மாயம்

1. மாயம் என்றால் என்ன? 

மனித சக்தியால் செய்ய முடியாத அதிசயங்களைப் பசாசின் உதவியால் செய்வது மாயமாம்.


2. பசாசின் உதவியால் என்று சொல்வானேன்?

பசாசின் உதவியைத் தேடாமல், வித்தைக்காரன் தனது சரீர பலத்தைக் கொண்டும், புத்தி சாமர்த்தியத்தைக் கொண்டும் செய்கிற அதிசயங்களை மாயம் என்று சொல்லக் கூடாது. அவன் செய்யும் அந்த வித்தைகள் கைஜாலமாம்.


3. பசாசின் உதவியைக் கொண்டு மாயவித்தைக்காரர் செய்யக் கூடிய தென்ன?

(1)  ஆகாயத்தில் பறக்கிறது. இப்படி மாயவித்தைக்காரனான சீமோன் என்பவன் வானத்தில் ஏறினானென்று அர்ச். இராயப்பர் சரித்திரத்தில் வாசித்துப் பார்க்கலாம்.

(2)  அரூபிகளைக் காணக்கூடிய விதமாய்த் தோற்றுவிக்கிறது.  உதாரணமாக, எந்தோர் மாயவித்தைக்காரி (1 அரசர் 28).

(3)  சரீரத்தை வேறொரு ரூபமாக மாற்றிக் காட்டுகிறது. அப்படியே எஜிப்து இராசாவாகிய பரவோனால் அழைக்கப்பட்ட மாயவித்தைக்காரர் ஒவ்வொருவரும் தன் தன் கோலைக்  கீழே வீசின மாத்திரத்தில் அது பாம்பாக மாறிவிட்டது (யாத். 7:12). இதைப் போன்ற பற்பல அதிசயங்களை மாயவித்தைக்காரர் பசாசின் உதவியைக் கொண்டு செய்யக் கூடுமென்கிறார்கள்.


சரித்திரம்

சவுல் என்கிற இராசன் எந்தோர் பட்டணத்து மாயவித்தைக்காரியிடம் போய் சில நாளைக்கு முன் இறந்துபோன சாமுவேல் தீர்க்கதரிசியைத் தனக்குக் காட்ட வேண்டுமென்று கேட்டான். அச்சமயத்தில் சாமுவேல் தீர்க்கதரிசி சர்வேசுரனுடைய உத்தரவுப் பிரகாரம் இராஜனுக்குத் தோன்றி மறுநாள் பிலிஸ்தியர் கையினால் அவன் கொல்லப்படுவானென்று வசனித்தார் (1 அரசர் 28).  மாய வித்தைக்காரியின் உதவியைக் கேட்டதற்கு வந்த இலாபம் இதுவே.


4. மாயவித்தைக்காரன் பசாசின் உதவியைக் கொண்டு செய்கிற அதிசயங்களைப் போய்ப் பார்க்கலாமா? 

போய்ப் பார்த்தால் பாவமாகும்.


5. பசாசின் உதவியைத் தேடாமல் வித்தைக்காரன் தன் சாமர்த்தியத்தைக் கொண்டு செய்கிற பற்பல அதிசய வேடிக்கைகளைப் போய்ப் பார்க்கலாமா?

அவைகளைப் பார்க்கப் போவதற்கு யாதொரு விக்கினமுமில்லை.