1. சாபம் ஆவதென்ன?
தனக்காவது, பிறருக்காவது, அல்லது எந்தச் சிருஷ்டிக்காவது, தீமை உண்டாகவேண்டுமென்று ஆசித்துக் கோபத்தோடு அல்லது வர்மத்தோடு சொல்வது சாபமாம்.
2. ஒரு சில உதாரணங்களைச் சொல்லு.
பேதி உன்னை வாரிக்கொண்டு போக; கொள்ளை நோயில் சாக; தாலி அறுக்க; நாசமாய்ப் போக; பிசாசாய்ப் போக; மண்ணாய்ப் போக; நின்ற நிலையில் சாக; உன்னைக் கொள்ளை கொண்டு போகாதா; என்ற இவை முதலிய தீய வார்த்தைகள்.
3. சாபம் இடுகிறது பாவமா?
மனிதர்களை உண்டுபண்ணினவர் கடவுளாதலால், அவர்களைச் சபிக்கிறது ஒருவிதமாய்ச் சர்வேசுரனைச் சபிக்கிறது போல் இருக்கிறபடியால், அப்படிச் செய்வது பாவமாகும்.
4. அது எப்பேர்ப்பட்ட பாவமாகும்?
(1) முழு அறிவோடும், கவனத்தோடும், மனதோடும், கனமான தின்மை நேரிடவேண்டுமென்று சபித்தால், சாவான பாவம்.
(2) யோசிக்காமல் சாபமான வார்த்தைகள் சும்மா சொன்னால், அற்பப்பாவம்.
(3) காரணமின்றிச் சிருஷ்டிகளைச் சபிப்பது சாதாரணமாய் அற்பப் பாவம்.
5. கிறீஸ்தவர்கள் சாபம் இடாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டுமா?
சாபம் இட நாம் பயப்படவேண்டும். ஏனென்றால், அதனால் பெரிய ஆபத்து உண்டாகலாம். வழக்கமாய்த் தன்னைத்தானே சபிக்கிறவன் கடைசியாய் அவநம்பிக்கைப்பட்டுத் தற்கொலை செய்வான். மேலும் அது சர்வேசுரனுக்கு விரோதமான துரோகமுமல்லாமல், அவருடைய கோபாக்கினையால் அது அநேக முறை பலிக்கிறதும் உண்டு. ஆகையால் விசேஷமாய்த் தாய் தகப்பன் மார்கள் தங்கள் பிள்ளைகளை ஒருக்காலும் சபிக்க வேண்டாம். ஒரு தாயானவள் தன் மகள் ஒரு பொருளைப் தொலைத்து விட்டதன் காரணமாக மிகவும் கோபித்து, பசாசு உன்னைப் பிடிக்கக் கடவதென்று சொன்ன மாத்திரத்தில், அந்தச் சாபத்தின் பலனாகப் பசாசு அந்தப் பெண்ணைப் பிடித்துக்கொண்டது என்று சரித்திரத்தில் வாசித்துப் பார்க்கலாம். “தாயின் சாபமோ பிள்ளைகள் குடும்பங்களின் அஸ்திவாரத்தைப் பிடுங்கிவிடும்” என்று வேதாகமத்தில் சொல்லியிருக்கிறது (சர். பிர. 3:11).
சரித்திரம்
அர்ச். அகுஸ்தீன் சொல்லும் சரித்திரமாவது: ஓர் ஊரில் ஒரு பெரிய குடும்பமிருந்தது. தாய் தகப்பனான இவர்களுக்கு 10 பிள்ளைகள் இருந்தார்கள். ஒருநாள் மூத்த குமாரன் தன் தாயைத் திட்டினதுமல்லாமல் அவளை அடிக்கவும் கை ஓங்கத் துணிந்த சமயத்தில் தாயானவள், மற்றப் பிள்ளைகளில் ஒருவனும் தனக்கு உதவியாக வராதபடியால் துக்கித்து, மூத்தவனுடைய துர்நடத்தையால் கோபாவேசம் கொண்டு தலைவிரிகோலமாய் ஒப்பாரியுடன் கோவிலுக்குச் சென்று, தீர்த்தத் தொட்டியைப் பிடித்த வண்ணமாய்த் தான் பெற்ற பிள்ளைகள் எல்லோருக்கும் வியாதியுண்டாகி, ஊரைவிட்டு அந்நிய தேசத்தில் நாடோடிகளாய் அலைந்து திரியும்படி அவர்களைச் சபித்தாள். அதிசீக்கிரத்தில் மூத்த மகனுக்கு ஒருவித நடுக்க வியாதி உண்டாகி சொல்லமுடியாத வாதைப்பட்டு வந்தான். மறு வருஷத்துக்குள் மற்றப் பிள்ளைகளுக்கும் அதே வியாதி கண்டு, பொறுக்க முடியாத வேதனை அனுபவித்து வந்தார்கள். தன் பிள்ளைகள் இவ்வாறு அவஸ்தைப்படுவதையும், ஊராரால் தனக்கு வரும் நிந்தனையையும் பொறுக்கக் கூடாதவளாய் அந்தத் தாய் நான்று கொண்டு செத்தாள். பிள்ளைகளும் தங்கள் தாயாருக்குச் சம்பவித்த நிற்பாக்கியத்தினிமித்தம் ஆறாச் சஞ்சலம் கொண்டு தங்கள் ஊரை விட்டு நாடோடிகளாய்த் திரிந்தார்கள். சில காலத்துக்குப் பின் மூத்தவன் இத்தாலியா தேசத்துக்குப் போய் அர்ச். லவுரேஞ்சியார் வேண்டுதலால் குணப்பட்டான். ஆறாவது பையன் அர்ச். அகுஸ்தீனுடைய ஆலோசனைப்படி அர்ச். இராயப்பருடைய திருக்கல்லறையைச் சந்தித்த மாத்திரத்தில் சுகம் அடைந்தான். மற்றப் பிள்ளைகளோவென்றால், சொல்ல முடியாத வேதனைப்பட்டு, கடைசியிலே தகாதவிதமாய் இறந்துபோனார்கள். (னி.மூ.னி. V. ஹிலி. 314).