1. பிரமாணம் என்றால் என்ன?
தான் சொல்லுவதும், தான் வாக்குக் கொடுப்பதும் உண்மையென்று காட்டும்படி சர்வேசுரனுடைய திருநாமத்தைச் சாட்சியாக அழைப்பதே பிரமாணமாம்.
2. எத்தனை விதம் பிரமாணம் செய்யலாம்?
மூன்று விதமாய்ப் பிரமாணம் செய்யக்கூடும்.
(1) வார்த்தையினால் வெறும் ஆணையிடலாம். உதாரணமாக: நான் இதை ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
(2) யாதொரு அறிகுறியினால் சத்தியம் என்னும் பிரமாணம் பண்ணக்கூடும். உதாரணமாக: சுவிசேஷம், சிலுவை, சுரூபம், பீடம் முதலியவைகளைக் கையால் தொடுதல், அல்லது கையைத் தூக்கிக் காட்டுதல்.
(3) எழுத்து மூலமாய்ப் பிரமாணம் செய்யக்கூடும். உதாரணமாக: நான் பிரமாணம் செய்து எழுதுகிறதாவது.
3. மெய்யான பிரமாணத்துக்கு அவசியமானது எது?
1-வது.--சர்வேசுரனைச் சாட்சியாக அழைக்கும் கருத்தோடு பிரமாணம் செய்யவேண்டும். இக்கருத்தின்றிப் பிரமாணத்துக் கடுத்த வார்த்தைகளை மாத்திரம் உச்சரித்தால், அதைப் பிரமாண மென்று நியாயமாய்ச் சொல்ல முடியாது.
2-வது--நேராகவாவது: உதாரணமாக: கடவுளுக்கு முன்பாகச் சொல்கிறேன் என்பதினால்; அல்லது தேவமாதா, அர்ச்சியசிஷ்டவர்கள், சுவிசேஷம், திருச்சபை முதலிய சிருஷ்டிகளின் மூலமாக வாவது; உதாரணமாக: கண்ணாணை அல்லது அப்பாணை, அல்லது காதாணை சொல்லுகிறேன், என் மனச்சாட்சிப்படி சொல்கிறேன் என்பதால் சர்வேசுரனைச் சாட்சியாக அழைக்க வேண்டும்.
4. சர்வேசுரனைச் சாட்சியாக அழைக்கக் கருத்தின்றிச் செய்யும் பிரமாணம் எப்பேர்ப்பட்ட பாவம் ஆகும்?
அது ஓர் பிரமாணமென்று சொல்லமுடியாததால், சாதாரணமாய்ச் சாவான பாவம் ஆகாது. ஆனால் அப்படிச் செய்கிறவன் சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாய்ப் பிரயோகம் செய்வதால், அற்பப்பாவம் கட்டிக் கொள்ளுகிறான்.
5. பிரமாண விஷயத்தில் சேசுநாதர் நமக்குக் கற்பிக்கிறதென்ன?
“ஆணையிடாதே... உங்கள் பேச்சு ஆம், ஆம்; இல்லை, இல்லை என்பதாயிருக்கக்கடவது” (மத். 5:36,37).
6. பிரமாணம் செய்ய எப்போதாவது உத்தரவு உண்டோ?
சர்வேசுரன் தமதுமேல் தாமே அநேக முறை ஆணையிட்டார் என்றும், (ஆதி. 22:16; யாத். 32:13; சங். 109:4) பற்பல சந்தர்ப்பங் களில் அர்ச். சின்னப்பர் சத்தியபிரமாணம் செய்தாரென்றும், (உரோ. 1:9; 9:1; 2; 2 கொரி. 1:23; கலாத். 1;20) வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம். ஆகவே, முறையான திட்டங்களை அனுசரித்து, நாம் செய்யும் பிரமாணமானது சர்வேசுரனை ஸ்துதிக்கும் தேவ பக்திக் குரிய ஒரு முயற்சியாம். ஏனெனில், அப்படிப்பட்ட பிரமாணத்தால் நாம் சர்வேசுரனுடைய சர்வ ஞானத்தையும், சர்வ சத்தியத்தையும், கர்த்தத்துவத்தையும் பிரசித்தமாய் வெளிப்படுத்துகிறோம்.
7. பிரமாணம் செய்ய கடமை நேரிடக்கூடுமா?
திருச்சபையின் நன்மைக்காகவாவது, பொது நன்மைக்காக காவது, உத்தியோகம் பார்க்கத் தொடங்கும்பொழுதுதாவது சத்தியப் பிரமாணம் செய்யக் கடமையாகும்.
8. குற்றமின்றிப் பிரமாணம் செய்வதற்கு எத்தனை காரியம் வேண்டும்?
“ஆண்டவர் வாழி என்று உண்மையாயும், விவேகமாயும் பிரமாணிக்கம் பண்ணு” என்று தீர்க்கதரிசியான எரேமியாஸ் வசனித்தார் (எரே.4:2). ஆகையினாலே:
1-வது.. தான் சொல்லும் காரியம் உண்மையாய் இருக்க வேண்டும்.
2-வது. நன்றாய் யோசனை செய்து, கனமும் அவசியமுமுள்ள விஷயங்களைப் பற்றி மாத்திரம் செய்ய வேண்டும்;
3-வது. பிரமாணம் செய்யும் காரியம் நியாயமானதாய் இருக்கவேண்டும். பாவமின்றிச் செய்யக் கூடியவைகளைப் பற்றி மாத்திரம் நாம் வாக்குக் கொடுக்கலாம்.
4-வது. தான் வாக்குக் கொடுக்கும் காரியத்தை நிறை வேற்றக் கருத்தாய் இருக்க வேண்டும்.
9. உண்மைக்கு விரோதமாய்ப் பிரமாணம் செய்கிறவர்கள் யார்?
(1) பொய்யான காரியத்தை மெய்யென்று பிரமாணம் செய்து சாதிக்கிறவர்களும்; உதாரணமாக: அர்ச். இராயப்பர் ஒரு வேலைக்காரி முகத்துக்கு அஞ்சி, சேசுநாதரை அறியேனென்று சத்தியமாய்ச் சொன்னபோது பொய்யாணையிட்டார்.
(2) ஒரு காரியத்தை நிறைவேற்றக் கருத்தில்லாதிருந்த போதி லும் நிறைவேற்றுவேனென்று பிரமாணம் செய்து வாக்குக் கொடுக் கிறவர்களுமாம்.
10. பொய்யாணை அல்லது பொய்ச்சத்தியம் செய்கிறது எப்படிப்பட்ட பாவம்?
(1) பொய்யான காரியம் சிறியதாயிருந்தாலும் சரி, கனமான தாயிருந்தாலும் சரி, அதை மெய்யென்று மனது பொருந்திப் பிரமாணம் செய்து சாதிப்பது எப்போதும் சாவான பாவமாகும். ஏனென்றால், பொய்யான காரியத்துக்குச் சாட்சியாகச் சத்திய சுரூபியாயிருக்கிற சர்வேசுரனை அழைக்கிறது அவருக்குப் பெரிய நிந்தையும் அவமானமுமாயிருக்கிறது.
11. சந்தேகமான காரியத்தை மெய்யென்று பிரமாணம் செய்யலாமா?
ஒரு காரியம் சந்தேகமாயிருக்கும்போது, அதைப்பற்றிப் பிரமாணம் செய்யக்கூடாது, ஏனென்றால், அப்படிச் செய்கிறவன் பொய்ப்பிரமாணம் செய்யும் ஆபத்திலிருக்கிறான்.
12. அவசியமின்றிப் பிரமாணம் செய்கிறவர்கள் யார்?
சர்வேசுரனின் மகிமைக்காவது, தனக்காவது, பிறருக்காவது யாதொரு பெரிய பிரயோசனமுமில்லாமல் இருக்கும்போதோ, அல்லது அற்ப விஷயத்தைப் பற்றியோ பிரமாணம் செய்கிறவர்களாம்.
13. அவசியமின்றி உண்மையான பிரமாணம் செய்கிறது பாவமா?
உண்மையான காரியத்தைப் பற்றி முதலாய்த் தக்க காரணமின்றியும், யோசனையின்றியும் சத்தியம் செய்வதும், ஆணையிடு வதும் சாதாரணமாய் அற்பப்பாவமாம். ஏனென்றால், அது சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாய்ப் பிரயோகித்தலாக மாத்திரம் இருக்கிறது.
14. தீமையான காரியத்தைச் செய்ய சத்தியம் செய்யலாமா?
ஒருக்காலும் கூடாது. ஏனென்றால், அது அநியாயமான பிரமாணமாகும்.
15. நியாயத்துக்கு விரோதமான பிரமாணம் செய்கிறவர்கள் யார்?
(1) தீமையானதும், பாவமானதுமான விஷயங்களுக்காக வாக்கு அளிக்கிறவர்களும், உதாரணமாக: பிறருக்கு இன்னின்ன நஷ்டத்தை வருவிப்பேன்.
(2) தாங்கள் சொன்ன புறணியையும்,
(3) அல்லது வெளிப்படுத்தக்கூடாத இரகசியத்தையும் மெய்யென்று காட்டும்படி பிரமாணஞ் செய்கிறவர்களுமாம்.
16. நியாயத்துக்கு விரோதமான பிரமாணம் எப்பேர்ப்பட்ட பாவம்?
(1) வாக்களித்த காரியம் சாவான பாவமாயிருந்தால் அப்பேர்ப்பட்ட பிரமாணம் சாவான பாவமாம்.
(2) அநியாயமாய்ச் சொன்ன உண்மையான விஷயம் மெய்யென்று காட்டும்படிச் செய்யும் பிரமாணம் தன்னிலே அற்பப்பாவமாகும். ஆனாலும் சில சமயங்களில் புறத்தியாருக்கு உண்டான பெரிய நஷ்டத்தினிமித்தம் சாவான பாவமாயிருக்கும்.
17. ஆணையிட்டுச் செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றாவிட்டால் குற்றமா?
யாதொரு நல்ல காரியத்தைச் செய்வதாகப் பிரமாணஞ் செய்து நிறைவேற்றாவிட்டால், பாவமாகும். ஏனென்றால் நமது வாக்குத் தத்தத்துக்குச் சர்வேசுரனையே சாட்சியாகக் கூப்பிட்டபிறகு அதை நிறைவேற்றாததினால், சர்வேசுரன்மட்டில் வெகுசங்கைக்குறைவாய் நடக்கிறோம்.
சவுல் இராஜா காபாவோனித்தருக்குச் சத்தியம் செய்து, அவர்களைக் கொல்வதில்லையென்றும், அவர்கள் உயிரைக் காப்பாற்றுவதாகவும் வாக்குக் கொடுத்திருந்தான். ஆனால் அவன் அந்தச் சத்தியத்தின்படி நடவாததால், அவனுடைய குமாரரில் ஏழு பேர் தாவீது இராஜாவின் உத்தரவுப்படி சிலுவையில் அறையப் பட்டார்கள். இது தவிர அவன் செய்த பொய்ச் சத்தியத்துக்குத் தண்டனையாக, சர்வேசுரன் மூன்று வருஷம் கடின பஞ்சத்தை அனுப்பினாரென்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம் (2 அரசர் 21.)
18. அவ்வித பிரமாணத்தில் தவறிப்போகிறது எத்தனை பாவமாகும்?
இரட்டிப்பான பாவமாகும். அதெப்படியென்றால், அது நியாயத்துக்கும், பிரமாணிக்கத்துக்கும் விரோதமாயிருப்பதுமன்றி, தேவ பக்தியாகிற புண்ணியத்துக்கும் விரோதமான பாவமாகின்றது.
19. பிரமாணத்தை அனுசரியாமலிருக்கிறது எப்பேர்ப்பட்ட பாவம்?
கனமான விஷயங்களில் மாத்திரம் சாவான பாவமாகும்.
20. தீமையான காரியத்தைச் செய்வதாகப் பிரமாணம் செய்திருந்தால், அதை நிறைவேற்றக் கடமையுண்டா?
கடமையுண்டென்று ஒருக்காலும் நினைக்கவேண்டாம். அதை நிறைவேற்றுகிறவன் தேவபக்தியென்னும் புண்ணியத்திற்கு விரோதமாகவும், தன் பிரமாணத்தை நிறைவேற்றுவதால், எந்தப் புண்ணியத்துக்கு விரோதமாகவும் இரட்டிப்பான பாவம் கட்டிக் கொள்ளுகிறான். அவ்வாறு ஏரோது, தன் ஆணையைப்பற்றி அர்ச். ஸ்நாபக அருளப்பர் தலையை வெட்டக் கட்டளையிடும்போது (மத்.14:8) இரட்டிப்பான பாவம் கட்டிக் கொண்டான்.
21. பிரமாணத்தால் உண்டாகும் கடமையை நீக்கக்கூடுமா?
சர்வேசுரனுக்குக் கொடுத்த சாதாரணமான ஓர் வார்த்தைப்பாட்டை நீக்கப் போதுமான காரணமே, பிரமாணத்தினால் வரும் கடமையையும் நீக்கப் போதும்.
22. பொய்யாணை, பொய்ச் சத்தியம் என்னும் பாவத்தில் விழாதபடி செய்யவேண்டியதென்ன?
சேசுநாதர் கற்பித்தபடி எவ்வித சத்தியத்தையும் விலக்க வேண்டும். “பொய்யாணையிடாமல், ஆண்டவருக்கு உன் ஆணை யைச் செலுத்துவாயாகவென்று பூர்வீகத்தாருக்குச் சொல்லப்பட்ட தாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களே. நானோ எவ்விதத்திலும் ஆணையிட வேண்டாமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரலோகத்தின்மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், அது சர்வேசுரனுடைய சிம்மாசனமாயிருக்கின்றது. பூலோகத்தின் மேலும் வேண்டாம், ஏனெனில், அது அவருடைய பாதப்படியா யிருக்கின்றது... நீ உன் தலையின்மீதும் ஆணையிடாதே... ஆகை யால், உங்கள் பேச்சு ஆம், ஆம்; இல்லை, இல்லை என்பதாயிருக்கக் கடவது. இவைகளுக்கு மேற்பட்டது தின்மையால் உண்டாகிறது” (மத். 5:33-37).