1. சிருஷ்டிப்பு என்னும் பதத்திற்கு அர்த்தம் என்ன?
சிருஷ்டிப்பு என்னும் பதமானது சிருஷ்டித்தல் (படைத்தல்) என்றும் சிருஷ்டி என்றும் இரண்டு அர்த்தம் கொள்ளும்.
2. சிருஷ்டித்தல் என்றால் என்ன?
ஒன்றுமில்லாமையிலே நின்று யாதொரு முன் பொரு ளின் உதவியின்றி, சர்வேசுரன் தமது சர்வ வல்லமையினால் ஒரு வஸ்துவை உண்டாக்குகிற கிரியையே சிருஷ்டித்தல் எனப்படும்.
3. சிருஷ்டி என்றால் என்ன?
சர்வேசுரனுக்குப் புறம்பாயுள்ளதும். அவராலே படைக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டு, அததன் கதியை அடையும்படி நடத்தப்பட்டு வருவதுமான எந்த வஸ்துவும் சிருஷ்டி எனப்படும்.
29. (14) சர்வேசுரன் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருக்கிற தெப்படி?
பரலோகத்தையும், பூலோகத்தையும், அவைகளிலடங்கிய சகலத்தையும் உண்டாக்கிக் காப்பாற்றுகிறதினால், எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருக்கிறார்.
1. பரலோகம் பூலோகம் என்னும் வார்த்தைகளால் குறிக்கப் பட்டவைகள் எவை?
(1) நாம் பார்க்கும் இப்பூலோகத்தையும் அதிலுள்ள சகல பொருட்களையும்,
(2) வானுலகத்தில் தோன்றும் சூரியன், சந்திரன், நட்சத்திரம் முதலியவைகளையும்,
(3) மோட்சத்திலுள்ள சகல சம்மனசுக்களையும்,
(4) இன்னும் எவ்விடத்திலும் இருக்கக்கூடிய எந்தப் பொருட்களையும் பரலோகம், பூலோகம் என்னும் வார்த்தைகளால் நாம் குறிப்பிடுகிறோம்.
2. ஒருவன் ஒரு வீட்டைக் கட்ட வேண்டுமானால் அவனுக்கு அவசியமாயிருக்கிறதென்ன?
கல், சுண்ணாம்பு, மரம், ஓடு இவை முதலிய சாமான்கள் அவனுக்கு அவசியமாயிருக்குமல்லாமல், இன்னும் அதைக் கட்ட கொற்றன், தச்சன் முதலிய ஆட்களும் அவனுக்கு உதவியாக வேண்டியது.
3. வீட்டை ஒரு நொடியில் கட்ட அவனாலே முடியமா?
அதைக் கட்டுவதில் சிறிது காலத்தை அவன் செலவழிக்க வேண்டியதாயிருக்கும்.
4. அதைப் போலவே பரலோகத்தையும் பூலோகத்தையும் உண்டாக்க ஏற்கனவே உள்ள பொருட்களும் பிறர் உதவியும் அதிக நேரமும் சர்வேசுரனுக்கு அவசியமாயிருந்தனவா?
சர்வேசுரனுடைய வல்லபத்திற்கு அளவு ஒன்றுமில்லாததினால் அவர் ஒன்றுமில்லாமையிலே நின்று யாதொரு உதவியின்றி ஆகட்டும் என்கிற வார்த்தை சொல்லிய மாத்திரத்தில் தமது சித்தத்தினால் பரலோகத்தையும் பூலோகத்தையும் அவைகளில் அடங்கிய சகலத்தையும் உண்டாக்கினார்.
5. அப்படியானால் “பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வேசுரன்” என்பதற்கு அர்த்தமென்ன?
(1) காலத்தின் ஆதித்துவத்தில் சர்வேசுரன் யாதொரு கட்டாயமின்றி தமது சொந்த இஷ்டத்தினால் அரூபியான சம்மனசுகளையும், கண்டிப்புள்ள பொருளாகிய உலகம் ஆகிய இருவகை சிருஷ்டிகளையும் ஒன்றுமில்லாமையினின்று உண்டாக்கினார்.
(2) கடைசியாக அரூபியும் சடப்பொருளும் சேர்ந்த சிருஷ்டியாகிய மனிதனைப் படைத்தார்.
6. சர்வேசுரன் எப்பொழுது பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தார்?
அது நமக்குத் தெரியாது. வேதாகமத்தில் அந்தக் காலம் குறிக்கப்படவில்லை.
7. சர்வேசுரன் உலகத்தை எப்படிப் படைத்தார்?
மோயீசன் என்கிறவர் வேதாகம புஸ்தகங்களின் துவக்கத்தில் ஆறு நாளைக்குள்ளாகப் பூலோகத்தைச் சர்வேசுரன் படைத்தாரென்று நமக்கு அறிவித்திருக்கிறார்.
8. இந்த ஆறு நாளில் சர்வேசுரன் உலகத்தை உண்டாக்கின வரிசைக் கிரமத்தைச் சொல்லு.
(1) முதல் நாளில் சர்வேசுரன் வெளிச்சத்தை உண்டாக் கினார். (ஆதி. 1:2)
(2) இரண்டாம் நாளில் அவர் தண்ணீர்களின் நடுவில் வானமண்டலத்தை உண்டாக்கி அவ்வானத்துக்குக் கீழ்ப்பட்ட தண்ணீரையும் அவ்வானத்துக்கு மேற்பட்ட தண்ணீரையும் வெவ் வேறாகப் பிரித்தார். (ஆதி. 1:1‡7)
(3) மூன்றாம் நாளில் பூமியின்மேல் எங்கும் பரவி யிருந்த தண்ணீர்களை ஒன்றாகக் கூட்டி சமுத்திரங்களில் அடக்கித் தண்ணீரில்லாத இடம் தோன்றும்படி கட்டளையிட்டு புல், பூண்டு, மரம் முதலியவற்றைப் படைத்தார். (ஆதி 1:9‡11)
(4) நான்காம் நாளில் சந்திரன், நட்சத்திரங்கள் முதலிய வான ஜோதி மண்டலங்களைச் சிருஷ்டித்தார். (ஆதி.1:16)
(5) ஐந்தாம் நாளில் ஆகாயத்தில் பறக்கிற பறவை களையும், தண்ணீரில் நீந்துகிற மீன்களையும் உண்டாக்கினார். (ஆதி.1:20)
(6) ஆறாம் நாளில் பூமியில் நடமாடுகிற மிருகங்களையும், கடைசியாய்த் தமது சாயலாக மனிதனையும் உண்டாக் கினார். (ஆதி.1:24-27)
9. பரலோகமும், பூலோகமும் ஆண்டவர் ஆறு நாட் களுக்குள்ளாக உண்டாக்கினார் என்பதினாலே, அந்த ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் கொண்ட நாள் என்று கண்டுபிடிக்க வேண்டுமோ?
யூத பாஷையில் உபயோகிக்கப்பட்டிருக்கும் வார்த்தைக்கு நாள் என்றும், யுகம் என்றும் இருவித அர்த்தம் கொடுக்கலாம். ஆகையால் பல வேதசாஸ்திரிகள் சொல்லுவதுபோல் ஒரு நாள் அநேக ஆயிரம் வருங்கள் கொண்டதென்று கண்டுபிடிக்கத் தகும்.
10. வேதாகமத்தில் சர்வேசுரன் ஆறு நாளைக்குள்ளாக உலகத்தைப் படைத்து ஏழாம் நாளில் தாம் செய்துவந்த வேலை எல்லாம் ஒழித்து இளைப்பாறினார் என்கிறதினாலே, அவர் ஆறு நாளாய்ச் செய்த வேலையால் களைத்துப்போனாரென்று கண்டு பிடிக்கவேண்டுமோ?
அல்ல: சர்வேசுரன் ஆறு நாட்களில் வானமண்டலத்தையும். பூமண்டலத்தையும் படைத்து, ஏழாம் நாள் யாதொன்றையும் புதிதாய்ச் சிருஷ்டிக்கவில்லையயன்று காட்ட அவர் இளைப்பாறினாரென்று சொல்லியிருக்கிறது.
11. இதனால் நாம் அறியவேண்டிய விசேஷம் என்ன?
நாம் வாரத்தில் 6 நாள் வேலை செய்து 7-ம் நாளில் வேலையை நிறுத்தி, சர்வேசுரனை அந்த நாளில் விசேமாய் நினைத்து அவரை ஆராதிப்பதில் நேரத்தைச் செலவழிக்க வேண்டு மென்று அறிய வேண்டியது.
12. இவ்வுலகத்தைச் சிருஷ்டிக்க வேண்டுமென்று சர்வேசுரனுக்குக் கட்டாயமா?
இவ்வுலகத்தைச் சிருஷ்டிக்க வேண்டுமென்று சர்வேசுரனுக்கு யாதொரு கடமையுமில்லை. அவர் அளவற்ற நன்மையும், பாக்கியமும் நிறைந்தவராதலால், தமது பாக்கியத்தை அடைவதற் காகவும், அதை அதிகரிக்கிறதற்காகவும் எந்த வஸ்துவும் அவருக்கு அவசியமில்லை: ஆகையால் சிருஷ்டிகளைப படைப்பதும், படைக்காமலிருப்பதும் அவர் இஷ்டம்.
13. அப்படியானால் இவ்வுலகத்தைச் சர்வேசுரன் எதற்காக உண்டாக்கினார்?
தமது மகிமைக்காகவும், மனிதனுடைய நன்மைக்காகவும் உலகத்தை அவர் உண்டாக்கினார்.
14. சிருஷ்டிகள் சர்வேசுரனுக்கு எப்படி மகிமை சேர்க்கும்?
உலகத்திலுள்ள அலங்கார வடிவுள்ள சிருஷ்டிகளும், அவைகளிலிருக்கும் திட்டமான ஒழுங்குகளும், சர்வேசுரனிடத்திலிருக்கும் உத்தம தேவ இலட்சணங்களைத் தெரியப்படுத்துகிறது. அவைகளைக் கொண்டு புத்தியுள்ள மனிதன் சர்வேசுரனுடைய நன்மைதனத்தை அறிந்து, அவரை ஆராதித்து, ஸ்துதித்து வருகிறபடியினால், உலகம் சர்வேசுரனுக்கு மகிமை சேர்க்கும். “வான மண்டலங்கள் சர்வேசுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன” (சங் 18:1).
15. உலகம் மனிதனுக்கு எப்படி நன்மை பெறுவிக்கும்?
மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்களில் தன் கதியையும், பாக்கியத்தையும் வைக்காமல், அவைகளைக் கொண்டு சர்வேசுரனை அறிந்து, ஆராதித்து, தோத்தரித்து நடந்து வந்தால், நித்திய பாக்கியத்தை அடைவான் என்பதினாலே, உலகம் மனிதனுக்குச் சொல்லமுடியாத நன்மை பெறுவிக்கும்.
16. சர்வேசுரன் இன்னும் படைக்கிறாரா?
குழந்தை உற்பவித்த கணத்தில் சர்வேசுரன் அதன் ஆத்துமத்தைச் சிருஷ்டிக்கிறார்.
17. சகல வஸ்துகளையும் சிருஷ்டித்தபின் சர்வேசுரன் அவை களைக் கவனியாமல் கைவிட்டுவிடுகிறாரா?
கைவிட்டு விடுகிறதில்லை. அவர் தாம் உண்டாக்கின வற்றையெல்லாம் காப்பாற்றி வருகிறார்.