சேசுவின் திரு இருதயப் பக்தி

1. மனிதாவதாரம் செய்த சுதனாகிய சர்வேசுரன் மனுக்குலத்தின் மட்டில் காண்பித்த அளவிறந்த நேசத்தைப் போற்றும் பக்தி முயற்சி எது?

சேசுவின் திரு இருதயப் பக்தியாம்.  ஏனெனில், நம் ஆண்டவர் பிறப்பதற்கும், அந்தரங்க சீவியம் சீவிக்கிறதற்கும், பாடுபட்டு சிலுவையில் மரணம் அடைவதற்கும் (அரு.13:1), மோட் சத்திற்கு எழுந்தருளிப் போவதற்கும் (அரு.14:2), இஸ்பிரீத்து சாந்துவை அனுப்புவதற்கும் (அரு. 14:18), தேவ நற்கருணையை ஏற்படுத்துவதற்கும் (லூக். 22:19) நமக்குக் கிடைத்த இவை முதலிய சகல நன்மைகளுக்கும் அவருடைய அளவுகடந்த நேசமுள்ள இருத யம்தான் காரணமாயிருந்தது. “இவ்வுலகத்திலே இருந்த தம்முடை யவர்களைத் தாம் சிநேகித்திருக்கையில் அவர்களை முடிவு பரியந்தம் சிநேகித்தார்” என்றார் அர்ச். அருளப்பர் (அரு. 13:1).


2. இப்பக்தி எப்படி திருச்சபையில் பரம்பி வழங்கத் துவக்கினது? 

அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குத் திவ்விய கர்த்தர் தயவாய் அளித்தருளிய காட்சிகளே இப்பக்திக்குக் காரணமாயிற்று.


3. அதெப்படி? 

17ம் நூற்றாண்டில் சேசுநாதர் சுவாமி கன்னியாஸ்திரீயாகிய மார்கரீத் மரியம்மாள் என்பவளுக்குப் பலமுறை தரிசனையாகி, தம்முடைய இருதயத்தைக் காண்பித்து, “இதோ, மனிதரை வெகுவாய் நேசிக்கும் இருதயம்” என்றார்.  பற்பல விசை அந்தப் புண்ணியவதிக்குத் தந்த காட்சிகளில், சேசுநாதர் மனிதர்களுடைய நன்றியின்மை, அசட்டைத்தனம், வெறுப்பு, அவமரியாதையைப் பற்றி முறையிட்டு, தனக்குச் சந்தோஷம் உண்டாகும்படியாகவும், மனுக்குலத்தின் நன்றிகெட்ட தனத்துக்குப் பரிகாரமாகவும், தனக்கு நன்றியறிதல், பிரதிசிநேகம் காட்டவும், ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் தேவ நற்கருணை வாங்கவும், தமது இருதய அடையாளத்தைப் படமாக வரைந்து, அதைப் பிரசித்தப்படுத் தவும், வணங்கவும், கடைசியாய்த் திவ்விய நற்கருணைத் திருவிழாவிற்குப் பின் எட்டாம் நாளுக்கு அடுத்த வெள்ளிக்கிழமை தன் இருதயத்தின் பேரால் திருவிழா கொண்டாடி உலகமெங்கும் தன் இருதய மகிமையைப் பிரஸ்தாபிக்கவும் கற்பித்தார்.  மேலும் தமது இருதயத்திற்குச் சங்கை, வணக்கம் செய்பவர்களுக்கு அநேக நன்மைகளையும் பொழிந்தருளுவதாக வாக்குக் கொடுத்தார்.


4.  ஆகையால் திரு இருதய பக்தி ஏற்படுவதற்குக் காரணம் என்ன? 

அளவறுக்கப்படாத நேசம் நிறைந்த ஆச்சரிய தேவ னாகிய சேசுநாதர் மனுமக்களுக்காகச் செய்த எண்ணிக்கையில்லாத நன்மைகளையெல்லாம் பாராமல், மனுமக்களுள் பெரும்பாலான வர்கள் அவரை மறந்து, அசட்டை பண்ணி, பாவ வழியில் நடந்து வருவதுமல்லாமல், தங்கள் தேவனும், இராசாவும், இரட்சகரும், பிதாவுமாகிய அவரைத் தூஷணித்து, அவமதித்து வருகிறார்களே.  இந்த அக்கிரம நன்றிக் கேட்டினால் துயரமடைந்த நமதாண்டவ ருக்கு நிந்தைப் பரிகாரம் செய்வதற்காகவே திரு இருதயப் பக்தி ஏற்பட்டது.


5. திரு இருதய பக்தியின் பொருள் என்ன?

(1) சேசுநாதருடைய மனித இருதயமே நேரான பொருளாம். அதை நமதாண்டவர் மனுக்குலத்தின் மட்டில் காண்பிக்கும் நேசத்தின் அடையாளமாக வணங்கி ஆராதிக்கிறோம்.

(2) நமக்காக மரணமடைந்து,  தேவ நற்கருணை வழியாக நமக்குத் தம்மைத்தாமே முழுதும் கொடுக்கத் தூண்டின அவருடைய கரைகடந்த நேசமே, அதின் விசேஷ பொருளாம்.


6. இப்பக்தியின் நோக்கம் என்ன? 

(1) அடிக்கடி ஆராதித்தல், நன்றி செலுத்துதல் முதலிய வணக்கங்களை பண்ணுவதால், தேவ நற்கருணையில் நமது ஆண்டவர் நமக்குக் காண்பிக்கும் நேசத்துக்குப் பிரதிநேசம்  காட்டு வதும், 

(2) மனுக்குலம் சேசுவுக்கு, விசேஷமாய்த் தேவ நற்கருணையில் செய்துவரும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரம்  செய்வதுமாம்.


7. திரு இருதய பக்தியை எப்படி அநுசரிக்க வேண்டும்? 

சேசுநாதருடைய சிநேகத்திற்குப் பிரதிசிநேகத்தைக் காண்பிப்பதினால் அப்பக்தியை அநுசரிக்க வேண்டும்.


8. நமது பிரதிநேசத்துக்கு இருக்க வேண்டிய குணங்கள் எவை?

அது உருக்கமுள்ளதும், பலனுள்ளதுமாயிருக்க வேண்டும்.


9. நமது நேசம் எப்படி உருக்கமுள்ளதாயிருக்கும்? 

(1) நமதாண்டவர் மனுக்குலத்தின்பேரில் கொண்டிருக்கிற அணைகடந்த நேசத்தை அடிக்கடி நினைத்து, வாழ்த்தி, புகழ்ந்து, நேசத்துக்குப் பிரதிநேசம் காண்பித்து, அவருடைய நேசத்துக்கு இருப்பிடமும், அடையாளமுமான ஆராதனைக்குரிய அவருடைய மனுUக இருதயத்திற்குத் தேவ ஆராதனை செய்து நமஸ்கரிப்பதாலும்,

(2) அவரது தேவ இலட்சணங்களைத் தோத்தரிப்பதாலும்,

(3) மனுக்குலம் திரு இருதயத்திற்கு வருவிக்கும் நிந்தை அவமானங்களினிமித்தம் விசனப்படுவதாலும், நமது நேசம் உருக்கமுள்ளதாயிருக்கும்.


10. நமது நேசம் பலனுள்ளதாயிருக்கும்படியாகச் செய்ய வேண்டியதென்ன?

(1) தேவ கற்பனைகளை அநுசரிக்கிறது.  “நீங்கள் என்னைச் சிநேகித்தால், என் கற்பனைகளை அநுசரியுங்கள்” (அரு.14:15).  ஆகையால் பாவத்தை விலக்கி தேவ இஷ்டப்    பிரசாத அந்தஸ்தில் நிலைகொண்டிருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.

(2) சகலத்தையும் அற்பமானவைகளை முதலாய், தன்னிடமுள்ள நேசத்தைக் காண்பிக்கும் நோக்கத்தோடு செய்கிறது.

(3) தனக்கு வரும் எண்ணிறந்த துன்பம் வருத்தங் களையும், சலிப்பு சஞ்சலங்களையும், தேவ சித்தத்திற்கு அமைந்து தைரியத்தோடு ஏற்றுக் கொண்டு, திரு இருதயத்துக்குப் பாத காணிக்கையாக வைக்கிறது.

(4) சேசுநாதருக்குப் பிரியப்பட வேண்டுமென்கிற ஆசையினாலே, தனது அந்தஸ்துக்குரிய கடமைகளைச் சரியாய் நிறைவேற்றுகிறது.

(5) தன்னையும், தனது குடும்பத்தையும் முழுதும் ஒப்புக்கொடுத்து, திரு இருதய அரசாட்சியைக் குடும்பத்தில் ஸ்தாபிக்கிறது.

(6) செப அப்போஸ்தல சபையில் தன் பெயரை எழுதி வைத்து, அந்தச் சபையின் ஒழுங்குப் பிரகாரம் நடக்கிறது.

(7) தானும், மனிதர்களும் தவறி திரு இருதயத்தை நோகச் செய்திருக்கிறபடியால், பாவங்களுக்கும், குற்றங்களுக்கும் பரிகாரம் செய்கிறது.

(8) சேசுநாதருடைய நேசம், விசேஷமாய்த் தேவ நற்கருணையில் உச்சி நிலையை அடைந்திருக்கிறபடியால், அதன் பேரில் பக்தி கொண்டிருந்து, அதை அடிக்கடி சந்தித்து, உட்கொள்ளுவதோடு, திவ்விய நற்கருணை ஆசீர்வாதத்திற்கும், சுற்றுப் பிரகாரத்திற்கும் போகிறது.


11. திரு இருதய பக்தியினால் விளையும் பலன்கள் எவை? 

தமது இருதய வணக்கத்தைப் பக்தியாய் அநுசரிக்கும் கிறீஸ்துவர்களுக்கு சேசுநாதர் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார்.  அவைகளையெல்லாம் எடுத்துக் கூறுவது முடியாத காரியம்.  அவைகளில் சீவிய அந்தஸ்துக்கு வேண்டிய வரப்பிரசாதம், குடும்பத்தில் சமாதானம், கஷ்ட துன்பங்களில் ஆறுதல், பாவிகளுக்கு இரக்கம், புண்ணியத்தில் சுறுசுறுப்பு, சீவிய நாட்களல் விசேஷமாய்ச் சாகும் வேளையில் தஞ்சம், புகலிடம் முதலியவைகளே முக்கியமானவைகள்.


12. நமதாண்டவர் கொடுத்த வாக்குத்தத்தங்களில் பிரதான மானது யாது? 

“மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் ஒன்பது கிழமைகள் விடாமல் நன்மை வாங்குகிறவர்கள் சாகும்போது பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு சாகும் வரம் அளவில்லா பெலனுள்ள நமது இருதயத்தின் சிநேகம் கொடுக்குமென்று அவ்விருதயத்திலுள்ள இரக்கமிகுதியால் வாக்குத்தத்தம் கொடுக் கிறோம்.  இப்படிச் செய்பவர்கள் நமது சத்துருக்களாலாவது, தேவ திரவிய அநுமானங்களின்றியாவது சாகவே மாட்டார்கள்.  அவர்கள் சாகும் வேளையில் நமது திரு இருதயம் அவர்களுக்கு நிச்சயமான அடைக்கலமாயிருக்கும்” என்று பற்பல சமயத்தில் சேசுநாதர்சுவாமி திருவுளம்பற்றினார்.



சேசுவின் திரு இருதயப் பக்தி

திரு இருதயத்தின் 12 வாக்குறுதிகள்

திரு இருதய அரசாட்சியை நிறுவும் வகை

திரு இருதயத்துக்கு குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் ஜெபம்

திரு இருதயத்தை நோக்கி மன உச்சாரணம்

திரு இருதயத்திற்கு தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

திரு இருதயத்திற்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

சேசுவின் திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக் கொடுக்கும் ஜெபம்

கிறீஸ்து இராஜாவுக்கு ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

திரு இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரச் செபம்

திரு இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரச் செபம் (11-ம் பத்திநாதர்)

சேசுவின் திரு இருதய நவநாள் ஜெபம்

சேசுவின்திரு இருதய ஜெபமாலை

திரு இருதயத்தின் பிரார்த்தனை



முதற் பாகம் முற்றிற்று.