விக்கிரக ஆராதனை

1. விக்கிரக ஆராதனை ஆவதென்ன?

சர்வேசுரனுக்குச் செலுத்த வேண்டிய தேவ ஆராதனையைச் சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துகளுக்குச் செலுத்துவதே விக்கிரக ஆராதனை எனப்படும்.


2. இந்தப் பாவத்தின் தோஷம் எதில் அடங்கியிருக்கிறது?

விக்கிரக ஆராதனையால் மனிதன் மெய்யான சர்வேசுரனுடைய மகிமையை அவரிடமிருந்து பறித்து எடுக்கவும், அவரையே நிர்மூலமாக்கவும் பிரயாசைப்படுவதில் அடங்கும்.


3. சில சமயங்களில் சர்வேசுரன் அப்பாவத்தைக் கண்டிப்பாய்த் தண்டித்தாரா?

மோயீசன் சீனாய் மலையின்மேல், சர்வேசுரனோடு பேசிக் கொண்டிருக்கும்போது கீழேயிருந்த ஜனங்கள் அவர் இறங்கி வரத் தாமதிக்கிறதைக் கண்டு, ஒரு பொன் கன்றுக்குட்டியைச் செய்து, அதற்கு முன்னால் ஆடிப்பாடி ஆராதித்தார்கள். அத்தருணத்தில் மோயீசன் மலையினின்று இறங்கிவந்தார். இந்தக் காட்சியைக் கண்டவுடனே, கண்களில் நெருப்புப் பொறி பறக்க, கோபாவேசம் கொண்டு கையிலிருந்த கற்பனைப் பலகைகளைக் கீழே எறிந்து உடைத்து விட்டார்.  மேலும் அப்பாவத்துக்குத் தண்டனையாக சர்வேசுரன் கட்டளைப்படி, லேவி கோத்திரத்தாரை நோக்கி, கூடாரங்களைச் சுற்றிப் போகவும், எதிர்ப்படுகிறவர்களைக் கொன்று விடவும் சொன்னார். அச்சமயத்தில் இருபத்து மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் (யாத். 32:28).


4. விக்கிரக ஆராதனை செய்கிறவர்கள் யார்? 

(1)  பசாசையும், பொய்த்தேவர்களையும் ஆராதிக்கிறவர்கள்;

(2)  பசாசின் உதவியைத் தேடி, பலிகள் செய்து வேண்டிக் கொள்ளுகிறவர்கள்;

(3)  அஞ்ஞானச் சிலைகளைக் கை எடுத்துக் கும்பிடுகிறவர்கள்;

(4)  அவைகளுக்குத் தோத்திரமாகத் தேங்காய் உடைக்கிறவர்கள்; பூ, சாம்பிராணி, நெய் முதலியவைகளை ஒப்புக்கொடுக் கிறவர்கள்;

(5)  படைப்புண்ட வஸ்துக்களாகிய அக்கினி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்களையும், மிருகம், பாம்பு, குரங்கு, பறவை, மரம் முதலியவைகளையும் தெய்வங்களாக வணங்குகிறவர்கள் முதலானவர்களாம்.


5. மேற்கூறியவைகளைச் செய்யாதபோதிலும், இன்னும் கிறீஸ்தவர்களுக்குள் சிலர் எப்படிப் பேய் ஆராதனை செய்து வருகிறார்கள்?

(1)  பசாசுகளின் சிலைகள், கோவில்கள், பந்தல்கள் முதலியவைகளைச் சிங்காரிப்பதாலும்,

(2)  தீவட்டி, கொடிகள் பிடிப்பதாலும்,

(3)  சிலைகளின் சுற்றுப் பிரகாரத்தின்போது நடைபாவாடை விரிப்பதாலும்,

(4)  அஞ்ஞானத் தேர்களைத் தாங்களும் சேர்ந்து இழுப்பதாலும்,

(5)  மற்றவர்கள் அதை இழுக்கும்படிசெய்வதாலும்,

(6)  அஞ்ஞானக் கோவில்களிலே அல்லது சுற்றுப் பிரகாரங்களிலே பாடுவதாலும்,

(7)  அஞ்ஞானத் திருவிழாவுக்கு வரிப்பணங் கொடுப்பதாலும்,

(8)  மேளம் கொட்டுவதாலும், 

(9)  அஞ்ஞானக் கோவிலைக் கட்டுவதாலும்,

(10) மற்றவர்கள் வைத்து வணங்குவதற்காகப் பொம்மைகளையும் சிலைகளையும் செய்து விற்பதாலும்.


6.   அஞ்ஞானத் தேர் தெருவிலே போகிறபோது அதைப் பார்ப்பது பாவமா?

அஞ்ஞானச் சிலைகளைக் கும்பிடாமல், வெறும் வேடிக்கையாய்த் தேரைப் பார்க்கிறது பாவமல்ல. ஆனால் நேர்த்தியாக நல்ல ஆடைகளைத் தரித்து, நகை நட்டுகளை டம்பமாய் அணிந்து கொண்டு தேரைப் பார்க்கப் போகிறது பாவமாகும்.


7. அஞ்ஞானிகளான தங்கள் எஜமான்களால் மேற்கூறிய பணிவிடைகளைச் செய்யும்படி கிறீஸ்தவர்கள் கற்பிக்கப்படும்போது, இவர்கள் தங்கள் வேலையையும், வரும்படியையும், உரிமைகளையும் இழந்து போகாதபடிக்கு அவைகளைச் செய்ய உத்தரவு இல்லையா?

நிச்சயமாக இல்லை.  பசாசுக்கு ஊழியமாக இவை செய்யப்படுவதினால், எஜமானின் அபிமானத்தையும், வேலையையும், ஆஸ்தி பாஸ்திகளையும், உரிமைகளையும், உயிரையும் முதலாய் இழக்க வேண்டியிருந்தாலும் ஒருபோதும் அவைகளைச் செய்யக் கூடாது.


சரித்திரம்

தியோக்கிளேசியன் ஆட்சி செலுத்திய காலத்தில் சிற்ப வேலையில் தேர்ந்த 5 வேலையாட்கள் இருந்தார்கள்.  இவர்கள் உத்தம கிறீஸ்தவர்கள்.  சேசுகிறீஸ்து நாதருடைய திருநாமத்தை உச்சரியாமல் எந்த வேலையையும் துவக்க மாட்டார்கள். அக்காலத்தில் அரசன் ஒரு சிறந்த அரண்மனையைக் கட்ட உத்தேசித்து, கொத்து வேலையிலும், சிற்ப வேலையிலும் கைதேர்ந்த மேற்கூறிய 5 வேலையாட்களுக்கு அந்த வேலையை ஒப்புவித்தான். சிற்பிகள் மாதிரிகையில் கண்டபடி இலை, கொடி, பூ, பறவைகள், மிருகங்கள் முதலிய ரூபங்களை மகா திறமை சாமர்த்தியத்துடன் சகலரும் அதிசயிக்க, சலவைக் கல்லில் கொத்து வேலை செய்தார்களேயன்றி, பொய்த் தேவனுடைய சிலையை மாதிரிகையில் கண்டபடி கட்டிடத்தின் மத்தியில் செதுக்காமல் அந்த இடத்தைக் காலியாய் விட்டார்கள்.

கட்டிடத்தை அரசன் போய்ப் பார்த்தபோது வேலைக்காரரைப் புகழ்ந்து கொண்டாடினான்.  ஆனால் மாதிரிகையில் கண்டபடி தன் தேவனுடைய சிலையைச் செதுக்காததற்குக் காரணம் ஏதென்று வேலைக்காரரைக் கோபத்துடன் வினவ, 5 சிற்பிகளும்: பேரரசனே! நாங்கள் சத்திய கடவுளை வணங்கும் கிறீஸ்தவர்கள், பொய்த் தேவர்களுடைய ரூபங்களைச் செய்வது எங்களுக்குப் பாவமாகும் என்று தைரியத்துடன் சொல்லக் கேட்ட அரசன், அவர்களை நிஷ்டூரமாய் அடிப்பித்து, ஒரு இருப்புப் பெட்டியில் போட்டுப் பூட்டி, ஆற்றில் எறிந்துபோடும்படி கற்பித்தான்.  இவ்வாறு அந்த   5 பேரும் வேதசாட்சி முடி பெற்றார்கள். (னி.மூ.னி. V. ஹிலி. 286).


8. பேய்க் கோவிலுக்காகச் சாமான்களை விற்கலாமா?

பூ, சாம்பிராணி, தேங்காய், எண்ணெய், செங்கல், சுண்ணாம்பு முதலிய சரக்குகளை, அஞ்ஞானக் கோவில்களுக்காக வாங்கிக் கொண்டு போகிறார்களென்று தெரிந்தபோதிலும், வியாபாரி, தன் பிழைப்புக்கு அவசியமாயிருக்கும்போது, அவைகளை மற்ற இலெளகீக விஷயங்களுக்கு விற்கிறதுபோல் பொதுவில் விற்கலாம். ஆனாலும் இச்சாமான்களை ஒருக்காலும் பேய்க் கோவில்களுக்காகிலும், பந்தல்களுக்காகிலும் தாங்களே அனுப்பவும் கொண்டு போகவும் கூடாது.  ஏனெனில், இது பேயாராதனைக்கு உதவி செய்வதற்கு ஒப்பாகும். அஞ்ஞானிகள் தாமே அந்தச் சாமான்களை வாங்கி, தாங்களே பேய்க் கோவிலுக்குக் கொண்டு போகிறதினால் வியாபாரி அச்சமயத்தில் பேயாராதனைக்கு நேராய் உடந்தையாயிருக்கிறதில்லை. ஆனாலும் இப்படி விற்பது பிறருக்குத் துர்மாதிரிகையாயிருந்தால் அவைகளை விற்கவே கூடாது.


9. பாட்டுக்காரரும், கொட்டுமேளக்காரரும் அஞ்ஞானிகளின் கலியாணத்துக்கும் அடக்கத்துக்கும் போகலாமா?

தங்கள் ஆத்துமத்துக்கு மோசமில்லாதபோது போகலாம். ஆனால் பேயாராதனை நடக்கும்போது அதில் சேர்ந்து, அந்த ஆராதனைக்கு விசேஷ விதமாய்ப் பாடுகிறதும், கொட்டுகிறதும் கூடாது.


10. பசாசுக்கு படைத்த பொருட்களை வாங்கிச் சாப்பிடலாமா?

(1) பலி ஒப்புக்கொடுத்தவர்களோடு ஒருபோதும் சாப்பிடலாகாது.

(2)  பலி நடக்கும் இடத்திலல்லாமல், வேறே இடத்தில் யாராகிலும் இவைகளைக் கொடுத்தால், பிரசாதமாகவும், திருப் போசனமாகவும் எண்ணாமலும், திருப்பண்டம் போல் வாங்காமலும், பசாசின்மேல் நோக்கம் ஒன்றுமின்றி, பசிக்காக மாத்திரம் அதைச் சாப்பிட்டால் பாவமில்லை.

(3)  ஆனால் படைத்த பொருளைத் தின்பதினால் அறியாதவர்களுக்குத் துர்மாதிரிகை உண்டாகும் என்றிருந்தால் அதைச் சாப்பிடலாகாது.  “கிறீஸ்துநாதர் உன் சகோதரனுக்காக மரித்திருக்கையிலே, நீ உன் போசனத்தினிமித்தம் அவனைக் கெடுக்காதே” (உரோ. 14:15,20,21). 


11. அஞ்ஞானிகளிடமிருந்து திருநீறு வாங்கிப் பூசிக்கொள்ளலாமா?

அது விலக்கப்பட்டிருக்கிறது.


12. எப்போதாகிலும் பசாசின் ஒத்தாசையைக் கேட்கலாமா?

எந்த நன்மையை அடைவதற்காகிலும், எந்தத் தின்மையை நீக்குவதற்காகிலும், ஒருபோதும் பசாசின் உதவியைக் கேட்கக் கூடாது.  ஆகையினாலே வியாதியாயிருக்கும்போது, அஞ்ஞான வைத்தியர்கள் பேய்க்காரியம் செய்யவும், வியாதிக்காரனை மந்திரிக்கவும் சம்மதிக்கக் கூடாது.

இவ்வித சமயங்களில் மற்றவர்கள் தங்கள் பெயராலே பசாசுக்குப் பலி செய்யும்படி ஏவுவதும், பணங்கொடுப்பதும், தாங்களே செய்வதற்கு ஒப்பாயிருக்கும்.