திவ்ய நற்கருணையை கரங்களில் வாங்குகிறீர்கள்?. என்ன காரணம் என்ன என்று உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.
எனக்கு முன்னால் வாங்குபவர் கரங்களில் வாங்குகிறார். அதுதான் டீசண்ட் அதனால் நானும் வாங்குகிறேன். என்று நினைக்கிறீர்களா?
நாவில் வாங்கினால் பக்கத்தில் இருப்பவர் என்னை ஒரு மாதிரியாக நினைப்பார். அதனால் கரங்களில் வாங்கிவிடுவோம். என்று நினைக்கீறீர்களா?
கரங்களில் வாங்குவதுதான் சுத்தம். ஃபாதர் எத்தனைபேருக்கு நாவில் கொடுக்கிறார். அதனால் நான் கரங்களில்தான் வாங்குவேன் என்று நினைக்கிறீர்களா?
அடுத்தவர் முக்கியமா? ஆண்டவர் முக்கியமா ? நீங்கள் இயேசுவை வாங்குவதில் வெட்கப்பட்டால் ஆண்டவர் இயேசு உங்களை குறித்து வெட்கப்பட மாட்டாரா?
தூய்மையின், சுத்தத்தின் முழுமையான ஆண்டவர் அதே பரிசுத்தத்தோடும், தூய்மையோடும்தான் வருவார் என்ற விசுவாசம் நம்மிடம் இல்லையா?
ஆண்டவர் நம்மைா் பார்த்து என்னை வாங்க வந்துள்ளாயே, உன் ஆன்மா சுத்தமாக இருக்கிறதா? என்று கேட்டால் நாம் என்ன சொல்வோம் ?
நாவில் கேட்டால் கொடுப்பதற்கு எந்த அருட்தந்தையர்களும் தடை சொல்வதில்லை. அதே போல் பெரும் கொடுமை என்னவென்றால் புதிதாக நற்கருணை வாங்க இருக்கும் சிறுவர்களுக்கு நற்கருணையை கரங்களில் எப்படி வாங்க வேண்டும் என்று டிரெயினிங்க் கொடுக்கிறார்கள்!
நிறைய பேர் இடது கரங்களில் வாங்குகிறார்கள். என்ன கொடுமை எல்லாம் வல்ல சர்வேசுவரனுக்கு எத்தனை அவமானத்தைக் கொடுக்கிறோம்?
நம் அன்புத்தாய் பாத்திமாவில் அந்த மூன்று சிறுவர்களுக்கு ( புனித லூசியா, புனித பிரான்சிஸ், புனித ஜெசிந்தா ) காட்சி கொடுக்கும் முன்பு வானதூதர் மூன்று முறை அந்த சிறுவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
(கீழே உள்ள பகுதி மாதா அப்போஸ்தலர்கள் சபையின் “ மாதா பரிகார மலரிலிருந்து எடுக்கப்பட்டது )
அவர் மூன்றாவது காட்சியில் நற்கருணையோடு வந்தார். நற்கருணை சேசுவுக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்திற்குப் பரிகார ஜெபத்தை சொல்லிக்கொடுத்து அவரும் ஜெபித்தார்.
குழந்தைகளுக்கு நற்கருணை வழங்கும் போது: “ நன்றியற்ற மனிதரால் சகிக்கக்கூடாத விதமாய் அவசங்கைப்படுத்தபடுகின்ற சேசு கிறிஸ்துவின் திருச்சரீரத்தையும், திரு இரத்தத்தையும் அருந்தி பானம் செய்யுங்கள். அவர்களுடைய அக்கிரமங்களுக்கு பரிகாரம் செய்து உங்கள் கடவுளை ஆறுதல் படுத்துங்கள். என்றார்.
பின்பு லூசியாவுக்கு திவ்ய அப்பத்தை உட்கொள்ள கொடுத்தார். பிரான்சிஸுக்கும், ஜெசிந்தாவிற்கும் திருரத்தத்தை பானம் செய்யக் கொடுத்தார். இரண்டு குணங்களிலும் இயேசு முழுவதும் உட்கொள்ளப்படுகிறார் என்பது இதனால் தெளியாகிறது; ஆகவே அப்ப வடிவில் மட்டும் நற்கருணை வழங்கும் திருச்சபையின் பாரம்பரியம் சரியானதே.
சம்மனசானவர் கூறிய வார்த்தையிலிருந்து நற்கருணையில் நமதாண்டவர் “ சகிக்கக்கூடாத விதமாய் நிந்திக்கப்படுகிறார் என அறிகிறோம். இது எங்கும் பரவலாக நடக்கிறது.
இந்த செய்தி வான தூதரால் வழங்கப்பட்ட ஆண்டு 1916. ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அப்படி சொல்லியிருக்கிறார்.அதே வானதூதர் இப்போது வந்தால் என்ன சொல்லுவார்?
வானதூதர் முதல் காட்சியில் அந்த குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து தெண்டனிட்டு வணங்கி வானதூதரும் அக்குழந்தைகளோடு மூன்று முறையும் ஜெபித்த ஜெபம் என்னவென்று தெரியுமா?
“ என் தேவனே! உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதிக்காதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்காகவும் உம்மை நேசியாதவர்க்காகவும் மன்னிப்பு கேட்கிறேன் “
என்ற திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்தில் நற்கருணை ஆண்டவர் முன் ‘நான்’ சேர்த்து ஜெபிக்கப்படும் ஜெபம்தான். இந்த ஜெபம் இன்றும் அனைத்து ஆலயங்களிலும் சொல்லப்படுகிறதா என்பதும் கேள்விக்குறி!