நான்காம் தேவ இலட்சணம்

1. நான்காம் தேவ இலட்சணத்தைச் சொல்லு.

“சர்வேசுரன் அளவில்லாத சகல நன்மைச் சுரூபியா யிருக்கிறார்.” 


2. அளவில்லாத சகல நன்மை என்றால் என்ன?

குறைவற்ற, எல்லாவித நன்மையான காரியங்கள், நற்குணங்கள், இலட்சணங்கள் என்று அர்த்தமாம்.


3. சுரூபியாயிருக்கிறது என்பதற்கு அர்த்தமென்ன?

சுபாவமாய்க் கொண்டிருக்கிறதென்று அர்த்தமாகும்.


4. நன்மையான காரியங்களில் சிலவற்றைச் சொல்லு.

அழகு, பலம், வல்லபம், புத்தி, ஞானம், நீதி, அறிவு, திரவியம், பாக்கியம், இரக்கம் முதலியவை.


5. மனிதனிடத்தில் ஏதாவது நன்மை உண்டோ?

மனிதனிடத்தில் சில நன்மைகள் உண்டு.  அவை யாவன: புத்தி, அழகு, அறிவு, பலம் முதலியவை.


6. ஒரு மனிதனிடத்தில் பற்பல நன்மைகள் இருக்கு மென்றாலும், அவனிடத்தில் சகல நன்மையும்    இருக்குமா?

அவனிடத்தில் சகல நன்மையும் இருக்க மாட்டாது.  இப்படியே ஒரு மனிதன் ஆஸ்திக்காரனாயிருந்தாலும் பாக்கிய முள்ளவனாயிருக்க மாட்டான்.


7. எந்த மனிதனுக்காவது யாதொரு நன்மை குறைவில்லாமல் பூரணமாயிருக்கிறதா?

எந்த மனிதனுக்கும் ஒரு நன்மையும் பூரணமாயிருக்கிற தில்லை.  ஏனென்றால், மனிதன் தன் சுபாவ அவசியத்தால் தன்னிலே தானாயிராமல், சிருஷ்டிக்கப்பட்ட மட்டுள்ள வஸ்து ஆனதால் அவனிடத்திலுள்ள நன்மைக்கு எப்போதும் அளவு உண்டு.  அவனைச் சிருஷ்டித்தவர் தம் இஷ்டப்படி அவனுடைய நன்மைத்தனத்துக்கு அளவிடக் கூடியவராயிருக்கிறார்.


8. சர்வேசுரனிடத்தில் சகல நன்மைகளும் உண்டா?

நாம் இவ்வுலகில் காணும் சகல நன்மைகளும் சர்வேசுர னிடம் உண்டு.  ஏனெனில், ஒரு காரியத்திலிருக்கும் நன்மைகள் அதின் காரணத்திலுமிருக்க வேண்டும்.  சர்வேசுரன் சகல நன்மைகளுக்கும் காரணமாயிருக்கிறபடியால், சகல நன்மை களையும் எல்லையில்லாமல் அளவில்லாத விதமாய்க் கொண்டிருப்பது அவசியம்.

9. அவரிடத்தில் சகல நன்மைகளும் குறைவில்லாமல் பூர்த்தியா யிருக்கின்றனவா?

சர்வேசுரன் வேறொரு வஸ்துவால் உண்டாக்கப் படாமல் சுபாவத்தினால் அவசியமாய்த் தம்மிலே தாமாயிருக்கும் சுயமான வஸ்துவானபடியால், அவருடைய நன்மைத்தனத்தை அளவிடக் கூடியவர் ஒருவருமில்லை.


10. ஆகையினாலே சர்வேசுரன் அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிறார் என்பதற்கு அர்த்தமென்ன?

சர்வேசுரன் அறிவு, நன்மைத்தனம் முதலிய எல்லா இலட்சணங்களையும் கொண்டிருக்கிறாரென்றும், மேலும் அவர் ஒவ்வொரு நன்மையையும் அளவில்லாமலும், குறையில்லாமலும், எல்லையில்லாமலும் அளவற்ற விதமாய் உடையவராயிருக்கிறார் என்றும் அர்த்தம்.