மரணம்

105. (49) பாவத்தின் நிமித்தம் சகல மனிதர்களுக்கும் வருகிற ஆக்கினை என்ன?

சாவு.


1. சாவு என்றால் என்ன? 

ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிவதே சாவு.


2. மனிதர் எல்லோரும் சாக வேண்டுமா? 

ஒருவர் பாக்கியில்லாமல் சகல மனிதரும் சாவார்களென்பது மறுக்க முடியாத சத்தியம். “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணாய்த் திரும்புவாய்” (ஆதி. 3:19).


3. சர்வேசுரன் சாவுக்குக் காரணமா? 

சர்வேசுரன் சாவுக்குக் காரணமல்ல. ஏனெனில் மனிதர்கள் என்றென்றைக்கும் ஜீவிக்கும்படி அவர் அவர்களைச் சிருஷ்டித்தார்.


4. இப்படியிருக்க மரணம் வந்ததெப்படி? 

சர்வேசுரன் கொடுத்த கட்டளையை மீறி ஆதித் தகப்பன் செய்த பாவத்தால் உலகத்தில் சாவு வந்தது. “பாவத்துக்குக் கூலி மரணமாம்” (உரோ. 6:23).  “ஒரு மனிதனாலே சகலரும் பாவி களானபடியினாலே, சாவும் சகல மனிதருக்குள்ளும் பாய்ந்தது” என்று அர்ச். சின்னப்பர் வசனித்திருக்கிறார் (உரோ. 5:12).


5. சாவைப்பற்றி நமக்கு வரவேண்டிய முக்கிய யோசனைகள் எவை? 

(1) சாவானது பாவத்துக்கு ஆக்கினை,

(2) நம்முடைய நித்திய கதியைத் திட்டப்படுத்தும் நேரம் சாவு நேரமே.

(3) மரணத்துக்குப் பின் மனஸ்தாபப்படவும், பேறு பலன்கள் அடையவும் சற்றேனும் இடமில்லை.

(4) மரணம் வரும் நேரமும் அதைச் சேர்ந்த சம்பவங் களும் நிச்சயமற்றவை.


6. நமது சாவின் நேரத்தைப் பற்றி வேதாகமத்தில் சொல்லி யிருக்கிறதென்ன? 

“நீங்கள் நினையாத வேளையில் மனுமகன் வருவார்” என்று சேசுநாதர் திருவுளம்பற்றினார் (லூக். 12:40).  “திருடனைப் போல் உன்னிடத்தில் வருவேன், நான் எந்த நேரம் உன்னிடத்தில் வருவேனென்றும் அறியாய்” (அரு. காட்சி. 3:3).


7. எத்தனை விசை மரிப்போம்? 

வேத சட்டப்பிரகாரம் எல்லா மனிதரும் ஒரே ஒரு விசை மரிக்கத் தீர்வையிடப்பட்டிருக்கிறதென்று அர்ச். சின்னப்பர் வசனித்திருக்கிறார்.  “மனிதர்கள் ஒரே தரம் மரிப்பார்கள்” (எபி. 9:27).


8. அஞ்ஞானிகள் சொல்லுவதுபோல், மரணத்துக்குப் பிறகு மனந்திரும்புவதற்கு மறு பிறப்பு இல்லையா? 

மறுபிறப்பு உண்டென்பது வேதாகமங்களுக்கு மாத்திரமல்ல, புத்திக்கும், நியாயத்துக்கும் ஒவ்வாததாயிருக்கிறது.


9. இந்தக் கொள்கை எப்படி வேதாகமங்களுக்கு ஒவ்வாததா யிருக்கிறது? 

எப்படியென்றால் மனிதர்கள் ஒரே தடவை மட்டும் மரிப்பார்களென்று வேதப் புஸ்தகத்தில் சாதிக்கப்பட்டிருக்கிறது (எபி. 9:27).


10. இது புத்திக்கு ஒவ்வாததாயிருக்கிறதெப்படி? 

இந்தக் கொள்கையின்படி ஆத்துமமானது தன்னுடைய சுபாவத்துக்கு முழுதும் ஒவ்வாதபடி ஜீவிக்கிறதென்று ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

(1) அறிவுள்ள ஆத்துமம் மிருகங்களிலும், உயிரில்லாத பொருட்களிலும் பிரவேசித்தால், அது தன் புத்தி, மனது முதலிய சத்துவங்களை உபயோகித்து, அவைகளுக்கேற்ற முயற்சிகள் செய்யக்கூடாததாயிருக்கும்.

(2) மேலும் மனிதன் மிருகங்களையும், பூண்டுகளையும் சாப்பிடும்போது, தனக்கு முன் ஜீவித்த மனிதர்களைச் சாப்பிடுகிறானென்றும், அவனும் ஒருநாள் மற்றவர்களுக்குப் போசனமாகக் கூடுமென்றும் சொல்ல வேண்டியிருக்கும்.


11. இது எப்படி நீதி நியாயத்துக்கு விரோதமாயிருக்கிறது? 

ஆத்துமம் தன் பாவங்களுக்குப் பரிகாரமாக ஓர் புதிய சரீரத்தில் பிரவேசிக்கக் கூடுமானால், தண்டிக்கப்படுகிற இந்த ஆத்துமம் தன் பழைய பாவங்களைப் பற்றி சிறிதளவேனும் அறியா திருப்பதினாலேயும், ஒருவனது சரீரத்துக்கு வரவேண்டிய தண்டனையை மற்றொருவனுடைய சரீரம் அனுபவிக்கிற தினாலேயும் மகா பெரிய அநியாயமுண்டாகிறது.


106.   எப்போதும் சாவுக்கு முஸ்திப்பாயிருக்கும்படி நாம் செய்ய வேண்டியதென்ன?

சாவான பாவமில்லாமல் எப்போதும் தேவ இஷ்டப்பிரசாதத்தோடு இருக்க வேண்டியது.


1. நாம் எப்போதும் சாவுக்கு ஆயத்தமாயிருக்க வேண்டுமா? 

நாம் நினையாதபோது சாவு வரும் என்பதினாலும், நாம் நமது கடைசி மூச்சுவிடும் நேரத்தில்தானே நம்முடைய நித்திய கதி தீர்மானிக்கப்படும் என்பதினாலும், நாம் எப்போதும் சாவுக்கு ஆயத்தமாயிருக்க வேண்டும்.


2. ஏன் தேவ இஷ்டப்பிரசாதத்தோடு இருக்க வேண்டும்? 

சாவான பாவத்தோடே இறந்துபோவோமாகில் நம்முடைய ஆத்துமம் நரகம் போய்ச் சேரும்.


3. எப்போதும் தேவ இஷ்டப்பிரசாதத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லுவதேன்?  வியாதி வரும்போது மரணத்துக்கு ஆயத்தம் செய்யக் கூடாதோ? 

கடின வியாதி வரும்போது சாவுக்கு ஆயத்தம் செய்யலாமென்றிருப்பது ஆபத்து.  எனென்றால், அப்போது அப்படிப்பட்ட ஆயத்தம் செய்ய நமக்குச் சமயம் இருக்குமோ இல்லையோ நமக்குத் தெரியாது.  எத்தனையோ பேர் அவஸ்தைப் பூசுதல் பெறாமல் திடீரென சாகிறார்கள்.


4. சேசுநாதர் இவ்விஷயத்தில் என்ன உவமை சொல்லி எச்சரித் திருக்கிறார்? 

“ஐசுவரியமுள்ள ஒருவனுடைய காணி பூமி ஏராளமான பலனைத் தந்தது.  அதனாலே அவன் தனக்குள்ளே யோசித்துக் கொண்டு:  “நான் என்ன செய்வேன்?  என் தானியங்களைச் சேகரித்து வைக்க இடமில்லையே.  ஆகையால் நான் இப்படிச் செய்வேன்: என் களஞ்சியங்களை இடித்து, அதிகப் பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த பலன்களெல்லாவற்றையும், என் ஆஸ்தியையும் அதிலே சேர்த்து வைத்து, என் ஆத்துமாவை நோக்கி: “என் ஆத்துமாவே, அநேக வருஷங்களுக்கு வேண்டிய வெகு சம்பத்துகள் உனக்குச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது.  ஆகையால் நீ இளைப்பாறி, உண்டு குடித்து, விருந்தாடு” என்பேன்” என்றான்.  அப்பொழுது சர்வேசுரன் அவனை நோக்கி: “மூடனே, இந்த இராத்திரியில்தானே உன் உயிரை உன்னிடத்தினின்று வாங்குவார்களே, அப்போது நீ தேடினவைகள் யாருடையதாகும்?” என்றார்.  சர்வேசுரனிடத்தில் திரவியாவானாயிராமல் தனக்குப் பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்கிறவன் இவ்விதமாயிருக்கிறான்” என்று சேசுநாதர் திருவுளம்பற்றினார் (லூக். 12:16-21).


5. இன்னமும் சாவுக்கு ஏற்ற ஆயத்தமென்ன? 

(1) சாகும்பொழுது உலக காரியங்களையும், பொருட்களையும் விட்டுப் பிரிய வேண்டுமாகையால், இப்பொழுதே நாம் உலகத்திலிருந்து பிரிந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும். “உலகத் திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை; இங்கிருந்து நாம் ஒன்றும் கொண்டு போகவும் முடியாது என்பதற்குச் சந்தேகமில்லை” (யோப். 1:21, சங்கப்பிர. 5:14).  ஆகையால், “உணவும் ஆடையும் இருந்தால் இதுவே நமக்குப் போதுமென்று இருக்கக் கடவோம்” (1 திமோ. 6:7,8).

(2) இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் நிலைக்கும்படி அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை உட்கொள்ள வேண்டும்.

(3) மெய்யான கிறீஸ்துவ ஜீவியம் சீவிக்க வேண்டும்.


6. மெய்யாக கிறீஸ்தவ ஜீவியம் ஜீவிப்பதற்கு நாம் என்ன ஜீவிய ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்? 

நாம் சேசுநாதர் படிப்பித்த ஜீவிய ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்.

(1) பாவத்தை வெறுத்து விலக்கி, சர்வேசுரனுடைய கறபனைகளையெல்லாம் அநுசரிக்கிறது (மத். 19:17).

(2) பாவத்தைக் கட்டிக் கொள்வதைவிட சாவதே மேல் என்று எண்ணி எல்லாவற்றையும் பார்க்க சர்வேசுரனை சிநேகித்து அவரை முன்னிட்டு அயலாரையும் தன்னைப் போல் சிநேகிக்கிறது (மத். 22:39).

(3) அர்ச். சின்னப்பர் ஏவுதல்படி வார்த்தையினாலும், கிரியையினாலும் எதெதைச் செய்தாலும், அவைகளையெல்லாம் சேசுக்கிறீஸ்துவின் நாமத்தினாலே செய்து சர்வேசுரனுடைய தோத்திரத்துக்காக முடிக்கிறது (1 கொரி.10:31, கொலோ. 3:17).

(4) தன்னைத்தானே பரித்தியாகம் செய்து, தன் சிலுவையை அநுதினமும் சுமந்து கொண்டு, சேசுநாதரைப் பின்பற்றுகிறது (மத். 16:24; மாற். 8:34, லூக். 9:23).

(5) “தக்க தவப் பலனைச் செய்து” (மத். 3:8, லூக். 3:8), “தன் சரீரத்தையும் அதன் துர்க்குணங்களையும், ஆசாபாசங் களையும் சிலுவையில் அறைகிறது” (கலாத். 5:24).
(6) சேசுநாதரைக் கண்டுபாவித்து அவருடைய நுகத்தடியைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு, சாந்தமும், மனத்தாழ்ச்சி யும், கீழ்ப்படிதலும் உள்ளவனாயிருந்து, நாளுக்கு நாள் புண்ணியத் தில் வளர்கிறது (மத். 11:29).

(7) “உலகத்துக்கு ஐயோ கேடு” (மத். 18:7), “நான் உலகத்தான் அல்ல” (அரு. 17:14), என்னும் சேசுநாதருடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தி, இவ்வுலக பெருமைகள், ஆஸ்தி பாஸ்திகள், சுக செல்வ இன்பங்களில் தன் இருதயத்தை ஈடுபட விடாமல் காப்பாற்றி, அவைகளை வெறுத்து விடுவது (1அரு.2:15).

(8) இஸ்பிரீத்துசாந்துவுக்கு ஏற்றபடி நடந்து, சரீரத் துக்குரிய தீய இச்சைகளையெல்லாம் அடக்குவது (கலாத். 5:16,       1 இரா. 2:14).

(9) சர்வேசுரன் இல்லாமல் மனிதனாலே ஒன்றும் செய்ய முடியாதென்று விசுவசித்து, அந்த ஒழுங்கெல்லாவற் றையும் சரியாய் அநுசரிக்கும்படி, தன்னைத்தானே நம்பாமல், சர்வேசுரனை மாத்திரம் நம்பி அவரை வேண்டிக் கொள்ளுகிறது (அரு. 15:5, பிலி. 4:13).


சரித்திரம்

அநேக வருஷங்களுக்கு முன் ஒரு அரசன் தன் அரண் மனையில் விகடகவியான ஒரு கோமாளியை வைத்திருந்தான். ஒருநாள் அவ்வரசன் ஒரு கோலை அவன் கையில் கொடுத்து “உன்னிலும் பெருமுட்டாள் இங்கு வந்தால் அதை அவனுக்கு கொடுக்க வேண்டும்.  அப்பேர்ப்பட்டவன் வருமட்டும் இது உன் கையில் இருக்கட்டும்” என்றான்.  சிலகாலத்துக்குப் பின் அரசன் வியாதியாய் விழுந்தான்.  கோமாளியும் வழக்கம்போல் அரசனைச் சந்திக்கப் போனான்.  அப்போது அரசனுக்கும் கோமாளிக்கும் பின்வரும் உரையாடல் நடந்தது:

அரசன்:   நான் இத்தேசத்தை விட்டுப்  போகக்  காலம் நெருங்கி விட்டது.
கோமாளி: எங்கே போகிறீர்?
அரசன்: மறுலோகத்துக்குப் போகிறேன்.
கோமாளி: ஒரு மாதத்துக்குள் திரும்புவீரா?
அரசன்: திரும்ப மாட்டேன்.
கோமாளி: இரண்டு மாதம் பிடிக்குமா திரும்பி வர?
அரசன்: இல்லை.
கோமாளி: ஒரு வருஷத்துக்குள் வருவீரா?
அரசன்: இல்லையில்லை;   ஒருபோதும் திரும்பவே மாட்டேன்.
கோமாளி: அப்படியானால் நீர் போகிற தேசத்தில் சுகமாய் வாழும்படிக்கான ஏற்பாடுகளை முன்னதாகச் செய்து கொண்டீரா?
அரசன்: ஐயோ! நான்  அதைப் பற்றி  நினைக்கவேயில்லை.
கோமாளி: என்ன, அதிசயமாயிருக்கிறதே!  எப்போதும் நித்தியமாய்  வாழப் போகும் தேசத்துக்குப் பிரயாணப்பட்டிருக்கும் நீர் யாதொரு ஆயத்தமும் இல்லாதிருப்பது பெரும் பைத்தியமே; புத்தியில்லாத மூடன்தான்  அவ்வாறு செய்யத் தகும்;  ஆகையால் அரசே, வாங்கிக் கொள்ளும் நீர் கொடுத்த கோலை; நானோ முட்டாள்தான்.  ஆனால் நீர் என்னிலும் பெரும் முட்டாளாயிருக்கிறீர், என்று சொல்லி முன் அரசன்  தனக்குக் கொடுத்த  கோலை  அரசனுக்கே கொடுத்து விட்டான்.


107. சாவுக்குப் பின் சரீரம் என்னமாய்ப் போகும்?

அழிந்து மண்ணாய்ப் போகும்.


108. ஆத்துமம் அழிய முடியுமா?

முடியாது, அது அழியும் வஸ்துவல்ல.


1. ஆத்துமம் சரீரத்தைவிட்டுப் பிரிந்தபிறகு சரீரம் என்னமாய்ப் போய்விடும்? 

ஒரு குழியில் புதைக்கப்பட்டு, பூச்சி புழுக்களுக்கு இரையாகி, அழிந்து திரும்பவும் மண்ணாய்ப் போகும்.


2. ஏன் ஆத்துமம் அழியாது? 

ஏனென்றால், ஆத்துமம் மரிக்கக்கூடாத அரூபியான வஸ்துவாகச் சர்வேசுரனால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையினாலே மனிதன் இறந்துபோனவுடனே, ஆத்துமம் அநித்திய காலத்தினின்று நித்திய காலத்துக்குள் பிரவேசிக்கும்.


109. கல்லறைகளின் மேல் ஏதாவது தின்பண்டம் முதலியவை வைப்பது நியாயமோ?

நியாயமல்ல;  அப்படி வைப்பதால் ஆத்துமத்துக்காவது, சரீரத்திற்காவது ஒரு பிரயோசனமுமாகாது.


1. ஏன் ஆத்துமத்துக்குப் பிரயோசனமாகாது? 

ஆத்துமம் அரூபியாயிருக்கிறபடியால்தான்.


2. ஏன் சரீரத்துக்குப் பிரயோசனமாகாது? 

அது அழிந்து மண்ணாய்ப் போயிருக்கிறபடியால்தான்.


3. கல்லறையில் ஏதாகிலும் வைக்கும் பழக்கம் எப்பேர்ப்பட்டது? 

வீண் வழக்கமேயயாழிய வேறல்ல.


110. அழிந்து போகிற சரீரத்தை அவ்வளவு மரியாதையாய் அடக்கம் செய்ய வேண்டியது ஏன்?

அந்தச் சரீரம் கிறீஸ்துநாதருடைய அவயவமும், தேவனுடைய ஆலயமுமாயிருக்கிறதல்லாமல் சரீர உத்தான நாளில் அது திரும்பவும் ஆத்துமத்தோடு சேர்ந்து உயிர்க்கும் என்பதினாலேதான்.


1. நமது சரீரம் கிறீஸ்துநாதருடைய அவயவமாகிறதெப்படி? 

ஞானஸ்நானத்தால். ஏனெனில், ஞானஸ்நானம் பெறுகிறவன் சேசுநாதரோடு ஐக்கியமாய் ஒன்றித்து, அவருடைய மிஸ்திக்கு சரீரமாகிய திருச்சபையின் அவயவமாகிறான். “உங்கள் சரீரங்கள் கிறீஸ்துநாதருடைய அவயவங்களென்று அறியீர்களோ?” என்று அர்ச். சின்னப்பர் எழுதி வைத்தார் (1 கொரி. 3:16).


2. நமது சரீரம் தேவனுடைய ஆலயமாகிறதெப்படி?

தேவ இஷ்டப்பிரசாதத்தினால்.  ஏனெனில், தேவ இஷ்டப்பிரசாதத்தினால் அர்ச். தமதிரித்துவம் நம்மிடத்தில் வாசம் பண்ணுகிறது. “நீங்கள் சர்வேசுரனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், சர்வேசுரனுடைய இஸ்பிரீத்துசாந்து உங்களுக்குள் வாசம் பண்ணுகிறார் என்றும் அறியீர்களோ?” (1 கொரி. 3:16).