77. கத்தோலிக்கு திருச்சபை மாத்திரம் பரிசுத்தமாய் இருக்கின்றது.
1-வது, அது தன்னை ஸ்தாபித்தவர்களிலும் முதன் முதல் விருத்தியாக்கினவர்களிலும் பரிசுத்தமாய் இருக்கின்றது. எப்படியெனில், அதை ஸ்தாபித்துப் பரப்பியவர்களாகிய அப்போஸ்தலர்களும் அவர்களை அடுத்துவந்த மேற்றிராணிமார்களும் மற்றும் போதகர்களும் மிகவுமுயர்ந்த பரிசுத்ததனத்தில் பேர்போனவர்கள். அவர்களில் அநேகாநேகர் தங்கள் போதகத்துக்கு அத்தாட்சியாகத் தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்தி வேதசாட்சியாய் மரித்தார்கள்.
2-வது, அது தன் போதகத்தில் பரிசுத்தமாய் இருக்கின்றது. எப்படியெனில், அது சகல அக்கிரமங்களையும் கண்டித்து அவைகளை நீக்கவும் சகல புண்ணியங்களையும் கற்பித்து இவைகளை அநுசரிக்கவும் எல்லா மனிதரையும் தூண்டிக்கொண்டு வருகின்றது.
3-வது, தன் அங்கத்தவர்களாகிய விசுவாசிகளுள் அநேகரில் பரிசுத்தமாயிருக்கின்றது. எப்படியெனில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் அபூர்வமான அர்ச்சியசிஷ்ட தனத்தால் பிரகாசிக்கும் சுத்தவாளர்கள் அநேகர் அதில் உண்டு. அவர்களுடைய உறுதியான விசுவாசத்தையும் உயர்ந்த புண்ணியங்களையும் சுத்தமான ஒழுக்கத்தையும் சருவேசுரன்தாமே ஆச்சரியமான அற்புதங்களால் உலகத்துக்கு அத்தாட்சிப்படுத்தியுமிருக்கிறார்.
புரோட்டெஸ்தாந்து சபைகளில் பரிசுத்தத்துக்குரிய அடையாளங்கள் ஒன்றுமில்லை. அவைகளை உண்டாக்கினவர்களெல்லாரும் ஆங்காரிகளும் புகழ்ச்சிப்பிரியருந் தூர்த்தருமென்பது உலகமறிந்த விஷயமேயாம். சகல பாவங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் அகலத் திறந்த வாசல்கள் புரோட்டெஸ்தாந்து மதங்களேயென்பது சொல்வாருமின்றி விளங்கும்.
ஏனெனில், விசுவாச விஷயத்தில் ஒவ்வொருவனும் தன் தனக்குப் பிரியமானவைகளை அங்கீகரித்துக் கொள்ளலாம் என்பதும், நான் நீதிமானாக்கப் பட்டிருக்கிறேன் என்று விசுவசிக்கிறது மாத்திரமே ஒருவன் சுத்தவாளனாய் இருக்கிறதற்குப்போதும் என்பதும் முதலானவைகளே அம்மதங்களின் மதிகேடான போதனைகளாம். நற்கிரியைகளின்றி விசுவாசமொன்றே ஆத்தும ஈடேற்றத்துக்குப் போதும் என்று சாதிக்கும் சபைகளும் அநேகமுண்டு.
புரோட்டெஸ்தாந்து சபைகளுள் யாதொன்று தன் போதகத்தின் உண்மைக்கும் தன் அநுசாரிகளின் பரிசுத்தத்துக்கும் அத்தாட்சியாக நிகழ்ந்த ஒரு சிறு அற்புதத்தையாவது எடுத்துக்காட்ட வல்லதோவெனில், ஒருபோதுமில்லை. இவ்வாறே கிரேக்க பிரிவினைச் சபைகளைப்பற்றியும் சொல்லத்தகும். ஆதலால், புரோட்டெஸ்தாந்து சபைகளாவது கிரேக்க சபைகளாவது பரிசுத்தமானவைகள் அல்லவென்றும் கத்தோலிக்கு திருச்சபை ஒன்றே பரிசுத்தமானது என்றும் தீர்மானித்துக் கொள்ளக்கடவோம்.