கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசம் மற்றும் போதனைப்படி, திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் உடலாகவும், இரசம் அவரது இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன; மேலும் இயேசு தனது ஆன்மாவோடும் இறைத் தன்மையோடும் அவற்றில் பிரசன்னமாகி இருக்கிறார். அர்ப்பண பொருட்களின் வெளித் தோற்றமும் பண்புகளும் மாற்றம் அடையாமலே இவை நடைபெறுகின்றன. இது பொருள் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவை தனித்தனியே ஒப்புக்கொடுக்கப்படுவது, கல்வாரியில் இயேசுவின் உடலில் இருந்து இரத்தம் தனியே பிரிக்கப்பட்டதை அடையாளப்படுத்துகிறது. இருந்தபோதிலும் அவர் உயிர்த்து எழுந்ததால், அவரது உடலும் இரத்தமும் எப்போதும் பிரிந்திருப்பதில்லை என்று திருச்சபை போதிக்கிறது; ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கிறது. எனவே, குருவானவர் அப்பத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் உடல்" என்றும், இரசக் கிண்ணத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் இரத்தம்" என்றும் கூறினாலும் அங்கு கிறிஸ்து முழுமையாக பிரசன்னமாகி இருக்கிறார்,
சீர்திருத்த காலத்துக்கு பிறகு, நற்கருணை மீதான பக்தி முயற்சிகள் தவறான கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு சிலை வழிபாடாக கருதப்பட்டன. ஆனாலும் கத்தோலிக்க திருச்சபை, நற்கருணையில் இயேசு கிறிஸ்துவின் உண்மை பிரசன்னம் இருப்பதை இன்றளவும் நம்பி ஏற்று வருகிறது. இதற்கு காரணம் வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு நற்கருணை அற்புதங்கள் ஆகும்.
நற்கருணை அற்புதங்கள் மூன்று வகைப்படும். அவை,
1. நற்கருணை அப்பமும் இரசமும், உண்மையான சதையாகவும் இரத்தமாகவும் மாறுதல்.
2. நற்கருணை அப்பம் பல ஆண்டுகள் அழியாமல் இருத்தல்.
3. நற்கருணையின் பிரசன்னத்தால் அதிசயங்கள் நிகழ்தல்.
பல பேர் இப்பொழுது சொல்வது போல் நற்கருணை வெறும் பகிர்வின் அடையாளம் மட்டும் அல்ல. அது இயேசுவின் திருவுடலும் கூட. நற்கருணையில் நடந்த புதுமை என்பது கத்தோலிக்க திருப்பலியில் எழுந்தேற்றம் செய்யும்போதோ அல்லது பிட்கும் போதோ நடந்த புதுமைகள், குறிப்பாக அப்பமும், திராட்சை ரசமும் இயேசுவின் திருவுடலாகவும், திருரத்தமாகவும் மாறிய நிகழ்வாகும்.
கத்தோலிக்க விசுவாசத்தின்படி திருப்பலியில் எழுந்தேற்றம் நடக்கும் பொழுது அப்பமும் இரசமும் வெளித்தோற்றத்தில் அவ்வாறே இருந்தாலும் கிறிஸ்து இயேசுவின் திருவுடலும் திருரத்தமுமாக மாறுகிறது. ஆனால் சில கத்தோலிக்கர்கள் கூட இதில் அவிசுவாசம் கொள்கின்றனர்.
மிகவும் வருந்த வைக்கும் விதமாக விசுவாசத்தை வளர்க்க வேண்டிய சில குருக்களும் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் இல்லை என்றும் அது வெறும் பகிர்வின் அடையாளம் என்றும் கூறுகிறார்கள் அல்லது மறையுரையாற்றுகின்றார்கள்.
நற்கருணை புதுமையின் வகைகள்:
நடந்த புதுமைகளில் மிக அபூர்வமானது நற்கருணை மனித தசை போல் தோன்றியது. இத்தகைய புதுமை 8 ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் லான்சியானோவில் நடந்தது. லான்சியானோ நிகழ்வு மட்டும் தான் அப்பம் இயேசுவின் திருவுடலான நற்கருணை புதுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக நற்கருணை புதுமை என்பது, நற்கருணையிலிருந்து இரத்தம் கசிவதாக மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நற்கருணையாக மாற்றப்பட்ட அப்பம் (எழுந்தேற்றம் செய்யப்பட்ட அப்பம்) பல நூறு வருடங்களாகியும் கெடாமலிருப்பது, நெருப்பினாலும் பாதிக்கப்படாமலிருப்பது, திருடப்பட்ட நற்கருணை மறைந்து தேவாலயத்தில் தோன்றுவது, நற்கருணை மிதப்பது அல்லது பறப்பது ஆகியவை வேறு சில புதுமைகளாக கருதப்படுகிறது.