வார்த்தைப்பாட்டின் கடமை

1. வார்த்தைப்பாட்டை நிறைவேற்றக் கடன் உண்டா?

வார்த்தைப்பாடு கொடுத்தால், அதின் பொருளுக்கேற்ற விதமாயும், நமதுமேல் சுமத்திக்கொண்ட கடமைகளுக்கேற்ற பிரகாரமும், அதை நிறைவேற்றுவது கண்டிப்பான கடமை.  “நீ நேர்ந்து கொண்டதைச் செய்.  உள்ளபடி நேர்ந்துகொண்டதைச் செய்யாமல் போவதைப் பார்க்கிலும் நேர்ந்துகொள்ளாமலிருப்பதே நல்லது” (சங்கப்பிர. 5:3,4.)


2. வார்த்தைப்பாட்டை அதின் பொருளுக்கேற்றவிதமாய் நிறைவேற்ற வேண்டுமென்பதற்கு அர்த்தமென்ன?

ஒருவன் எவ்விதம் வார்த்தைப்பாடு கொடுத்தானோ, அவ்வித பூரணமாயும், பிரமாணிக்கமாயும், அதை நிறைவேற்றக் கடன் உண்டென்று அர்த்தமாம்.


3. வார்த்தைப்பாட்டை நிறைவேற்றாவிட்டால், எப்பேர்ப்பட்ட பாவம்?

ஒருவன் வார்த்தைப்பாடு கொடுக்கும்போது, தான் அதை நிறைவேற்றாவிட்டால், எந்தப் பாவ ஆக்கினைக்கு உள்ளாவதாகத் தீர்மானித்துத் தன்னைக் கடமைப்படுத்திக்கொண்டானோ, அந்தத் தீர்மானத்துக்கு ஒத்தபடி, சாவான பாவம் அல்லது அற்பப் பாவங் கட்டிக்கொள்ளுகிறான்.  உதாரணமாக: ஒருவன் தேவமாதாவுக்குத் தோத்திரமாக ஒரு சனிக்கிழமையில் ஒருசந்தியாயிருப்பேன், இராது போனால் எனக்குக் கனமான பாவம் ஆகட்டுமென்று சர்வேசுர னுக்கு வார்த்தைப்பாடு கொடுத்து, அதை நிறைவேற்றாமற் போனால், அவனுக்கு சாவான பாவமாகும்.  மற்றொருவன் பத்து சனிக்கிழமைகளில் ஒருசந்தியாயிருப்பதாக வார்த்தைப்பாடு கொடுத்து, அதை நிறைவேற்றாமல் போனால், தனக்கு அற்பப் பாவம் மாத்திரம் ஆகக்கடவது என்று திட்டம் செய்திருந்தால், தன் வார்த்தைப்பாட்டை மீறும்போது அவனுக்கு அது அற்பப்பாவம் மாத்திரமேயாகும்.


4. அந்தப் பாவத்தின் கனாகனத்தைப் பற்றி திட்டம் பண்ணாதிருந்தால், வார்த்தைப்பாட்டை மீறுவது எப்பேர்ப்பட்ட பாவமாயிருக்கும்?

வார்த்தைப்பாட்டின் கனாகனத்துக்கு ஒத்தவண்ணம், சாவான பாவம் அல்லது அற்பப்பாவமாயிருக்கும்.


5. வார்த்தைப்பாட்டின் விஷயம் எப்போது கனமாயிருக்கும்?

திருச்சபை ஒரு விஷயத்தைக் கட்டளையிடும் சமயத்தில் அதைக் கண்டிப்பான கடமை என்று சொல்லும்போது அப்படிப் பட்ட விஷயம் கனமான விஷயமென்று நினைக்க வேண்டியது.  உதாரணமாக: பூசை, ஒருசந்தி இவை முதலியன.


சரித்திரம்

ஒரு தூணில் நின்று அரிதான தவம் செய்துவந்த அர்ச். சீமோனைப் பார்க்கப் போன கிறீஸ்துவனான ஒரு அராபியன் பிரமித்து, தானும் சொற்ப தவமாகிலும் செய்யவேண்டுமென்று ஆசை கொண்டு, அதுமுதற்கொண்டு இறைச்சி, மீன், முட்டை, பால் முதலியவற்றைப் புசிப்பதில்லையென்று அர்ச். சீமோனுக்கு முன்பாக வார்த்தைப்பாடு கொடுத்து, அதை வெகுகாலம் நிறைவேற்றி வந்தான்.  ஆனால் இவன் ஏது காரணத்தைப் பற்றியோ ஒருநாள் ஒரு கோழி வாங்கிச் சமைத்துச் சாப்பிடத் துவக்கினான். ஒரு துண்டை வாயில் போட்டபின்  மற்ற இறைச்சியெல்லாம் கல்லாகி விட்டது.  அதில் ஒரு சிறு துண்டை முதலாய் உடைக்கக் கூடாமல் போயிற்று.  இதைப்பற்றிக் கேள்விப்பட்ட அவ்வூரார் அதைப் போய்ப் பார்த்து, அதிசயித்தார்கள். அவ்வூர் மேற்றிராணியாரான தேயதோரெத் என்பவரும் அதைப் போய்ப் பார்த்ததாக எழுதி வைத்திருக்கிறார். (னி.மூ.னி. V. ஹிலி. 312.)


6.  வார்த்தைப்பாட்டின் விஷயம் பூரணமாய் அனுசரிக்க முடியாத போது என்ன செய்யவேண்டும்?

அனுசரிக்கக் கூடிய பாகத்தையாவது அனுசரிக்க வேண்டியது.  இது கண்டிப்பான கடமை.


7.  நிபந்தனையுடன் வார்த்தைப்பாடு கொடுத்து, அந்த நிபந்தனை நிறைவேறாவிட்டால், வார்த்தைப்பாட்டை அனுசரிக்கக் கடன் உண்டா?

கடனில்லை. உதாரணமாக: உடல்நலம் கிடைத்தால் அல்லது இன்னின்ன அநுகூலமடைந்தால் இன்னின்ன காணிக்கை செய்வேன் என்று வார்த்தைப்பாடு கொடுத்தபிறகு, நாம் குறித்த காரியங்களை அடையாதுபோனால், வார்த்தைப்பாட்டை நிறைவேற்றக் கடனில்லை.


8.  வார்த்தைப்பாட்டை எப்போது நிறைவேற்ற வேண்டும்?

அதைச் செய்து முடிக்க ஒரு காலத்தைக் குறித்திருந்தால், அந்தக் கெடுவுக்குள் அதை நிறைவேற்ற வேண்டியது.  அப்படிக் குறித்திராவிட்டால், கூடிய சீக்கிரம் நிறைவேற்றுவது நலம். “நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டிருப்பாயானால், அதைச் செலுத்தத் தாமதிக்க வேண்டாம்.” (சங்கப்பிர. 5:3).


9.  தான் குறித்த காலத்தில் வார்த்தைப்பாட்டை நிறைவேற்றக் கூடாமல் போனால் பிற்பாடு அதை நிறைவேற்றக் கடமையுண்டா?

கடமையில்லை. உதாரணமாக: இன்ன திருநாளில் கோவிலுக்குப் போய்ப் பூசை காண்பேனென்று வார்த்தைப்பாடு கொடுத்த பிறகு, காய்ச்சலாய் விழுந்து வெளியே போகக் கூடாதிருந்தால் பிற்பாடு வார்த்தைப்பாட்டை நிறைவேற்றக் கடனில்லை.


10.  வார்த்தைப்பாட்டைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றக் கண்டிப்பான கடமையுண்டு என்பதால், அதைக் கொடுக்குமுன்னே செய்ய வேண்டிய தென்ன?

(1) இதைச் செய்யலாமா, செய்யக் கூடாதாவென்று ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.  முன்னும் பின்னும் பாராமல் அப்படிச் செய் வேன், இப்படிச் செய்வேனென்று வார்த்தைப்பாடு கொடுப்பது மகா புத்தியீனம்.

(2) ஆத்தும குருவானவரிடத்தில் ஆலோசனை கேட்க வேண்டும்.


சரித்திரம்

அர்ச். பிரான்சிஸ்கு சலேசியார் நாள்தோறும் தவறாமல் செபமாலை சொல் வதாக வார்த்தைப்பாடு கொடுத்து, அதன்படி செய்துவருகிறதாக வாலிபன் ஒருவன் கேள்விப்பட்டு, தானும் அப்படி வார்த்தைப்பாடு கொடுக்க ஆசைப்பட்டு, எதுக்கும் அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்கலாமென்று போனான். தான் நாள்தோறும் செபமாலை சொல்லுவதாக வார்த்தைப்பாடு கொடுக்க தனக்கு மனது இருக்கிறதை அவரிடத்தில் அவன் வெளிப்படுத்தினான்.  அவர் அவனை நோக்கி: “தம்பி, நீ அப்படிச் செய்ய வேண்டாம்” என்றார். வாலிபன் ஆச்சரியப்பட்டு, “என்ன, நீரே தடை செய்ய லாமோ?” என்று அவன் கேட்டபோது, அர்ச்சியசிஷ்டவர்: “நான் வாலிபனாயிருந்த போது யோசனையில்லாமலும், அறியாமையினாலும் அப்படிச் செய்து விட்டேன்.  இப்போது அப்படிப்பட்ட வார்த்தைப்பாட்டின் இலாப நஷ்டம் எனக்குத் தெரிய வருகிறது.  ஆகவேதான் நான் உனக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: வார்த்தைப்பாடு கொடுக்காதே.  ஆயினும் செபமாலை சொல்லவேண்டாமென்று நான் உனக்குச் சொல்வதாக எண்ண வேண்டாம். செபமாலை சொல். நாள்தோறும் தவறாமல் சொல்லும்படி உனக்குப் புத்தி சொல்லுகிறேன்.  அப்படிச் செய்வது சுவாமிக்கும், தேவமாதாவுக்கும் மிகவும் பிரியமான காரியம் மட்டுமின்றி, இதனால் உனக்கும், உன் குடும்பத்துக்கும் ஆத்தும சரீரப் பிரயோசனங்கள் அநேகம் உண்டாகும்.  ஆனால் வார்த்தைப்பாடு மாத்திரம் கொடுக்காதே. எனென்றால், சிலவேளை உன்னால் செபமாலை சொல்ல சங்கடமாயிருந்து, அதைச் சொல்லாமல் போனால் உனக்குப் பாவமாகும். இப்பேர்ப்பட்ட வார்த்தைப்பாடு கொடுத்த எனக்கு அநேகத் தருணங்களில் அதை நிறைவேற்றுகிறது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது என்றால், அந்த வார்த்தைப் பாட்டை நீக்கும்படியாவது அல்லது கொஞ்சம் எளிதானதாக மாற்றும்படியாவது உத்தரவு கேட்க பலமுறை நினைத்திருக்கிறேன்” என்றார் (நவப்பிரசங்கங்கள் 53).