1. தேவ ஆளானது ஆத்துமத்துக்குப் பதிவாயிருந்து சேசுநாதருடைய சரீரத்துக்கு உயிர் கொடுக்கவில்லையா?
இல்லவே இல்லை. சரீரமும் ஆத்துமமுமில்லாமல் மனுஷ சுபாவமிருக்க முடியாது. தேவ ஆள் அவருடைய சரீரத்துக்கு உயிர் கொடுத்திருந்தால், சேசுநாதர் மெய்யான மனுஷனாயிருக்க மாட்டார். ஏனெனில் மெய்யான மனுஷனாயிருக்கும்படி சரீரத்துக்கு மனித ஆத்துமம் உயிர்கொடுப்பது முழுவதும் அவசியம். ஆகையினாலே சேசுநாதருக்கு நம் ஆத்துமத்தைப் போல் ஓர் ஆத்துமம் உண்டு.
2. அப்படியானால் அவரது ஆத்துமத்தின் குணங்கள் எவை?
நம்முடையதைப் போல் அவருடைய ஆத்துமமும் ஒன்றுமில்லாமையினின்று சர்வேசுரனால் உண்டாக்கப்பட்டு, அரூபியாகவும், அழிவற்றதாகவும், அறிந்து, விரும்பி, சிநேகிக்கச் சக்தியுடையதாயும் இருக்கிறது. ஆகையால் வேண்டும் வேண்டா மென்கிற மனச்சுயாதீனமுள்ளது. அதாவது தன்னிஷ்டப்படி ஒரு காரியத்தைச் செய்யவும் செய்யாமலிருக்கவும் ஒன்றை விரும்பவும், விரும்பாமலிருக்கவும் மனச் சுதந்தரமுடையது.
3. இந்த மனச்சுயாதீனம் சேசுநாதருக்கு அவசியமாயிருந்ததா?
புண்ணியக் கிரியைகள் செய்யவும் பேறுபலன்கள் அடையவும், மனச்சுயாதீனம் அத்தியாவசியமானது. கட்டாயத்தினால் செய்யப்படும் கிரியை புண்ணியமும் பேறுபலனுமுள்ளதா யிராது. சேசுநாதர் செய்ததெல்லாவற்றையும், பட்டதெல்லாவற்றையும் கட்டாயத்தால் செய்திருந்தால், அவர் அவைகளைக் கொண்டு பேறுபலன் ஒன்றும் அடைந்திருக்க மாட்டார். அவர் பேறுபலன் அடையாதிருந்தால் நம்மை இரட்சித்திருக்க மாட்டார். ஆதலால் நம்மை இரட்சிக்கும்படி நமதாண்டவர் நிறைவேற்றினதெல்லாம் கட்டாயமின்றி, தம் இஷ்டப்படி முழு மனச்சுயாதீனத்தோடு செய்து முடிக்க வேண்டியிருந்தது.
4. அவரிடத்தில் சகல புண்ணியங்களும் இருந்ததா?
தேவ இஷ்டப்பிரசாதம் சகல புண்ணியங்களுக்கும் ஊற்று. சேசுநாதர் தேவ இஷ்டப்பிரசாதத்தைச் சம்பூரணமாய்க் கொண்டிருந்தபடியால் சகல புண்ணியங்களும் அதி உத்தமமான விதமாய் அவரிடத்தில் இருந்தன. ஆனாலும் அவருடைய மேன்மையான தேவ இலட்சணங்களினிமித்தம் சில புண்ணியங்கள் அவரிடத்திலிருந்ததில்லை. அதெப்படியென்றால்: அவருடைய ஆத்துமம் சுதனாகிய சர்வேசுரனுக்குச் சொந்தமானதாய் அவரோடு ஒன்றித்திருந்தபடியால், அவர் இப்பூலோகத்தில் சீவித்தபோது மோட்சவாசிகளைப்போலவே, எப்போதும் தேவ தரிசனை அடைந்திருந்தார். தேவ தரிசனை அடைந்தவர்களிடம், விசுவாசம், நம்பிக்கையயன்கிற புண்ணியங்கள் இருக்க முடியாததினால் அந்த இரு புண்ணியங்கள் அவரிடத்தில் இருந்ததில்லை. மேலும் பாவ மாவது, எவ்வித குற்றமாவது அவரை ஒருபோதும் அணுகாததால் மனஸ்தாபமும் ஒருக்காலும் அவரிடத்திலிருந்ததில்லை.
5. சேசுநாதருடைய ஆத்துமம் நம்மைப்போல் கஸ்தி, சலிப்பு, கலக்கம் முதலியவைகளும் உட்பட்டிருந்ததா?
ஆம். அவர் தமது சீஷர்களோடு பூங்காவனத்துக்குப் போய், “துயரப்படவும், ஆயாசப்படவும் தொடங்கினார். மேலும் அவர்களைப் பார்த்து: என் ஆத்துமம் மரணமட்டும் துக்கமாயிருக்கிறது” என்று வசனித்தார். (மத்.26:37,38; மாற். 14:33). லாசார் இறந்தபிறகு, “சேசுநாதர் கண்ணீர்விட்டு அழுதார்” (அரு. 11:35). “என் ஆத்துமம் கலக்கமுற்றிருக்கிறது” (அரு.12:27).
6. நம்மைப்போல சேசுநாதர் பசாசினால் சோதிக்கப்பட்டாரா?
சேசுநாதர் வனாந்தரத்துக்குப் போய் உபவாசித்தபிறகு சோதிக்கப்பட்டார் (மத். 4:5‡10). “பாவம் நீங்கலாக மற்ற எவ்விதத்திலும் அவர் நமக்கு ஒத்தவராய்ப் பரிசோதிக்கப்பட்டவ ராமே” (எபி. 4:15).
7. நம்மைப் போல் அவரும் நேசித்தாரா?
சேசுநாதர் மார்த்தம்மாளையும், அவள் சகோதரியாகிய மரியம்மாளையும், இலாசாரையும் நேசித்து வந்தார் என்று (அரு.11:1). இவ்வுலகத்திலே இருந்த தம்முடையவர்களைத் தாம் சிநேகித்திருக்கையில் அவர்களை முடிவுபரியந்தம் சிநேகித்தார் என்றும் (அரு.13:1) அர்ச். அருளப்பர் எழுதினார்.
8. அறிவீனம், சந்தேகம், ஆசாபாசம், துர்க்குணங்களும் சேசுநாதரிடத்தில் இருந்தனவா?
சேசுநாதர் ஜென்மப்பாவமின்றிப் பிறந்தபடியால், பாவத்தின் பலனாகிய அறிவீனம், சந்தேகம், ஆசாபாசம், துர்க் குணங்கள் முதலியவை அவரிடத்தில் கொஞ்சம் கூட இல்லை.
9. நமது ஆத்துமத்துக்கு இருக்கும் சத்துவங்கள் சகலமும் சேசுநாதருடைய ஆத்துமத்துக்கும் இருந்ததோ?
நம்முடையதைப் போல் அவருடைய ஆத்துமத்துக்கும் அறிவு, ஞாபகம், மனது ஆகிய இம்மூன்று சத்துவங்கள் இருந்தன. ஆனால் அவைகள் அதி உன்னதமான சுபாவ நன்மைத் தனங்களாலும், நம்மால் கண்டுபிடிக்க முடியாத மேலான தேவ வரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
10. சேசுநாதரிடத்தில் மனித அறிவு மாத்திரம் இருந்ததா?
தேவ தரிசனையினால் வரும் அறிவு, சம்மனசுக்குரிய அறிவு, மனித அறிவு ஆகிய மூவித அறிவு அவரிடத்தில் இருந்தது.
11. தேவ தரிசனையினால் வரும் அறிவு அவரிடத்தில் எப்படி இருந்தது?
சேசுநாதர் சுவாமி சர்வேசுரனாயிருக்கிறபடியால், பிதாவைப் போல் அளவில்லாத அறிவுள்ளவராயிருக்கிறார். அவருடைய ஆத்துமமும் சுதனுக்குச் சொந்தமானதாய் அவரோடு ஒன்றித்திருந்தபடியால், அவர் இப்பூலோகத்தில் சீவித்தபோது, மோட்சவாசிகளைப் போலவே எப்போதும் தேவதரிசனை அடைந்திருந்தார். சகல ஞானத்துக்கும் ஊற்றும் ஊரணியுமாகிய சர்வேசுரனைப் பார்த்ததினால், தமக்கு இஷ்டமான அறிவெல்லாம் உத்தமமான மேரையாய் அத்தரிசனையினின்று பெற்றுக் கொண்டு வந்தார்.
12. சம்மனசுகளுக்குரிய அறிவு அவரிடத்தில் இருந்ததெப்படி?
சம்மனசுகள் தங்கள் சுபாவ அந்தஸ்தைப்பற்றியும், இஷ்டப்பிரசாத அந்தஸ்தைப் பற்றியும் அறிய வேண்டியதெல் லாம், பிரயாசை யோசனையின்றி முற்றும் அடைகிறார்கள். நமது ஆண்டவருக்கு இப்பேர்ப்பட்ட உன்னத அறிவும் இவர்களுக்கு இருக்கிறதைவிட மகா உத்தமவிதமாய் இருந்தது.
13. நமக்கு இருப்பதுபோல் சேசுநாதருக்கு மனித அறிவு இருந்ததா?
சேசுநாதர் மெய்யான மனிதனாயிருக்கிறபடியால் நாம் எண்ணிக் கருதக்கூடிய எவ்வித அறிவும் அவருக்கு உண்டு. ஆகிலும் அது அளவுள்ள அறிவே. இந்த அறிவு மகா உத்தமமான சிருஷ்டிகளுக்குள்ள அறிவெல்லாவற்றிற்கும் மேலாகவும், நமது புத்திக்கெட்டாததாகவும் அவரிடத்தில் இருந்தது. மேலும் மற்ற மனிதரைப் போல் அவர் நாளடைவில் பற்பல காரியங்களைப் பார்த்து அநுபவித்ததினாலே அநுபவ அறிவு என்னும் வேறொரு வகை அறிவுண்டாகி, நாளுக்குநாள் அதிகரித்து வந்தது.
14. மனிதர்கள் குழந்தையாயிருக்கும்போது அவர்களுக்குப் புத்தி விபரம் உண்டோ?
அவர்களுக்குப் புத்தி விபரமிருக்காது.
15. சேசுகிறீஸ்துநாதர் குழந்தையாயிருந்தபோது அவருக்குப் புத்தி விபரம் இருந்ததோ?
அவருடைய மனுஷ சுபாவமானது ஒரு சொற்ப வினாடியாகிலும் தேவ ஆளோடு கூடாமல் தனியே இருந்ததில்லை. ஆகையால் சேசுநாதர்சுவாமி மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனிதனுமாயிருந்ததைப் பற்றி அவர் கன்னிமரியாயின் உதரத்தில் மனிதனாக உற்பவித்த அந்தக் கணம் முதற்கொண்டு அவருக்குச் சகல ஞானமும், புத்தியும், அறிவும் இருந்தது.
16. சேசுநாதர் குழந்தையாயிருந்தபோது அவருக்கு உண்டாயிருந்த புத்தி, அறிவு, ஞானம் அவர் பெரியவரான போது அதிகரித்ததா?
இல்லை. சேசுநாதர் தமது தாயாருடைய உதரத்தில் உற்பவமானபோது அவருக்கு எவ்வளவு அறிவு ஞானம் உண்டாயிருந்ததோ அவ்வளவே அவர் பெரியவரான போதும் இருந்தது.
17. "சேசுநாதர் சுவாமி சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் முன்பாக ஞானத்திலும், வயதிலும், வரப்பிரசாதத்திலும் வளர்ந்து கொண்டு வந்தார்” என்று சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறது (லூக்.11:52). அதை எப்படி நாம் கண்டுபிடிக்க வேண்டும்?
அவர் தம்மிடத்திலிருந்த ஞானத்தையும், அறிவையும், புண்ணியங்களையும் மனிதர் முன்பாக ஒவ்வொரு நாளும் அதிகமதிகமாய்ப் பிரசித்தப்படுத்தினார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
18. சேசுநாதருக்கு ஞாபகம் என்ற சத்துவம் இருந்ததா?
உன்னதமான ஞாபகம் அவருக்கு இருந்தது. வழக்கமாய்ப் பழைய ஏற்பாட்டின் வாக்கியங்களை உபயோகித்து அவர் மக்களுக்குப் பிரசங்கம் செய்து வந்தார் (மத்.5:21,27, 33,38...).
19. சேசுநாதரிடத்தில் தெய்வீக மனது மாத்திரம் இருந்ததா?
தெய்வீக மனது, மனுஷிகமனது ஆகிய இரண்டு மனதும் அவரிடத்தில் இருந்தது. இது திருச்சபையால் தீர்மானிக்கப் பட்ட விசுவாச சத்தியம்.
20. அதற்குக் காரணம் என்ன?
சேசுகிறீஸ்துநாதர் மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனுஷனுமாயிருப்பதினால், அவர் தேவ சுபாவத்துக்கும், மனுஷ சுபாவத்துக்கும் அத்தியாவசியமானவைகளைக் கொண் டிருக்கிறார்.
21. அந்த இரண்டு மனதும் ஒன்றாகச் சேர்ந்திருந்ததா?
தனித்தனியாயிருந்தன. சேசுநதர் நம்மைப் போலவும் சித்தம் கொண்டிருந்தார். சர்வேசுரனைப் போலவும் சித்தம் கொண்டிருந்தார். ஆகையால் தெய்வீக மனது மனுஷிக மனதைத் தன்னுடன் ஒன்றாகச் சேர்த்து அதை அழித்துப் போட்டதென்று சொல்வது தவறு.
22. அதெப்படி?
மனதானது மனுஷ சுபாவத்தின் பிரதான பாகமாயிருக்கிறது. இந்தப் பிரதான பாகம் மற்ற மனுஷரிடத்திலுள்ளது போலில்லாமல் சேசுநாதரிடத்தில் தேவ மனதின் வெறும் கருவியாக மாத்திரம் இருந்திருக்குமேயாகில், அவர் முழு மனுஷனாயிருக்க மாட்டார்.
23. சேசுநாதருடைய மனுஷிக மனது நமது மனதைப் போல் அவரிடத்தில் இருந்ததா?
பாவம் நீங்கலாக மற்ற சகலத்திலும் சேசுநாதர் மனுஷனுக்கு ஒப்பாயிருந்தாரென்பது விசுவாச சத்தியம். ஆனதால் அவருடைய மனுஷிக மனது நம்முடையதைப் போல் இருந்தது.
24. சேசுநாதர் தம்மிடத்தில் தெய்வீக மனதுக்கும் மனுஷிக மனதுக்குமுரிய இரண்டு வெவ்வேறான கிரிகைகள் இருந்ததென்று காட்டினாரா?
பூங்காவனத்தில் அவஸ்தைப்படும்போது பிதாவை நோக்கி “என் மனதின்படியல்ல, உமது சித்தப்படியே ஆகக் கடவது” (மத். 26:39) என்றபோது தம்மிடத்தில் இரண்டு வெவ் வேறான மனது தமக்கு உண்டென்று சொன்னது போலாயிற்று.
25. சேசுநாதருக்கு உண்டாயிருந்த மனுஷிக மனது அவருடைய தெய்வீக மனதுக்கு அமைந்திருந்ததா?
சேசுநாதருடைய மனுஷிக மனது எப்பொழுதும் தெய்வீக மனதுக்கு அமைந்திருந்தது. இதைப் பற்றியே அவர் பூங்காவனத்தில் மரண அவஸ்தைப்பட்ட போது: “பிதாவே, உமது மனதின்படி ஆகட்டும்” என்று வேண்டிக் கொண்டார்.
26. சேசுநாதருடைய ஆத்துமத்தின் அலங்காரமும், உத்தமமும், அர்ச்சியஷ்டத்தனமும் எப்பேர்ப்பட்டது?
அவருடைய ஆத்துமம் சகல இலட்சணங்களாலும், புத்திக்கெட்டாத உயர்ந்த புண்ணியங்களாலும் சிறந்த நற்குணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சர்வேசுரனிடத்தில் மாத்திரம் இருக்கக் கூடிய அர்ச்சியசிஷ்டதனமும் அவரிடத்தில் இருந்தது.