ஏக சர்வேசுரன்

12. எத்தனை சர்வேசுரன்?

ஒரே சர்வேசுரன்.


13. ஒரே சர்வேசுரன் அல்லாமல் வேறே சர்வேசுரன் இருக்கக் கூடுமோ?

கூடாது; சர்வேசுரன் எல்லோருக்கும் மேலான கர்த்தாவாய் இருக்கிறபடியால், அவருக்குச் சரியயாத்த வேறொருவர் இருப்பது கூடாத காரியம்.


1. ஒரே சர்வேசுரன் இருக்கிறாரென்று நாம் எப்படி அறிவோம்?

தேவ வெளிப்பாட்டையும், நமது சுபாவப் புத்தியின் பிரகாசத்தையும் கொண்டு சர்வேசுரன் ஒருவராயிருக்கிறார் என்று அறிவோம்.


2.இவ்விஷயத்தைப் பற்றிய தேவ வெளிப்பாடு எது?

சர்வேசுரனே வேதாகமத்தில் அநேக இடங்களில் தம்மைப் பற்றி ஒருமையிலேயே சொல்லியிருக்கிறார்.  “நாம்தாம் கடவுள் எனவும், நம்மையல்லாமல் வேறு தெய்வமில்லை எனவும், நமக்கு நிகரானது கிடையாதெனவும் அறியக்கடவீர்களாக” (இசை.46:9).


3. நமது சுபாவப் புத்தியின் பிரகாசத்தைக் கொண்டு சர்வேசுரன் ஒருவராயிருக்கிறாரென்று எப்படி அறிவோம்?

சர்வேசுரன் மேலான கர்த்தாவாயிருக்கிறபடியால், அவருக்குச் சரியயாத்த வேறொருவர் இருப்பது கூடாத காரியம் என்று நமது புத்தி சொல்லுகிறது.


4.அதெப்படி?

சர்வேசுரன் என்கிற திருநாமம் ஓர் சர்வேசுரன் மாத்திரம் உண்டென்று காட்டுகிறது.  சர்வேசுரன் என்கிற வார்த்தைக்கு: ஒன்றும் தவிராமல் எல்லாவற்றிற்கும் கர்த்தர் என்று அர்த்தமாம்.  ஆனதால் சர்வேசுரனுக்குச் சரியயாத்த வேறொருவர் இருப்பது கூடாத காரியம்.  அதெப்படியயன்றால், சர்வேசுரனுக்குச் சரியயாத்த வேறொரு வஸ்து இருந்தால், அவர் அந்த வஸ்துவுக்குச் சர்வ கர்த்தராக இருக்கவே மாட்டார்.  அவர் ஒரு வஸ்துவுக்குச் சர்வ கர்த்தராயில்லாதிருந்தால். அவர் சர்வ கர்த்தர் என்னும் பெயர் செல்லாதுமல்லாமல், அந்தச் சுயாதீனமுள்ள வஸ்துவுக்கும் கூட அந்தப் பெயர் செல்லாது.  அவரும் அந்த வஸ்துவும் சர்வ கர்த்தர் அல்லவென்றால் சர்வேசுரன் இருக்கிறதில்லை என்று தீர்மானிக்க வேண்டியிருக்கும்.  அது சுத்த தப்பறை.


5. ஒரே சர்வேசுரன் மாத்திரம் உண்டென்று எண்பிப்பதற்கு இன்னமும் வேறு நியாயம் உண்டா?

உண்டு.  உலக ஆளுகையின் ஒருமிப்பானது ஒரே சர்வேசுரன் மாத்திரம் உண்டென்று காண்பிக்கிறது.


6. அதெப்படி?

முன் சொன்னதுபோல் உலகத்தில் ஆச்சரியத்துக்குரிய தவறாத திட்டமான ஒழுங்குகளிருப்பதைப் பார்க்கிறோம்.  பல சர்வேசுரர்கள் இருப்பார்களேயாகில் அப்பேர்ப்பட்ட ஒழுங்குகள் இருக்க முடியாது.  பல சர்வேசுரர்கள் இருந்தால் என்ன சம்பவிக்கும்?  ஒரு இராச்சியத்துக்கும், ஒரு சபைக்கும், ஒரு வீட்டுக்கும் பல எசமான்களால் எவ்வளவோ பொல்லாப்பும், அலங்கோலமும் நேரிடும்.  பல எசமான்கள் இருந்தால் எந்த அதிகாரிக்குக் கீழ்ப்படிவதோ தெரியாது.  அதிகாரிகளுக்குள் சண்டை கலகம் ஏற்படும்.  ஒருவர் இன்னின்ன காரியத்தைச் செய் என்று சொல்லும் போது, மற்றொருவர் வேண்டாமென்று கற்பிப்பார்.  ஒரு எசமான் மாத்திரம் இருந்தால் அவைகளிடத்தில் நன்மையும் ஒழுங்கும் உண்டாகும்.

அப்படிப்போலே உலகத்தை ஆள, ஒரே சர்வேசுரன் மாத்திரம் இருந்தால் அதில் ஒழுங்கு அழியாமலும், மாறாமலும் இருக்கக் கூடும்.  பலர் இருப்பார்களேயாகில், உலகத்தின் அலங்கோலமும், சகலவிதக் குழப்பமுமிருக்குமே யன்றி, நாம் இப்போது பார்க்கிற ஆச்சரியத்துக்குரிய மாறாத ஒழுங்குகளிருக்க முடியாது. ஏனென்றால், பல சர்வேசுரர்களுக்குப் பல ஆசைகளிலிருந்து, அவர்கள் பலவிதமாய் உலகத்தை ஆள விரும்புவார்கள்.  ஒருவர் சூரியன் கீழ்த்திசையில் உதிப்பதற்குப் பதிலாக, மேற்கில் உதிக்க வேண்டுமென்றும், பகல் 18  மணி நேரமும், இரவு 6 மணி நேரமும்தான் இருக்க வேணுமென்றும் விருப்பப்படலாம். அப்படி ஒருவர் விரும்புவதை மற்றொருவர் அழிக்கத் தேடுவதினால், எப்பேர்ப் பட்ட அலங்கோலம் நேரிடும்!


7. சர்வேசுரன் இன்னொரு சர்வேசுரனை உண்டாக்க முடியாதோ?

முடியாது; சர்வேசுரன் ஒரு வஸ்துவைச் சர்வேசுரனாக உண்டாக்கினால், அந்த வஸ்து சிருஷ்டியாகிவிடும்.  மேலும் சர்வேசுரனாக உண்டாக்கப்பட்ட வஸ்து, உத்தமமானதும், தன்னிலே தானாயிருக்கிறதுமான வஸ்துவாயிருக்க மாட்டாது.


8. இத்தேசத்தில் அநேக சர்வேசுரன் உண்டென்று நம்பி பல தேவர்களை ஆராதிக்கும் மக்களும் இருக்கிறார்களா?

இருக்கிறார்கள்.  அஞ்ஞானிகள் அநேக தேவர்கள் உண்டென்று நம்பி, முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்கி வருகிறதைப் பார்க்கிறோம்.


9. இத்தேசத்தில் ஆராதிக்கப்பட்டு வரும் தேவர்கள் சர்வேசுர னென்று நினைக்கலாமா?

அஞ்ஞானிகள் தாங்கள் கும்பிடுகிற சிலைகளையும், சுரூபங்களையும் தெய்வங்கள் என்று எண்ணினாலும், அவைகள் மெய்யான தேவர்கள் என்று நினைக்கவே கூடாது.


10. அஞ்ஞானிகள் கும்பிடுகிற தெய்வங்கள் மெய்யான தேவர்கள் அல்லவென்றால் அவர்கள் எதை ஆராதிக்கிறார்கள்?

அவர்கள் ஆங்காரத்தால் கெட்டுப் போன சம்மனசுக்களையே ஆராதிக்கிறார்கள்.  “அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை சர்வேசுரனுக்கல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்” (1 கொரி. 10:20) என்று அர்ச். சினனப்பர் எழுதி யிருக்கிறார். “ஜனங்களுடைய தேவர்கள யாவரும் பசாசுக்கள் தானே” (சங். 95:5).


11. அஞ்ஞானிகள் கும்பிடுகிற சாமிகள் பொய்யான தேவர்கள் என்று இன்னும் நமக்கு எப்படித் தெரியும்?

திருச்சபையின் படிப்பினையினாலே மாத்திரமின்றி அவர்களுடைய போதனையினாலேயும், சரித்திரத்தினாலேயும், திருநாட்களினாலேயுமே, அது நமக்கு நன்றாய்த் தெரியும்.


12. அவர்களுடைய போதனை என்ன?

நரகம் உண்டென்றும், நரகம் முடியாதென்றும், மனிதர் ஒரே ஒரு விசை இறந்துபோய், தீர்வை இடப்படுவார்கள் என்றும் திருச்சபை படிப்பிக்க, மேற்படி சாமிகள் நரகமில்லை  அல்லது நரகம் முடியும் என்றும், மனிதன் கணக்கில்லாத விசை பிறக்கிறான், சாகிறான் என்றும், தீர்வை ஒன்றுமில்லை என்றும் படிப்பிக்கிறார்கள்.


13. அவர்களுடைய சரித்திரம் எப்பேர்ப்பட்டது?

சகல பாவ அக்கிரமங்களால் நிறைந்த சரித்திரம்தான்.


14. அவர்களுடைய திருநாட்களைக் கொண்டாடும் போது அஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் கட்டிக் கொண்ட பாவ அக்கிரமங்களை நாடகமாக காண்பித்து வருகிறார்கள்.


15. அவர்களுக்குள் சிலர் பற்பல அதிசயங்களைச் செய்து வருகிறதில்லையா?

நிச்சயமாக இல்லை.  அவர்களைக் குறித்துச் சொல்லப் படும் அதிசயங்கள் சுத்த மோசமேயல்லாமல் மற்றபடியல்ல.


சரித்திரம்.

1. மன்னார்கோவிலில் ஒரு விக்கிரகம் தனக்கு வேண்டிய தர்மம் அரசனும் பிரசைகளும் கொடாததைப் பற்றி கண்ணீர் விட்டு அழுவதாக வதந்தி பரவியது.  திரளான மக்கள் அந்த விக்கிரகத்தைப் போய்ப் பார்த்தபொழுது, அதன் இரு கண்களிலிருந்து நீர் வடிவதைக் கண்டு அதிசயித்து, அதற்குத் திரளான தர்மம் ஒப்புக் கொடுத்து வந்தார்கள். 

அக்காலத்தில் மதுரையை ஆண்ட அரசனும் அவ்விடத்திற்குப் போய், அங்கு நடந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்து, ஏராளமான தானதர்மம் கொடுப்பதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார்.  மந்திரியோ, சிலையில் ஏதோ சூது இருக்குமென்று சோதிக்கவே, அதன் தலைக்குள் வைக்கப்பட்டிருந்த ஈரப் பஞ்சினின்று நீர் கண்வழியாய் ஒழுகுவதை அறிந்து, அரசனை அவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்ப் பூசாரிகளுடைய கபடத்தை அவருக்குக் காட்டினதின் மேல், அரசன் பூசாரிகள் மட்டில் கோபம் கொண்டதுடன் தாம் செய்த பொருத்தனையையும் செலுத்தினவரல்ல. (M.J.M.I No.10).   

2. பழங்காலத்தில் பாபிலோன் பட்டணவாசிகள் பேல் என்னும் ஓர் பொய்த் தேவனை வணங்கி வந்தார்கள்.  அவனுடைய குருக்கள் தங்கள் தேவனுக்குப் பெரும் பசி இருக்கிறதென்றும் ஐம்பது மனிதர்கள் எம்மாத்திரம் குடிக்கவும், சாப்பிடவும் கூடுமோ, பேல் சுவாமி தினந்தோறும் அம்மாத்திரம் சாப்பிடுவான், குடிப்பான் என்றும் சொல்லி வருவார்கள்.  இராஜாவும் குடியானவர்களும் எல்லாம் அதை நம்பி தினந்தோறும் அவனுக்குச் சோறு, கறி, முட்டை, கொடிமுந்திரிகை ரசம், தேன் முதலியவற்றையும் திரளாய்க் கொண்டுவந்து கொடுப்பார்கள்.  

அக்காலத்தில் மேற்படி இராஜாவிடத்தில் தானியேல் என்னும் தீர்க்கதரிசியானவர் இருந்தார்.  அவர் பேல் என்பவன் உயிரில்லாத சிலை, அதில் தெய்வமில்லையயன்றும், ஆதலால் அவன் குடிக்கிறவனல்ல, சாப்பிடுகிறவனல்லவென்றும் சொல்லிக் கொண்டு வருவார்.  அதை முன்னிட்டு பேல் சிலையின் குருக்கள் இராஜாவிடத்தில் முறையிட்டார்கள். அப்போது தானியேல் என்பவர்: நான் சொல்லுகிறதை மெய்யயன்று நிரூபிக்காவிட்டால் என் உயிரை வாங்கலாம் மகாராஜாவே என்று சொன்னார்.  ஜனங்கள் வழக்கப்படி பேல்லுக்குச் சாப்பாட்டைக் கொடுத்திருக்க, எல்லோரும் கோவிலில் நின்று புறப்பட்ட பின்பு, தானியேல் என்பவர் என்ன செய்தாரென்றால், ஒரு சல்லடையைக் கொண்டு கோவில் தரையின்மேல் எங்கும் சாம்பலை இலேசாய்ச் சலித்து, இராஜாவுடன் கோவிலைப் பூட்டி, கதவின்மேல் இராஜ முத்திரையிட்டு இருவரும் சென்றார்கள்.

மறுநாள் காலையில், கோவிலைத் திறந்து பார்க்கையில் முந்தினநாள் பேல்லுக்குக் கொண்டுவந்து கொடுத்த போசனம் ஒன்றும் காணோம்.  அப்போது இராஜா சந்தோஷப்பட்டு, தானியேலை நோக்கி: பேல் என்பவர் மெய்யாகவே தெய்வமாயிருக்க வேண்டுமென்று சொல்ல, தானியேல் அவனை நிறுத்தி, தரையில் பெரிய ஆட்களுடைய காலடியையும், சிறு பிள்ளைகளுடைய காலடியையும் அவனுக்குக் காண்பித்தார்.  அப்போது இராஜாவுக்குக் கோபமும், சந்தேகமும் உண்டாகி, அவன் காரியத்தைத் தீர்க்க விசாரித்து, இராத்திரி நேரத்தில் குருக்களும், அவர்களுடைய பெண்சாதி பிள்ளைகளும், இரகசிய வழியாய்க் கோவிலில் பிரவேசித்து, பேல்லுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட யாவையும் சாப்பிட்டு வருகிறார்கள் என்று நிச்சயித்துக் கொண்டான். (தானி.14).