எனவே, (1) கடவுளுக்குத் தகுதியுள்ள ஆராதனையையும், மகிமையையும் செலுத்தவும், (2) மனிதனின் பாவங்களுக்குத் தம் திருப்பாடுகள் மற்றும் திருமரணத்தின் மூலம் பரிகாரம் செய்யவும், (3) மெய்யான சர்வேசுரனைப் பற்றிய மெய்யான அறிவை மனிதனுக்குத் தரவும் தேவ திருச்சுதன் ஒரு மனிதனாக உலகில் அவதரிக்க வேண்டும் என்று தெய்வீக மனது தீர்மானித்து விட்டது.
நாம் ஏற்கனவே குறித்துள்ளது போல், அவர் ஒரு பெண்ணிடமிருந்து பிறக்காமல், தம் வல்லமையைக் கொண்டு நேரடியாக ஒரு முழு மனிதனாக பூலோகத்திற்கு வந்திருப்பார் என்றால், ஒரு மனிதனாக அவர் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்க மாட்டார். எனவே, அவரை இவ்வுலகில் ஒரு மனிதக் குழந்தையாகப் பெற்றெடுக்க வல்ல தாய் ஒருவர் அவசியம் தேவை.
சர்வேசுரனுக்குத் தாயாராகப் போகிற இந்த மகா உன்னத சிருஷ்டி எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது?
இதோ அதிசயம் பாருங்கள்: ஒரு மகன் தம்முடைய தாயாரை “வடிவமைக்கப்” போகிறார்! என் தாயை உருவாக்கும் வல்லமை ஏதோ ஒரு விதத்தில் என் உற்பவத்திற்கு முன்பே எனக்குத் தரப் பட்டிருக்குமானால், என் தாய் எப்பேர்ப்பட்ட பேரழகியாகவும், எப்பேர்ப்பட்ட பெரும் புனிதையாகவும், சகல புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டிருப்பேன்!
இங்கே, இதோ, சர்வேசுரன் தம்முடைய தாயாக இருக்கப் போகிற அந்த அதிசய சிருஷ்டியின் ஒவ்வொரு நுட்பமான அம்சத்தையும் திட்டமிடுவதை மனக்கண் முன் பாருங்கள்!
இந்த உன்னத சிருஷ்டியாகிய பெண் தன் திருவுதரத்தில் தாங்க இருப்பவர் எப்படிப்பட்டவர் என்று தமத்திரித்துவ சத்தியத்தைப் பற்றிய கட்டுரைகளில் ஓரளவுக்கு நாம் பார்த்திருக்கிறோம். இப்போது சற்று வித்தியாசமான ஒரு முறையில் சர்வேசுரனுடைய அளவற்ற வல்லமையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.
“மனிதர்கள் பேசியிருக்கும் ஒவ்வொரு வீண் வார்த்தையின் பேரிலும் தீர்வை நாளில் கணக்குக் கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் உன் வார்த்தைகளைக் கொண்டே நீ நீதிமானாக்கப்படுவாய்;, அல்லது உன் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளியென்று தீர்வையிடப் படுவாய்” என்று நம் ஆண்டவர் நம்மை எச்சரித்திருக்கிறார் (மத்.12:36,37).
சற்று யோசித்துப் பாருங்கள்: மனிதர்கள் பேசியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும், எண்ணியிருக்கும் ஒவ்வொரு எண்ணமும், செய்திருக்கும் ஒவ்வொரு செயலும், அல்லது செய்யாமல் விட்டு விட்ட ஒவ்வொரு கடமையும் ஒன்று கூட தவறாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிற தீர்வையின் புத்தகம் எது? அது சர்வேசுரனுடைய தெய்வீக மனதேயன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
இந்த வாக்கியங்களை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் பூமியில் எத்தனை கோடி நினைவுகளும், வார்த்தைகளும், செயல்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, ஆதாம் தொடங்கி, கடைசி மனிதன் வரை மொத்தம் எத்தனை கோடானகோடி காரியங்கள் இந்த மனித புத்திக்கெட்டாத அந்த தெய்வீக மனதில் பதிவு செய்யப்பட்டிருக்கும், அவை ஒவ்வொன்றிற்கும் உரிய சம்பாவனையை அல்லது தண்டனையை அளவி;ட்டுத் தருகிற நம் கற்பனைக்கும் எட்டாத அந்த அதிசயத்திற்குரிய தெய்வீக மனது எப்பேர்ப்பட்டதாக இருக்கும்!
“வெறும் வார்த்தையால் வானங்களை ஸ்தாபித்தவரும்”; (காண்க. சங்.32:6), தம் குரலாலேயே கேதுரு மரங்களை முறித்தெறிபவருமான (காண்க. சங். 28:4) சர்வேசுரனை “வெறும் வெளித் தோற்றம் போல் மாயமாய்க் கடந்து செல்கிற மனிதன்” (காண்க.சங்.38:6) எப்படி அறிவான்?
இவ்வாறு எதனுள்ளும் அடங்காதவரும், எல்லாவற்றையும் தம்முள் அடக்கியுள்ளவருமான சர்வேசுரனை, அர்ச். தஸ்நேவிஸ் மாதாவின் பிரார்த்தனையில் நாம் பாடுவது போல, “பரலோக, பூலோக, பாதாள லோகமென்னும் திரி(மூன்று) லோகங்களிலும் அடங்காத தேவாதி தேவனை, திருவுதரத்தில் அடக்கித் தாங்க” இருக்கிற அந்த ஆச்சரியத்திற்குரிய “தேவ மாதா” எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கப் போகிறார்கள்!
தேவ சுதனானவரின் இரட்சணியச் செயல் அன்றி, தன்னைத் தானே (பாவத்திலிருந்தும், நரகத்திலிருந்தும்) விடுவித்துக்கொள்பவன் எவனுமில்லை!
இந்த அதிசயத்தைத் தியானிக்குமுன், மற்றொரு முக்கியமான கருத்தைப் பற்றி நாம் சற்று சிந்திப்போம். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன், எங்கள் ஞான உபதேச வகுப்பு ஒன்றில், பத்து வயதுச் சிறுமி ஒருத்தி எங்களிடம் ஒரு கேள்வி கேட்டாள்: “மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன் பரிகாரம் செய்வதுதானே முறை? இதற்காகக் கடவுள் மனிதனாக வேண்டுமா?” என்பதுதான் அந்தக் கேள்வி.
ஒரு சிறுமியிடமிருந்து இத்தகைய ஒரு கேள்வி வந்தது எங்களுக்கு வியப்பாக இருந்தது என்றாலும், தங்கள் கிறீஸ்தவ வேதத்தை நன்கு அறிந்த கத்தோலிக்கர்களுக்கு இது குழந்தைத்தனமான ஒரு கேள்வியாகத்தான் தோன்றும்.
மனிதன் தன்னுடைய பாவத்திற்குப் பரிகாரம் செய்ய முடியுமா? அதுவும் கடவுளுக்குத் தகுதியான முறையில் பரிகாரம் செய்து அதைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க அவனால் முடியுமா? முடியாது என்று தாவீதரசர் கூறுகிறார்:
“மனிதன் தன் குற்றத்திற்கே கூட தேவனுக்குப் பரிகாரம் செய்ய சக்தியற்றவன்;. தன் ஆத்துமத்தை இரட்சித்துக்கொள்ளத் தக்க விலையைக் கடவுளுக்குத் தர அவனால் இயலாது. அவன் நித்தியத்திற்கும் துன்பப்பட்டு, அப்படியே என்றென்றும் ஜீவிக்க வேண்டியவனாயிருப்பான்” (சங்.48:7).
ஆம், மனிதன் பாவம் செய்தபின் கடவுள் ஒரு மீட்புத் திட்டமின்றி அவனைக் கைவிட்டிருப்பார் என்றால், மனிதன் “(நரகத்தில்) நித்தியத்திற்கும் துன்பப்பட்டு, கொடூர வாதைகளில் அப்படியே என்றென்றும் ஜீவிக்க வேண்டியவனாகவே இருந்திருப்பான்.”
ஏனெனில், கடவுளுக்குத் தகுதியுள்ள ஒரு மாசற்ற இரத்தத்தை அவருக்குக் காணிக்கையாகச் செலுத்த வல்ல மனிதன் ஒருவனுமில்லை.
பரிசுத்த வேதாகமம் இதைப் பல முறை அப்பட்டமாக வலியுறுத்திக் கூறுகிறது: “சகலரும் கெட்டுப் போனார்கள்! அவர்களுடைய எண்ணங்கள் அக்கி;ரமம் நிறைந்தவை! அவர்களில் நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன் கூட இல்லை” (சங்.13:1).
“எல்லோரும் நல்வழியை விட்டுப் பிசகிப் பயனற்றுப் போனார்கள். நன்மை செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை” (சங்.13:3). “எல்லோரும் பாவம் செய்து, கடவுளின் மகிமையற்றவர்கள் ஆனார்கள்…” (உரோ.3:23).
“நமக்குள் பாவமில்லை என்போமானால், நம்மையே நாம் மோசம் போக்கிக் கொள்ளுகிறோம். சத்தியமும் நம்மிடத்தில் இராது” (1அரு.1:8).
இப்போது ஒரு கேள்வி எழலாம்: “இவை பொதுவாகச் சொல்லப்பட்ட வாக்கியங்கள்தான். நிச்சயமாக எல்லா மனிதர்களும் கெட்டவர்கள் என்று சொல்ல இயலாது. பழைய ஏற்பாட்டிலும் கூட, ஏனோக், நோவே, ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு, ஜோசேப்பு, சாமுவேல், எலியாஸ், இசையாஸ், எரேமியாஸ், எசேக்கியேல், தானியேல் என்று எத்தனையோ பரிசுத்தமான ஆத்துமங்கள் இருந்தார்களே?”
ஒரு வாதத்திற்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கர்மப் பாவமே செய்யாதவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவர்களும் கூட தங்களை மட்டுமே முதலாய் இரட்சிக்க இயலாதவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.
ஏனெனில் ஆதாமின் பாவத்தின் காரணமாக, உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஜென்மப் பாவத்தோடு பிறக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். ஒவ்வொரு மனிதனுடைய இரத்தமும் சர்வேசுரனுடைய திருச்சமூகத்திற்கு முன்பாக ஜென்மப் பாவ அசுத்தத்தால் நிரம்பி, அவருடைய திருக்கண்களுக்கு அருவருப்பானதாகவும், பசாசுக்கு அடிமைப்பட்டதாகவுமே இருக்கிறது.
இந்நிலையில் மனிதனின் பாவத்தால் கறைபட்ட இரத்தம் கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கப்படும் என்றால், அது தெய்வீக மகத்துவத்திற்குச் செய்யப்படும் ஒரு பெரும் அவசங்கையாகவும், தேவத் துரோகமாகவுமே இருந்திருக்கும்.