57. தேவசுதனுடைய மனுஷ அவதாரம் என்கிற பரம இரகசியம் ஆவதென்ன?
தேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் தேவ சுதன் என்கிற ஒரே ஆளிடமாகப் பிரியாத தன்மையாய் ஒன்றித்திருக்கின்றன என்பதாம்.
1. இந்தப் பரம இரகசியத்தால் என்ன விசுவசிக்கிறோம்?
(1) தேவ சுபாவமும், மனித சுபாவமும் தேவசுதன் என்கிற ஒரே ஆளிடம் ஒன்றித்திருக்கின்றன;
(2) இவ்விரண்டு சுபாவமும் தேவ சுதனிடத்தில் பிரியாத தன்மையாய் ஒன்றித்திருக்கின்றன.
2. ஆள் என்பது என்ன?
தன்னிலே நிலைத்திருந்து, வேறொரு வஸ்துவின் உதவியின்றித் தன் சுபாவத்துக்குரியவைகளை யெல்லாம் செய்து, அவைகளுக்கு உத்தரவாதியாயிருக்கும் ஓர் அறிவுள்ள வஸ்துவே ஆள் என்று சொல்லப்படும்.
3. இந்தப் பதிலில் எத்தனை விசேஷங்கள் குறிக்கப்பட்டிருக் கின்றன?
நான்கு. ஆள் என்பது:
(1) தன்னிலே நிலைத்திருக்கும் ஒரு வஸ்து.
(2) அறிவுள்ளதும்,
(3) வேறொரு வஸ்துவின் உதவியின்றித் தன் சுபாவத் துக்குரியவைகளை யெல்லாம் செய்யக் கூடியதும்,
(4) தான் செய்தவைகளுக்குப் பொறுப்புள்ளதுமா யிருக்கும் வஸ்து.
4. நம்மிடத்தில் அடங்கிய இரண்டு பிரதான காரியங்கள் எவை?
மனித சுபாவத்தை உண்டாக்குகிற சரீரம், ஆத்துமம் ஆகிய இவ்விரண்டுமாம்.
5. நம்மிடத்தில் சரீரம், ஆத்துமம் ஆகிய இவ்விரண்டும் இருந்தாலும் நம்மிடத்தில் எத்தனை ஆள் உண்டு?
ஒரே ஒரு ஆள்.
6. ஆளுக்கும் சுபாவத்துக்குமுரிய வித்தியாசம் என்ன?
சுபாவமானது நமது கிரியைகளுக்கும், அநுபவங் களுக்கும் ஆதி மூல காரணமாயிருக்கிறது. ஆத்துமம் சீவியத் துக்கடுத்த சகல செயல்களுக்கும் ஊற்றுப் போலிருக்கிறது. சரீரம் அவைகளை நிறைவேற்றும்படியாக உதவும் கருவியாம்.
ஆளோவென்றால் மனித சுபாவத்தின் வழியாக தன் சுபாவத்துக்குரிய செயல்களையயல்லாம் செய்து, அவைகளுக்குப் பொறுப்புள்ளதாயிருக்கிறது. ஆகையினாலே யாராவது ஒருவன் சாப்பிடும்போதும், நடக்கும்போதும், பேசும்போதும், அல்லது காய்மகாரப்படும்போதும், கோபம் கொள்ளும்போதும், தனது சரீரத்தை அல்லது ஆத்துமத்தைக் கொண்டு செய்தாலும், அவன் தன் சரீரம் சாப்பிடுகிறது, நடக்கிறது, பேசுகிறதென்றும், அல்லது தன் ஆத்துமம் காய்மகாரப்படுகிறது, கோபம் கொள்ளுகிறதென் றும் சொல்லாமல், நான்தான் சாப்பிடுகிறேன், காய்மகாரம் படுகிறேன் என்று சொல்லுவான். அதைப் போலவே அவன் தன் சரீரத்தை அல்லது ஆத்துமத்தைக் கொண்டு செய்த குற்றங்களுக்குத் தனது சரீரம் அல்லது ஆத்துமம் பொறுப்புள்ளதாயிருக்கிறதாகச் சொல்லாமல், தான்தான், அதாவது தன் ஆள் அதற்கு உத்தரவாதி யாயிருக்கிறதாகச் சொல்லுவான். ஏனெனில், சரீரம், ஆத்துமம் ஆகிய இவ்விரண்டும் ஆளுக்குச் சொந்தமாயிருக்கிறபடியால், அவைகளின் வழியாகச் செய்யப்பட்டதெல்லாம் ஆள்தான் அவைகளைச் செய்ததாகவும், அவைகளுக்குப் பொறுப்பாளியா யிருக்கிறதாகவும் சொல்லுகிறது உறுதி.
7. சேசுநாதருக்கு எத்தனை சுபாவம்?
தேவ சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.
8. சேசுநாதரிடத்தில் இரண்டு சுபாவங்கள் இருக்க, அவருடைய ஆத்துமமும் சரீரமும் ஒரு ஆள்; அவருடைய தேவத்துவமும் வேறொரு ஆள், ஆக இரண்டு ஆட்கள் அவரிடத்தில் உண்டென்று சொல்லலாமோ?
ஒருபோதும் சொல்லவே கூடாது. ஏனென்றால், சுதனாகிய சர்வேசுரன் மனுஷாவதாரம் செய்யும்போது ஓர் மனுUக ஆளை எடுத்துக் கொண்டிருந்தால் சேசுநாதரிடத்தில் இரண்டு ஆட்கள் உண்டென்று சொல்லக் கூடுமாயிருக்கும். ஆனால் அவ்வித மனுஷிக ஆள் ஒருபோதும் சேசுநாதரிடத்தில் இருந்ததேயில்லை. ஆத்துமம் சரீரத்தோடு கூடவே, அதே கணத்தில் அந்த ஐக்கியத்தால் மனுஷ சுபாவமும் உண்டானது. அதே மனுஷ சுபாவமானது சொற்ப நேரமாகிலும் தனியே தான்தானே நிலைத் திருக்கவில்லை. அது மனுஷிக ஆளாயிருந்ததில்லை. சேசுநாதரின் மனு சுபாவம் உற்பவித்த கணத்தில், தேவ ஆள் அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, எப்போதும் அதை நடத்தி ஆண்டு வந்திருப்பதினால் சேசுகிறீஸ்துநாதரிடத்தில் ஒரே ஒரு ஆள் மாத்திரம் உண்டு.
9. அந்த ஆள் யார்?
அந்த ஆள் தேவ ஆள், தேவ சுதனாகிய சர்வேசுரன் தான்.
10. சேசுநாதரிடம் இரண்டு ஆட்கள் இருக்க முடியாதோ?
இருக்க முடியாது. உள்ளபடி அவர் மனித ஆளாகவும், தேவ ஆளாகவும் இரண்டு ஆட்களாயிருந்தால், அவர் நம்மை இரட்சிக்க முடியாது. ஏனெனில், சேசுநாதர்சுவாமியிடம் இரண்டு ஆட்கள் இருந்தால் அவர் மனித ஆளில் பாடுபடுவார். அப்படி அவர் மனித ஆளாகியமட்டும் பாடுபட்டிருந்தால் நமக்கு இரட்சணியம் கிடையாது. ஏனெனில், பாவத்தால் சர்வேசுரனுக்குச் செய்த துரோகத்துக்கு மனிதனால் முழு பரிகாரம் செய்யவே முடியாது. அப்பேர்ப்பட்ட துரோகத்துக்கு ஒரு தேவ ஆளால் மாத்திரம் தகுந்த பரிகாரம் செய்யக் கூடுமாயிருக்கிறது. ஆகையால் சேசுகிறீஸ்துநாதருடைய மனித சுபாவம் மனித ஆளோடு ஒன்றித்திராமல் ஒரு தேவ ஆளோடு ஒன்றித்திருக்கிறது முழுதும் அவசியம்.
11. வேத புஸ்தகத்தில் இரண்டு சுபாவங்களின் கிரியைகள் எத்தனை ஆளுக்குச் சொந்தமென்று சொல்லியிருக்கிறது?
இரண்டு சுபாவங்களின் கிரியைகள் வெவ்வேறாளுக்குச் சொந்தம் என்று சொல்லாமல், ஒரே ஆளுக்கு மாத்திரம் சொந்தம் என்று வேதாகமத்தில் சொல்லியிருக்கிறது.
சேசுகிறீஸ்துநாதர் “நான் அபிரகாமுக்கு முன்னிருந்தேன்” (அரு.8:58)...நானும் என் பிதாவும் ஒன்று (அரு. 10:30)... என் பிதாவுடையவைகளெல்லாம் எனக்குச் சொந்தம் (அரு. 16:15)... என்று சொன்ன போது தமது தேவ சுபாவத்துக்குரியவைகளைப் பற்றி மாத்திரம் இப்படிப் பேசினார்.
“தாகமாயிருக்கிறேன்” (அரு.19:28)... “என்னைவிட என் பிதா பெரியவர்” (அரு. 14:28)... “என் ஆத்துமம் மரணமட்டும் துக்கமாயிருக்கிறது” (மத்.26:38) என்று திருவுளம்பற்றினபோது, தமது மனுஷ சுபாவத்துக்குரியவைகளைப் பற்றி மாத்திரம் இவ்வார்த்தைகளை உரைத்தார்.
இந்த இரண்டு வகையான வாக்கியங்களிலும் பேசுகிறவர் ஒருவர்தான். ஏனெனில் சேசுநாதர்சுவாமியிடத்திலிருந்த இரண்டு சுபாவங்களும் ஒரே ஒரு ஆளுக்குத்தான் சொந்தம்.
12. எப்போதாகிலும் சேசுநாதருடைய தேவ சுபாவம், அவருடைய மனு சுபாவத்தை விட்டுப் பிரிந்து போகுமோ?
ஒருபோதும் பிரியாது. “சேசுகிறீஸ்துநாதர் நேற்றும் இருந்தவர், இன்றும் இருக்கிறவர், அவரே என்றும் இருப்பவர்” என்று அர்ச். சின்னப்பர் எழுதியிருக்கிறார் (எபி. 13:8).
13. சேசுநாதர் சிலுவையில் மரணத்தை அடைந்தபின், சுதனாகிய சர்வேசுரன் தமது ஆத்துமத்தையும் சரீரத்தையும் விட்டுப் பிரிந்து இருந்த தில்லையோ?
தேவ சுபாவமும், மனுஷ சுபாவமும் தேவ சுதனிடம் பிரியாத தன்மையாய் ஒன்றித்திருக்கிறபடியால், பாதாளத்திலிருந்த சேசுநாதருடைய ஆத்துமத்தையும், கல்லறையிலிருந்த அவருடைய சரீரத்தையும் அவருடைய தேவ சுபாவம் பிரிந்து இருந்ததில்லை.
14. தேவ சுபாவமும், மனித சுபாவமும் கொண்டிருக்கிற சேசுநாதர் எப்படி ஒரு ஆளாக மாத்திரம் இருக்கிறரென்று நம்மாலே கண்டுபிடிக்கக் கூடுமா?
மனிதனுடைய புத்தி அளவுள்ளதாயிருப்பதால், இரண்டு சுபாவமும் தேவசுதன் என்கிற ஒரே ஆளிடமாகப் பிரியாத தன்மையாய் எப்படி ஒன்றித்திருக்கின்றனவென்று நம்மாலே கண்டுபிடிக்க முடியாது.
15. ஒரே ஒரு தேவ ஆளில் இரண்டு சுபாவங்கள் ஐக்கியமானதால் திருச்சபை நமக்குப் படிப்பிக்கிற போதனைகள் எவை?
(1) சர்வேசுரனை ஆராதிப்பது போல் சேசுநாதரின் மனித சுபாவத்தையும் ஆராதிக்க வேண்டும். ஏனென்றால், அந்த மனுஷிகம் தேவ குமாரனுடையது. ஆகையினாலே சேசுநாதரின் திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், திரு இருதயத்தையும் ஆராதிப்பது நியாயம்.
(2) இந்த மனித சுபாவத்தின் சகல செயல்களும் சர்வேசுரனுடைய செயல்களாயிருக்கிறபடியால், சேசுநாதருடைய எவ்வித சிறு செயலும் அளவற்ற பேறுபலனுடையது.
(3) மனித சுபாவத்தைப் பற்றி மட்டும் சொல்லக் கூடிய சகலத்தையும் சர்வேசுரனாயிருக்கும் சேசுகிறீஸ்துநாதரைப் பற்றியும் சொல்லலாம். ஆகையால் சர்வேசுரன் பிறந்தார், பாடுபட்டார், மரித்தார் என்று சொல்வது உண்மையே. இவ்வாறே தேவ சுபாவத்துக்கு மட்டும் உரியவைகளையெல்லாம் மனிதனாயிருக்கும் சேசுகிறீஸ்துநாதரைப் பற்றிச் சொல்லலாம். மனுமகன் சர்வேசுரன், நித்தியர், சகல வல்லபமுள்ளவர் என்று சொல்வது சரியே.
16. தேவசுதன் என்கிற தேவ ஆளிடத்திலுள்ள இரண்டு சுபாவங்களின் ஐக்கியம் எப்படி அழைக்கப்படும்?
ஹைப்போஸ்டாட்டிக் (Hypostatic Union - அதாவது ஆளுக்குரிய) ஒன்றிப்பு எனப்படும்.