தேவநற்கருணையாகிய திவ்ய அப்பத்திலே சேசுநாதருடைய இரத்தம் உண்டென்று எண்பிக்கிற புதுமை.
இஸ்பானிய இராச்சியத்திலே புனித எரோணிமுஸ் சபையில் உள்ள பேதுரு என்ற குருவானவர் இருந்தார். இவருக்கு பசாசின் தந்திரத்தினாலே திவ்ய நற்கருணையின் பேரிலேஅடிக்கடி வந்த சோதனையாவது:-
திவ்விய நற்கருணையிலே இயேசுவினுடைய திருஉடல் இருப்பதும் அல்லாமல் திருஇரத்தம்கூட இருப்பது எப்படி? திருஇரத்தம் இருந்தால் அது துணிமேல் இருக்கிறபோது அதில் படாமல் இருக்குமோ என்று சந்தேகம் அவருக்கு வந்தது. ஆனால் அவர் அந்த சோதனைக்கு இடங்கொடாமல் அடிக்கடி தள்ளினாலும் திரும்பத் திரும்ப அந்த சோதனை அவருக்கு வந்தது.
இப்படி இருக்கையிலே ஒரு சனிக்கிழமைஅவர் தேவமாதாவைக் குறித்துப் பூசை வைக்கிறபோது திவ்விய நற்கருணை எழுந்தேற்றத்திற்குப் பின் மேலிருந்து ஒருமேகம் வந்து பீடத்தில் இருந்த திவ்விய நற்கருணை பூசைப்பாத்திரம் மற்ற பொருட்கள் எல்லாம் அந்த குருவானவருக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டிருந்தது .
அப்போது அவர் இதைக் கண்டு மிகவும் பயந்து இனி என்ன செய்வேன் என்று தத்தளித்துக் கொண்டு இருந்தார். பிறகு தமக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கத்தக்கதாக மிகுந்த அழுகையோடு இறைவனை மன்றாடினார். இப்படி மன்றாடிய பின் அந்த மேகம் மேலே போனதினால் பூசைப்பாத்திரமும் மற்ற எல்லா பொருட்களும் அவருக்கு தெரிந்தன. ஆனால் அவர் அவைகளை உற்றுப் பார்க்கிறபோது திவ்விய நற்கருணையும், பாத்திரத்திலிருந்த இரத்தமும் இல்லை என்று கண்டு முன்னிலும் அதிக துன்பம் அனுபவித்து தேவமாதாவை மகா பக்தி சுறு சுறுப்போடு வேண்டிக் கொண்டார். பிற்பாடு மேலேயிருந்து திவ்விய நற்கருணை மிகுந்த பிரகாசத்தோடு இறங்கி வருகிறதைக் கண்டார்.
இதல்லாமல் அந்தத் திவ்விய நற்கருணை பூசைப்பாத்திரத்தின் மேலே வைத்திருந்த தேவநற்கருணையிலிருந்து திருஇரத்தம் துளித் துளியாகப் பாத்திரத்திலே விழுந்து முன்னேப் போல் பிரகாசமாய் இருக்கிறதைக் கண்டார். பின்னும் அந்தத் திவ்விய நற்கருணை அப்பப் பாத்திரத்தைவிட்டு இறங்கி முன்னிருந்த துணிமேல் இருந்தது.
இதையெல்லாம் குருவானவர் பார்க்கிறபோது ஆச்சரியபட்டதுமல்லாமல் இனி என்ன செய்யவேண்டுமென்று ஆலோசனை செய்தார். அப்போது அவருக்கு கேட்டதாவது உன்னுடைய சந்தேகத்தை நீக்கவே இப்படி நிகழ்ந்தது . பூசையை முடித்துவிடு கண்ட செய்தியை ஒருவருக்கும் சொல்லாதே என்கிற சத்தம் கேட்டது அதன் பின் பூசையை முடித்து கண்டவற்றை ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்.
பூசைக்கு உதவி செய்தவனும் , பூசையை கண்டவர்களும் அவருடைய அழுகையையும் , பூசையில் அவர் செய்த தாமதத்தையும் கண்டதேயன்றி வேறொன்றையும் காணவில்லை , அந்த குருவானவர் தான் சாகிறதற்கு முன் அவஸ்தையாயிருக்கும்போது ஒர் கடிதம் எழுதி தம்முடைய உதவியாளரிடம் கொடுத்தார். அதில் முன்பு பசாசின் தந்திரத்தினால் தமக்கு வந்த சந்தேகமும், நிகழ்ந்த புதுமையையும், அப்படிபட்ட சந்தேகம் தமக்கு ஒருக்காலும் வரவில்லையென்பதும் எழுதியிருந்தது .
கிறிஸ்தவர்களே! தேவநற்கருணையென்னும் தேவதிரவிய அனுமானத்தின் பேரில் திருச்சபை கற்பித்ததை நாம் எல்லாரும் உறுதியோடு விசுவசித்து , இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். புனித அகுஸ்தினார் சொன்னபடியே மனிதரால் செய்யமுடியாத காரியங்களை இறைவனால் செய்யமுடியும்.
குருவானவர் பூசைச் செய்யும் போது, கோதுமை அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் பார்த்து, இயேசுநாதர் திருவுளம் பற்றிய வார்த்தைகளை எந்த சமயத்தில் சொல்லுவாரோ, அதே சமயம் அப்பம் என்கிற பொருளும், இரசமென்கிற பொருளும் அற்றுப்போகச் செய்து, இயேசுநாதர் தாமே திரு ஆத்துமத்தோடும், தேவசுபாவத்தோடும் முழுவதும் அந்த அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும், இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் எழுந்தருளியிருக்கிறார்.
அவரை நாம் கண்ணால் காணமுடியாதிருந்தாலும், சத்திய சீலராயிருக்கிற இயேசுநாதர் திருவுளம் பற்றினதால் நாம் எல்லோரும் முழு மனதோடு விசுவசிக்க வேண்டும்.