போர்ஜஸ் நகரில் கில்லார்டு என்னும் யூதன் ஒருவன் இருந்தான். அவன் நற்கருணையில் இயேசு இல்லை என்பதை அந்தோனியாரிடம் நிரூபித்துக் காட்டவும், அந்தோனியாரை வாதத்தில் வென்று காட்டவும் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.
ஒருநாள் இதுபற்றி அவனுக்கும் அந்தோனியாருக்கும் இடையே வெகுநேரம் வாக்குவாதம் நடந்தது. கடைசியில் அந்த யூதன் அந்தோனியாரிடம், "இதோ பாரும், நீர் சொல்லும்படி நற்கருணையில் இயேசு இருந்தால் அவரே அதை எண்பித்துக் காட்டட்டும். என்னிடம் ஒரு கழுதை இருக்கிறது. அதற்கு நான் இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்திருப்பேன். மூன்றாம் நாள் காலையில் அதைக் கடைத்தெருவுக்கு கொண்டு வருவேன். அப்போது நீரும் நற்கருணையை அங்கு கொண்டு வாரும். நான் கழுதைமுன் அதற்குப் பிடித்தமான தீனி (கொள்ளுவை) வைப்பேன். அந்த கொள்ளுவை அது விரும்பாது விட்டுவிட்டு நற்கருணை பக்கமாய் வந்து வணக்கம் செய்யுமானால், நானும் என் வீட்டாரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாய் ஆகி விடுவோம். இது உறுதி" என்றான். அந்தோனியாரும் இதை ஏற்றுக் கொண்டார்.
இரண்டு நாட்கள் அந்தோனியார் செபம், தவம் செய்து இறைவனிடம் மிக உருக்கமாக மன்றாடி வந்தார். அதே நேரத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் குறித்த நேரத்தில், குறித்த இடத்திற்கு வர காத்திருந்தார். ஒப்பந்தப்படி மூன்றாம் நாள் காலை திருப்பலி நிறைவேற்றி நற்கருணையை கையிலேந்தி, கிறிஸ்தவர்கள் அணி அணியாய் திரண்டுவர, திருப்பாடல்களை பக்தியுடன் பாடிக்கொண்டு வந்தனர்.
யூதனும் தனது பரிவாரங்களோடு அங்கே வந்தான். பட்டினிப் போடப்பட்டு பசியால் வாடிக்கொண்டிருந்த கழுதையையும் கொண்டு வந்து நிறுத்தினான். பின்பு நற்கருணை முன்பு கழுதையை நிறுத்தி அதன்முன் அவித்த கொள்ளு இருந்த கூடையையும் வைத்தான்.
அந்தோனியார் மக்கள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி, கழுதையை நோக்கி, "ஓ! பகுத்தறிவில்லா ஜந்துவே! நான் எவ்வளவு தகுதியற்றவனாக இருந்தாலும், என் கையிலிருக்கும், உன்னை உண்டாக்கியவர் பெரியவர். அவர் பெயரால் கட்டளையிருகிறேன், உடனே நீ இங்கு வந்து உன் கர்த்தர் முன் விழுந்து, அவரை வணங்கி ஆராதிப்பாயாக! உனது இந்த சாட்சியத்தைக் கொண்டு; இந்த நற்கருணையிலிருக்கும் இயேசுவுக்கு எல்லாப் படைப்புகளும் அடக்கம் என்பதை இவர்கள் எல்லோரும் நம்புவார்களாக!” என்று கம்பீரமாக மொழிந்தார்.
இதைக் கேட்ட கழுதை தன்முன் வைக்கப்பட்ட உணவை சற்றும் சட்டை பண்ணாமல் அந்தோனியார் பக்கம் திரும்பி நற்கருணை முன்பு மண்டியிட்டு தலை தாழ்த்தியது.
இந்த அருஞ்செயலை நேரில் பார்த்த மக்கள் அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தனர். பிற மதத்தினரும் கிறிஸ்தவர்களானார்கள். இறுமாப்புற்ற யூதனும், அவன் வீட்டாரும் தவற்றை உணர்ந்து கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்தனர். அதோடு இந்த நிகழ்வை என்றும் நினைவுபடுத்த கில்லார்டு என்ற அந்த யூதன் அந்த இடத்தில் தூய பேதுரு பெயரால் ஒரு கோயிலைக் கட்டி வைத்து, அங்கு வருவோர் போவோருக்கெல்லாம் நற்கருணையில் இயேசு மெய்யாகவே பிரசன்னமாக இருப்பதை எடுத்துரைத்து வந்தான். தூய அந்தோனியாரின் வாழ்வில் நடைபெற்ற இந்த பிரபல நிகழ்வு, நற்கருணையில் ஆண்டவர் மெய்யாகவே பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நிலைவாழ்வளிக்கும் உணவாகிய நற்கருணை என்னும் தன்னுடைய உடலைக் குறித்துப் பேசுகின்றபோது, அவருடைய சீடர்களுள் ஒருசிலர் “இதை ஏற்றுக்கொள்வது கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். இயேசுவின் வார்த்தைகள் உண்மையானவை; வாழ்வுதரும் ஆவியைக் கொடுப்பவை. அப்படியிருந்தும் சீடர்கள் இயேசு சொன்னதை நம்பாமல் இருந்தது மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது.
பல நேரங்களில் நாமும்கூட இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்காமல், ‘ஒரு சாதாரண அப்பத்துண்டில் எப்படி இயேசு இருப்பார்?’ என்று ஐயம் கொள்கின்றோம். “நற்கருணையில் ஆண்டவர் இயேசு உயிரோடு இருக்கின்றாரா? என்று சந்தேகப்படுபவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்” என்பார் அந்தியோக்கு நகர தூய இஞ்ஞாசியார். ஆம், நற்கருணையில் ஆண்டவர் இயேசு இருக்கின்றாரா என்று சந்தேகப்படுபவர்கள் எதைப் பற்றியும் சந்தேகப்படுவார்கள். அதனால் அவர்களைக் குறித்து நாம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். அதே நேரத்தில் நற்கருணையில் இயேசு உயிரோடு இருக்கின்றார் என்பதை நம்பி வாழவேண்டும்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் அவர் நற்கருணையில் உண்மையாகவே பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை நம்பி, அவருக்கு ஏற்ற வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.