1. நல்ல முறையில் பூசை காண்பதற்கான முதல் நிபந்தனை இந்தப் பரிசுத்த பலியின் அளவற்ற பரிசுத்த தனத்தையும், அது பெற்றுத் தருகிற வரப்பிரசாதங்களையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பது ஆகும்.
நாம் ஏற்கெனவே பார்த்துள்ளது போல், பூசை நம் புத்திக்கெட்டாத பரம இரகசியமாக இருக்கிறது. மறுபுறத்திலோ, நம் மனங்கள் பலவீனமானவையாகவும், புரிந்து கொள்வதில் மந்தநிலை உள்ளவையாகவும் இருக்கின்றன. ஆகவே நாம் பூசையின் அற்புதங்களைப் பற்றி அடிக்கடி வாசிக்கவும், அவற்றைப் பற்றி ஆழ்ந்து தியானிக்கவும் வேண்டும். நல்ல புரிதலோடும், பக்தியோடும் நாம் பங்கு பெறும் ஒரு பூசை, கவனமின்றியும், பூசை என்பது என்ன என்று அறியாமலும் நாம் காணும் ஒரு நூறு, ஓராயிரம் பூசைகளை விட அதிகமான வரப்பிரசாதங்களை நமக்குப் பெற்றுத்தருகிறது.
2. பூசை தொடங்குவதற்கு குறைந்த பட்சம் சில நிமிடங்களுக்கு முன்பாவது கோவிலுக்கு வந்து சேர வேண்டும் என்பதை நமக்கு நாமே ஒரு சட்டமாக ஆக்கிக் கொள்வோம். இதன் நோக்கம், முதலாவதாக, குருவானவர் பீடத்திற்கு வரும்போது நாம் நல்ல ஆயத்தமும், சுய ஒறுத்தலும் உள்ளவர்களாக இருப்பது; இரண்டாவதாக, பூசைக்கு நடுவில் வந்து மற்றவர்களுக்கு இடைஞ்சலாகவும், பராக்காகவும் இருப்பதைத் தவிர்ப்பது.
3. நாம் பூசை காண்பது மட்டும் போதாது, அதை குருவானவரோடு சேர்ந்து நாம் ஒப்புக் கொடுக்கவும் வேண்டும். மேலும், ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லாப் பூசை களையும் காண்பதும், அவற்றை ஒப்புக்கொடுப்பதுமாகிய விருப்பம் நம்மிடம் இருக்க வேண்டும். இம்முறையில் இந்த எண்ணிலடங்காத அனைத்து பூசைகளிலும் ஒரு பங்கை நாம் பெற்றுக் கொள்கிறோம்!
திருச்சிலுவை.
4. எல்லா பீடங்களின் மீதும் நாம் பாடுபட்ட சுரூபத்தைக் காண்கிறோம், குருவானவரின் பூசை உடுப்பு களின் மீது சிலுவை அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. குருவானவர் சிலுவை அடையாளம் வரைந்து பூசையைத் தொடங்குகிறார். பூசையின்போது மிக அநேக தடவைகள் அவர் சிலுவை அடையாளம் வரைகிறார்.
இவையெல்லாம் ஏன்? ஏனெனில் பூசை உண்மையாகவே சிலுவைப் பலிதான் என்பதையும், பூசையில் கிறீஸ்துநாதர் சிலுவையில் அறையப்பட்டு, தமது விலையேறப்பெற்ற திரு இரத்தத் தைச் சிந்தி, நமக்காக மரிக்கிறார் என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே. நாம் உண்மையாகவே சிலுவைப் பலியில் பங்கு பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை எந்த சந்தேகமுமின்றி விசுவசிக்க வேண்டும்.