தேவநற்கருணை கொண்டு போகிற குருவானவருக்கு ஒருவன் உதவி செய்ததினால் அவனுக்கு கிடைத்த அற்புதம்.
ஜெர்மனியில் ஹாப்ஸபுர்கு என்ற பிரதேசத்தின் அதிபதியாகிய ரொதொல்ப் என்பவர் ஒருநாள் காட்டில் வேட்டையாடுகிற போது ஒரு குருவானவர் மரணபடுக்கையில் இருந்த ஒருவனுக்கு தேவநற்கருணை எடுத்துக் கொண்டு அந்த காட்டு வழியாக கால் நடையாய் போனார்.
அதிபதி இவரைக் கண்டு நினைத்ததாவது: இந்தக் குருவானவர் கொண்டு போகிற தேவநற்கருணையில் மன்னருக்கு மன்னராகிய இயேசுநாதர் இருக்கிறார் அல்லவா. அப்பேர்பட்டவரைக் கொண்டு போகிற குருவானவர் கால்நடையாய்ப் போக, நீச மனிதனாகிய நான் குதிரைமேல் போகலாமோ ? இது நியாயமல்லவென்று நினைத்துக் குதிரையை விட்டு இறங்கி அந்த குருவானவரைத் தன் குதிரை மேல் ஏறிப்போகச் சொல்லி மன்றாடினான் .
அப்படியே குருவானவர் குதிரை மேல் ஏறின பிறகு அதிபதி குதிரைப் பக்கத்தில் ஒரு ஊழியனைப் போலப் போனான் . நோயாளியின் வீட்டை அடைந்த பிறகு , குருவானவர் தேவநற்கருணையை நோயாளிக்கு கொடுக்கிறபோது , அதிபதி மாகா தாழ்ச்சியோடு முழங்காலிலேயிருந்தான் . பிறகு , அதிபதி குருவானவரை மறுபடியும் குதிரை மேல் ஏறச்சொல்லி நீரும் சகதியுமுள்ள அந்தப் பாதையிலே கால் நடையாய் நடந்து அவருடைய கோயில் வரையில் கூடப் போனான் .
அங்கே போனபிறகு அதிபதி தன் குதிரையைக் காண்பித்து " இந்தக் குதிரை அரசர்களுக்கெல்லாம் அரசராகிய இயேசுநாதரை சுமந்ததினால் இந்தக் குதிரையின் மேல் நான் ஏறத்தகுதியற்றவன் " என்று சொல்லி அந்தக் குதிரையை கோவிலுக்கு கொடுத்து விட்டான் . குருவானவர் இந்த அதிபதியின் விசுவாசத்தைக்கண்டு " தேவநற்கருணையைக் குறித்து நீர் இன்று செய்த புண்ணியத்தினால்உமக்கு இயேசுநாதர் அதிக பாக்கியம் கொடுப்பார் " என்றார் .
பிறகு ஒரு புண்ணியவதி அந்த அதிபதியைப் பார்த்து "நீர் தாழ்ச்சியோடு தேவநற்கருணைக்கு மகிமை செலுத்தினதற்காக உமக்கும் உமது குடும்பத்திற்கும் தேவநற்கருணையில் இருக்கிற ஆண்டவர் மிகுந்தவெகுமானமும் பாக்கியமும் கொடுப்பார்" என்றாள். அவ்வண்ணமே இந்த அதிபதிக்கு ரோமைச்சக்கரவர்த்தி என்கிற பெரிய பட்டம் வந்தது .
அன்பான கிறிஸ்தவ நண்பர்களே! உங்களுக்கு குருவானவர் கோவிலிலே தேவநற்கருணை கொடுக்கிறபோது நீங்கள் மிகுந்த தாழ்ச்சியுடன் இருக்க வேண்டும் . தேவநற்கருணையில் பக்தியில்லாத சிலபேர்கள் அந்தச் சமயத்திலே முழங்காலில் இராமல் பட்டமரம் போல் நின்று கொண்டும் , உட்கார்ந்து கொண்டும் , பயமில்லாமல் பேசிச் சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள் .
நீங்கள் தேவநற்கருணைக்குஎவ்வளவு தாழ்ச்சியுள்ள ஊழியம் செய்வீர்களோ , இறைமகன் அவ்வளவு வெகுமானமும் , பாக்கியமும் உங்களுக்கு கொடுப்பார் .அந்த அதிபதி தன் குதிரை ஒருமுறை மாத்திரம் இயேசுநாதரை சுமந்ததினால் தான் அதில் ஏறக்கூடாதென்றான் .
சகோதரரே ! நீங்கள் தேவநற்கருணை வாங்கினால் உங்களுடைய உடலில் இயேசுநாதர் தாமே அநேகமுறை இருந்தார் அல்லவா ? சாவான பாவம் இயேசுநாதர் இருந்த உங்களுடைய நாவிலும் இருதயத்திலும் இருக்கிறது நியாயமோ ?
அந்த அதிபதி , தன் குதிரை இயேசுநாதரை சுமந்ததினால் அதை இயேசுநாதருக்குத் ஒப்புக் கொடுத்ததைப் போல, உங்களுடைய நாவிலும் , இருதயத்திலும் தேவநற்கருணை வழியாகக் இறைமகன் எழுந்தருளி இருந்ததினால் அவைகளை முழுவதும் இந்த ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் .
எப்படியெனில் , நாக்கைக் கொண்டு இயேசுநாதருக்கு தோத்திரம் சொல்லுவதேயல்லாமல் , அவருக்குப் பொருந்தாத வார்த்தை சொல்லாமல் இருப்பது . இருதயத்திலே தேவன் வருவதற்கு அதைத் திறந்து வைக்கவேண்டும் . தீய எண்ணங்கள் உள்ளே வராமல் கவனமாய் அதை அடக்க வேண்டும் .