்கொள்வார். இவ்விதமாக எரோணிமுஸ் சகல புண்ணியங்களையும் செய்து 91-ம் வயதில் தமது தபச் செயல்களுக்கு சம்பாவனையாக மோட்சத்தை சுதந்தரித்துக்கொண்டார்.
யோசனை
நாமும் நமது மரண நேரத்தில் ஆண்டவருக்குக் கொடுக்கவிருக்கும் ஆத்தும கணக்கைப்பற்றி அடிக்கடி யோசித்துப் பார்ப்போமாக.