முந்தாநேற்று இரவில் நான் கண்ட ஒரு கனவை இப்போது நான் உங்களுக்குச் சொல்வேன். உங்கள் எல்லோரோடும், எனக்குத் தெரியாத இன்னும் பலரோடும் நான் நடந்து கொண்டிருந்தேன். இளைப்பாற்றிக்காக நாம் ஒரு திராட்சைத் தோட்டத்தில் நம் நடையை நிறுத்தினோம்.
நீங்கள் ஒவ்வொருவரும் திராட்சைகள், அத்திப்பழங்கள், பீச் பழங்கள், ப்ளம் கனிகள் ஆகியவற்றைப் பறித்து, அவற்றை உண்பதற்காக அங்குமிங்குமாக சிதறிப் போனீர்கள். நானும் உங்களோடு இருந்து, நீங்கள் உண்பதற்காக திராட்சை களையும், அத்திகளையும் பறித்துக் கொண்டிருந்தேன்.
நான் கனவு கண்டு கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. அது கனவுதான் என்பது பற்றி நான் ஏனோ சற்று வருத்தப்பட்டேன். “எப்படியிருந்தாலும், சிறுவர்கள் திருப்தியாக உண்ணட்டும்” என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். திராட்சைச் செடி வரிசைகளின் ஊடாக, திராட்சைக் கிளை கத்தரிப்பவரை நம்மால் காண முடிந்தது.
திருப்தியாக சாப்பிட்ட பிறகு, திராட்சைச் செடிகளின் வழியாக நாம் நம் நடையை மீண்டும் தொடர்ந்தோம். ஆனால் அந்தத் திராட்சைத் தோட்டம் நெடுக தோண்டப்பட்டிருந்த ஆழமான பள்ளங்களைக் கடந்து செல்வது நமக்குக் கடினமானதாக இருந்தது.
அதிக திடகாத்திரமான சிறுவர்கள் எப்படியோ ஒரு வரிசையிலிருந்து மறு வரிசைக்குத் தாவி விட்டனர். ஆனால் சிறு பையன்களால் அப்படித் தாண்ட முடியவில்லை. அவர்கள் வழக்கமாகவே ஓர் ஆழமான பள்ளத்தினுள் தடுக்கி விழுந்தார்கள்.
அவர்களுடைய பரிதாபமான நிலையைக் கண்டு இரக்கப்பட்டு, இந்தப் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா என்று நான் சுற்றிலும் தேடினேன். அப்போது திராட்சைத் தோட்டத்திற்கு இணையாக ஓர் அசுத்தமான சாலை செல்வதை நான் கவனித்தேன். அகவே உங்கள் எல்லோரோடும் அந்த சாலையை நோக்கிச் சென்றேன், ஆனால் திராட்சைத் தோட்ட ஊழியர் என்னைத் தடுத்து நிறுத்தினார்.
அவர் என்னிடம்: “நான் சொல்வதைக் கேளும். இந்த சாலையை விட்டு விலகியே இரும். அது மலைப்பாங்கானது, சேறானது, முட்கள் நிறைந்தது, வண்டிச் சக்கரங்களால் உண்டான பள்ளங்கள் நிறைந்தது. அதில் செல்வது முற்றிலும் சாத்தியமற்றது. நீர் முதலில் சென்ற பாதையிலேயே தொடர்ந்து செல்லும்” என்றார் அவர்.
“நானும் அதைத்தான் விரும்புகிறேன், ஆனால் இந்தச் சின்னஞ்சிறு பையன்களால் அந்தப் பள்ளங்களைக் கடக்க முடிய வில்லையே!” என்று நான் பதிலளித்தேன்.
“அது ஒரு பிரச்சினையே இல்லை . பெரிய பையன்கள், சின்னப் பையன்களைச் சுமந்து செல்லட்டும். அப்போதும் கூட அவர்களால் வரிசைக்கு வரிசைதாவிச் செல்ல முடியும்” என்று அவர் கூறினார்.
அந்தப் பதிலால் திருப்தியடையாதவனாக, நான் அனைத்து சிறுவர்களோடும் அந்த அசுத்தமான சாலையைச் சென்றடைந்தேன் ஆனால் அது உண்மையில் பல தடைகள் நிறைந்தது, கடக்கப்பட முடியாதது என்று கண்டுபிடிக்கத்தான் என்னால் முடிந்தது.
ஆகவே நான் சுவாமி ஃப்ரான்செஸியாவை நோக்கித் திரும்பி, “நாம் பசாசுக்கும், ஆழமான நீலக்கடலுக்கும் மத்தியில் இருக்கிறோம்” என்றேன். இந்த அசுத்தமான சாலைக்கு இணையாகச் செல்கிற ஒரு பாதை நெடுக, அந்தப் பள்ளங்களைக் கடந்தபடி சென்று கொண்டிருப்பதைத் தவிர நமக்கு வேறு வழி இருக்கவில்லை.
இறுதியாக திராட்சைச் செடிகளின் கடைசி வரிசையை நாம் அடைந்த போது, ஓர் அடர்த்தியான முள்வேலி நம்மை எதிர் கொண்டது. மிகுந்த சிரமத்தோடு ஒரு பாதையைக் கடந்து, நாம் ஓர் உயரமான கரையிலிருந்து பசுமையானதும், ஆங்காங்கே மரங்கள் இருந்ததுமான ஒரு புல்வெளியை நோக்கி இறங்கிச் சென்றோம்.
அதன் நடுவில் நான் நம் ஆரட்டரியைச் சேர்ந்த இரண்டு முன்னாள் மாணவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு, எனக்கு வாழ்த்துச் சொல்ல என்னிடம் வந்தனர். நாங்கள் சற்று நேரம் உரையாடினோம்.
அதன்பின் அவர்களில், இரண்டு பறவைகளைத் தன் கையில் பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் என்னிடம், “நான் என்ன கண்டு பிடித்திருக்கிறேன் என்று பாரும்! இவை அழகானவை இல்லையா?” என்று கேட்டான்.
“இவை என்ன பறவைகள்?” என்று நான் கேட்டேன். “இது கௌதாரி, இது காடை!” “இந்தக் கௌதாரி உயிரோடு இருக்கிறதா?”
“நிச்சயமாக!” என்ற அவன் ஒரு மிக அழகிய இறகுகளுள்ள சிறு பறவையை என் கைகளில் வைத்தான்.
“அது தானாகவே இரை உண்ண முடியுமா?”
“முடியும். இப்போதுதான் அது தானாகவே இரை உண்ணத் தொடங்கியிருக்கிறது.”அதை இரை உண்பதைக் கவனித்துக் கொண் டிருக்கையில், அதன் அலகு நான்கு பகுதிகளாகப் பிளவுபட்டிருப் பதை நான் கவனித்தேன். அதனால் வியப்படைந்தவனாக, நான் அந்தச் சிறுவனிடம் அதுபற்றிக் கேட்டேன்.
“உங்களுக்குத் தெரியாது என்று சொல்கிறீர்களா? அதன் அலகிலுள்ள நான்கு பிரிவுகளும் அந்தக் கௌதாரி எதைக் குறிக் கிறதோ, அதைத்தான் குறிக்கின்றன."
“எனக்குப் புரியவில்லை .”
“நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் நன்கு படித்தவர். கௌதாரிக்கு இலத்தின் வார்த்தை என்ன ?”
“பெர்திக்ஸ் (Perdix).” “சரி, அப்படியானால் உமக்கு அது புரிந்து விட்டது!”
“இல்லை. இன்னும் எனக்கு அது புரியவில்லை! அது என்ன வென்று சொல்.”
“சரி, நான் சொல்கிறேன். பெர்திக்ஸ் என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தும் எதைக் குறிக்கின்றன என்று சிந்தித்துப் பாரும்:
P: Perseverantia - நிலையாயிருத்தல்.
E : Aeternitas te expectat - நித்தியம் உனக்காகக் காத்திருக்கிறது.
R: Referet unusquisque secundum opera sua prout gesit: sive bonum, sive malum - ஒவ்வொருவனும் நல்லவையும், தீயவையுமான தன் ஒவ்வொரு செயலுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும்.
D: Dempto nomine - அவன் யாராக இருந்தாலும், எவ்வளவு உலகப் புகழ், மகிமை, அறிவு அல்லது செல்வமுள்ளவனாக இருந் தாலும் சரி.
1: Ibit - அவன் போவான். இப்போது நான்காகப் பிளவு பட்ட அலகின் பொருள் என்னவென்றும் உங்களுக்குத் தெரியும். அவை நான்கு கடைசிக் காரியங்கள்.”
“புரிகிறது - ஆனால் அந்தக் கடைசி எழுத்து X எதைக் குறிக்கிறது?”
“உங்களால் ஊகிக்க முடியவில்லையா? நீங்கள் கணிதம் கற்றதில்லையா?”
“சரிதான்! X ஓர் அறியப்படாத அளவைக் குறிக்கிறது!”
“நன்றாகச் சொன்னீர்கள்! இப்போது இப்போது அளவு என்ற வார்த்தைக்குப் பதிலாக இறுதிக்கதி என்ற வார்த்தையைப் பயன்படுத் துங்கள். அப்போது “அறியப்படாத இறுதிக்கதி” என்று வருகிறது. 'இபித் இன் லோக்கும் சூவும்' - அவன் தன் அறியப்படாத இறுதிக் கதிக்குப் போவான்.”
பிரமித்துப் போனாலும், இந்த விளக்கத்தில் முழுத் திருப்தி யடைந்தவனாக, நான் அவனிடம்: “இந்தக் கௌதாரியை நான் வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டேன்.
“தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்று அவன் பதில் தந்தான். “இந்தக் காடையையும் பார்க்க விரும்புகிறீர்களா?”
“ஆம், அதையும் பார்க்கிறேன்.” அவன் அதை என்னிடம் தந்தான். அது ஒரு மிக அழகிய தோற்றமுள்ள பறவையாகத் தோன்றியது. ஆனால் அதன் இறக்கை களை நான் உயர்த்தியபோது, அது புண்களால் நிறைந்திருந்ததை நான் கண்டேன். (எவ்வளவு அதிகமாக நான் அதைப் பரிசோதித் தேனோ) அவ்வளவு அதிகமாக அது அருவருப்பானதாகவும், சீழ்பிடித்ததாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அது மாறியது.
“என்ன நடந்தது?” என்று நான் சிறுவனிடம் கேட்டேன்.
“நீங்கள் ஒரு குரு. பரிசுத்த வேதாகமத்தைப் படித்திருக் கிறீர்கள். இருந்தும் உங்களுக்குப் புரியவில்லையா? இஸ்ராயேலர் வனாந்தரத்தில் கடவுளை எதிர்த்து முறுமுறுத்தபோது, கடவுள் அவர்களுக்குக் காடைப்பறவைகளின் பெருங்கூட்டம் ஒன்றை அனுப்பினார் என்பது உங்களுக்கு நினைவில்லையா?
இஸ்ராயேலர் அவற்றை உண்டு விருந்து கொண்டாடினார்கள். ஆனால் அப்பறவைகளின் இறைச்சியை அவர்கள் மென்று கொண்டிருக்கையிலேயே, அவர்களில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடவுள் தண்டித்தார். போஜனப் பிரியம் வாளை விட அதிக ஆபத்தானது என்றும், அதுவே மிகப் பெரும்பாலான பாவங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்றும் காடைப்பறவை உங்களுக்குச் சொல்கிறது.”
இந்த விளக்கத்திற்காக நான் அவனுக்கு நன்றி கூறினேன்.
இதனிடையே, ஏராளமான வேறு கௌதாரிகளும், காடைகளும் புதர்களின் மீதும், மரங்கள் மற்றும் புல்வெளியின் மீதும் தோன்றின. நீங்கள் அவற்றைப் பிடித்து உணவாக்கிக் கொண்டீர்கள். அதன்பின் நாம் மீண்டம் நம் நடையைத் தொடர்ந் தோம். கௌதாரிகளை உண்டவர்கள் பலமுள்ளவர்களாக உணர்ந்து, என்னைப் பின்சென்றார்கள்; அதற்குப் பதிலாக காடைகளை உண்டவர்கள் அந்தப் பள்ளத்தாக்கிலேயே அலைந்து திரிந்தார்கள், அங்குமிங்கும் சிதறிப் போனார்கள். நான் அதன்பின் அவர்களைப் பார்க்கவேயில்லை.
ஜனவரி 18 அன்று டொன் போஸ்கோ சிறுவர்களிடம் பின்வருமாறு பேசினார்:
அன்றிரவு நான் உங்களுக்குச் சொன்ன கனவைப் பற்றி இன்னும் அதிகம் கேட்க நீங்கள் விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும். காடையும் கௌதாரியும் எவற்றைக் குறிக்கின்றன என்பதை மட்டும் நான் வெளிப்படுத்துவேன். சுருங்கச் சொல்வதானால், கௌதாரி புண்ணியத்தையும், காடை பாவத்தையும் குறிக்கிறது.
அழுகிய புண்களைத் தன் இறக்கைகளின் கீழ் மறைக்கும் காடையின் அழகிய தோற்றங்கள் அசுத்ததனத்தைக் குறிக்கின்றன. காடையின் அழுகிய நிலையையும் மீறி அதைப் பேராசையோடு உண்டவர்கள் பாவப் பழக்கங்களுக்குத் தங்களைக் கையளித்தவர்கள் ஆவர். ஆனால் கௌதாரியை உண்டவர்கள் நேசிப்பவர்களும், புண்ணியத்தைப் பயிற்சி செய்பவர்களும் ஆவர்.
ஒரு கையில் காடையையும், மறு கையில் கௌதாரியையும் பிடித்துக் கொண்டிருந்தாலும், குறிப்பாக காடையை உண்டவர் களாகிய சிறுவர்களை நான் பார்த்தேன். இந்தச் சிறுவர்கள் புண்ணியத்தின் அழகை அறிந்திருக்கிறார்கள், ஆனால் நல்லவர் களாவதற்குக் கடவுளால் தரப்படும் வழிகளைப் பயன்படுத்த இவர்கள் மறுக்கிறார்கள்.
இவர்களுக்குப் பதிலாக, மற்றவர்கள் கௌதாரியை உண்டாலும், காடையை ஏக்கத்தோடு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் புண்ணியத்தின் பாதையில், அரைமனதோடு, கட்டாயத்தின் காரணமாக நடப் பவர்கள். தங்கள் மனநிலையை இவர்கள் மாற்றிக் கொண்டால் தவிர, கூடிய விரைவில் இவர்கள் வீழ்ச்சியடைவார்கள்.
கௌதாரியை உண்ட சிறுவர்களுக்கு முன்னால் காடைப் பறவைகள் தொடர்ந்து இறக்கைகளை அடித்துக் கொண்டிருந் ததையும், ஆனால் இந்தச் சிறுவர்கள் அவற்றை மிகச் சாதாரணமாக அலட்சியம் செய்து விட்டதையும் நான் கவனித்தேன். இவர்கள் புண்ணியத்தைப் பின்சென்று, பாவத்தை நிந்தித்து வெறுத்துத் தள்ளுபவர்கள்.
இவர்களுக்குப் பின் கௌதாரி, காடை ஆகிய இரு பறவைகளையும் உண்ட சிறுவர்கள் இருந்தார்கள். இவர்கள் பாவத்திலிருந்து புண்ணியத்திற்கும், புண்ணியத்திலிருந்து பாவத் திற்கும் மாறி மாறி ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல என்று நம்பி தங்களையே முட்டாள்களாக்கிக் கொண்டிருப்பவர்கள்.
“எங்களில் யார் எதை உண்டோம்?” என்று நீங்கள் கேட்கலாம். நான் நேற்றே பலருக்கு சொல்லி விட்டேன். மீதமுள்ளவர்கள் என்னிடம் வந்தால், நான் அவர்களுக்கும் சொல்வேன்.
மேலே விவரிக்கப்பட்ட இந்தக் கனவைப் பற்றி நாம் இப்போது என்ன சொல்வோம்? டொன் போஸ்கோ, தம் வழக்கப்படியே இதை முழுவதுமாக விளக்கவில்லை. சிறுவர் களோடு தொடர்புள்ளவற்றையும், எதிர்காலத்தைப் பற்றி அந்தரங்க மான விதத்தில் தாம் அறிந்து கொண்டவற்றையும் சொல்வதோடு அவர் நிறுத்திக் கொள்கிறார். என்றாலும், நாம் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவருடைய வார்த்தைகளை ஆராயும் போது, நாம் அவருடைய கனவுகளில் ஆரட்டரியையும், சலேசிய சபையையும், பொதுவில் துறவற சபைகளையும் காண்கிறோம்.
கௌதாரி: புத்திக்கூர்மையும் சுறுசுறுப்பும் இந்தப் பறவைக்கே உரிய குணங்கள். உண்மையில், கொர்னேலியுஸ் ஆ லாப்பிதே என்பவர், எரேமியாஸ் ஆகமம் 17-ஆம் அதிகாரத்தை விளக்கிக் கூறும்போது, அர்ச். அம்புரோஸின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார் (மடல் 47). அதில் வேட்டைக்காரனின் கண்ணிகளுக்குத் தப்பவும், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கவும் கௌதாரி மிக அடிக்கடி வெற்றிகரமான முறையில் செய்யும் தந்திரங்களை விளக்குகிறார்.
டொன் போஸ்கோ அடிக்கடி தம் மாணவர்களிடம் கூறிய வார்த்தைகள்: ''புத்திக்கூர்மையும் சுறுசுறுப்பும் உள்ளவர்களாயிருங்கள்'' என்பதுதான். இந்த வார்த்தைகள் குறித்துக் காட்டும் காரியம், நித்தியத்தைப் பற்றிய சிந்தனை பசாசின் கண்ணிகளிலிருந்து தப்பும் விதத்தை அவர்களுக்கு அறிவுறுத்தும் என்பதுதான்.
காடை : அசுத்தக் காரியங்களின் அடையாளம். மேலும்: போசனப்பிரியம் தேவ அழைத்தலைக் கொல்கிறது.