"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
மத்தேயு 28 : 20
இயேசுவின் இந்த வார்த்தைக்கு பொருள் என்ன புரிகிறதா? கடவுள் தான் சொல்லியதை கண்டிப்பாக காப்பாற்றுவார். காப்பாற்றாவிட்டால் அவர் அதைச் சொல்ல மாட்டார். எப்படி நம்மோடு இருக்கிறார். அவர் அப்படி நம்மோடு இருப்பதால்தான் உலகம் இன்னும் உருண்டு கொண்டிருக்கிறது. அவர் பிரசன்னமே பிரதானம். நம் அனைவரின் கவனமும் முதலில் அதில்தான் இருக்க வேண்டும்.
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆணி வேர், நம் ஆண்டவராகிய இயேசுவின் பிரசன்னம் முழுமையாக இருப்பது திவ்ய நற்கருணையே. பிரசன்னம் என்பதிலும் மேலாக இயேசுவே திவ்ய நற்கருணையில் வீற்றிருக்கிறார். நாம் உண்ணுவது நற்கருணை அல்ல திவ்ய இயேசு நாதர்.
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். மனுமகனின் தசையை உண்டு இரத்தத்தை குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது
அருளப்பர் 6 : 53
நம் இயேசு தெய்வம் திவ்ய நற்கருணைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் பாருங்கள். நமக்காக இந்த வெண்சிறு அப்பத்தில் தன்னையே அடக்கி நமக்காகக் காத்திருக்கும் அவரை நாம் ஒழுங்காக முழுமையாக கண்டுகொள்கிறோமா? அவரை நேசிக்கிறோமா? அவரை ஆராதிக்கிறோமா?
“நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."
அருளப்பர் 6 : 51
வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவை எப்படி நாம் பெறுகிறோம்?
1. முதலில் தகுந்த ஆன்மீக தயாரிப்பு
2. பாவமின்மை
3. திருப்பலியில் பங்கேற்கும் விதம்
4. திவ்ய நற்கருணை வாங்கும் விதம்.
5. வாங்கிய பின் அவருடன் உறவாடுதல் (பத்து நிமிடவாவது) அவரை ஆராதித்தல்.
அன்பின் தேவ நற்கருணையில் அழியாப் புகழோடு வாழும் நம் இயேசுவை எப்படிப்பெறுகிறோம். மேலே சொன்ன ஐந்தில் நாம் எப்படி?
பாதி திருப்பலிக்கு வருவதும், பராக்குப் பார்ப்பதும், பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவதும், தகுந்த தயாரிப்பும் தேடல் இல்லாமலும் சாதாரணமாக அசால்ட்டாக நற்கருணை வாங்குவதும், வரும்போதே தெறிந்தவர் பார்த்துவிட்டால் அவரைப்பார்த்து சிரிப்பதும். வந்து இரண்டு நிமிடத்திற்குள் பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவதும் அல்லது கரவொலிளுக்குப் பலியாக தட்டிக்கொண்டிருப்பதும் இதுதானே இன்றைய நற்கருணை நாதருக்கு நாம் கொடுக்கும் மரியாதை.
பின் சுனாமி, பூகம்பம், வெள்ளம் வராமல் வேறு என்ன வரும்.
மூவொரு கடவுளே! இவ்வளவுதான் உமக்கு மரியாதை மற்றவை எல்லாம் எங்களுக்கு, நீர் எங்களுக்கு முக்கியமல்ல; உம்மைத்தவிர எல்லாமே எங்களுக்கு முக்கியம்.
சோறு, பிரியானி, மட்டன், சிக்கன் எல்லாம் சாப்பிட வலது கை; நம்மைக்காக்கும் கடவுளுக்கு இடது கை. கேட்டால் எல்லாருமே அப்படித்தானே வாங்குகிறார்கள். கரங்களில் வாங்குவதுதான் சுத்தம் என்று சப்பைக்கட்டு இதைவிட நம் ஆண்டவரை எப்படிக் கேவலப்படுத்த முடியும். பரிசுத்தரின் பரிசுத்தர் நோய்களைப் பரப்புவாரா? குணமாக்குவாரா?
தூரத்தில் இருக்கும் கடவுளுக்கு டாட்டா பைபை சீயூ.. எல்லாம் சொல்லி ஆராதனை. அதே கடவுள் நமக்குள் வந்துவிட்டால் மூச்சு கிடையாது; பேச்சு கிடையாது; கரவொலிக்கு கரங்களையும்; அறிக்கைக்கு காதுகளையும் கொடுத்துவிட்டு மனதை எங்கோ அலைய விட்டுவிட்டு உள்ளிருக்கும் கடவுளை அம்போ என்று நடுத்தெருவில் விட்டுவிடுவது.
ஒரு காலத்தில் முதல் நாள் பாவசங்கீர்த்தனம் செய்து; அடுத்த நாள் காலை உணவு உண்ணாமல் முன்னால் நாமே நடந்து சென்று கிராதிகளுக்கு முன்னால் முழங்கால் இருந்து திவ்ய நற்கருணை நாதரை நாவில் வாங்குவோம். வாங்கியபின் 10 நிமிடம் மவுனம், உருகி பாடுதல், கிறிஸ்துவின் ஆத்துமமே ஜெபம், அருட்தந்தையர்களே ஜெபம் சொல்லுவார்கள். நம் மனதிற்குள் வந்த இயேசுவிடம் ஜெபிப்போம் என்று. எங்கு சென்றது நம் கத்தொலிக்க பாரம்பரியம்?
“மாறாத தெய்வம் நீ மட்டும்” என்று பாடிவிட்டு நாம் மட்டும் விதவிதமாக மாறுகிறோமே.. நற்கருணை உட்கொண்டபின் சில ஆலயங்களில் லைவ் டெலிகாஷ்ட்டில் டி.வி யில் கூட அறிக்கைகள் வாசிக்கப்படுகிறது.. நமக்கு வேண்டுமானால் வசதிகள் வந்து இஷ்ட்டத்துக்கு அவசங்கை செய்யலாம்..
(தவறாக நினைக்க வேண்டாம். பிரசங்கத்திற்கு முன் வாசிக்கலாம் அல்லது திருப்பலி முடிந்து வாசிக்கலாம். வார திருப்பலிகள் விவரங்களை நோட்டிஸ் போர்டில் வைக்கலாம்.)
ஆனால் அன்று நமக்காக மாட்டுத்தொழுவத்தில் பிறந்த எழை எளிய இயேசுதான் இன்றும் எனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.. ஆனால் நாம் மாறிக்கொண்டே இருப்போம்.
மழை, வெள்ளம், சூனாமி, வரட்சி வந்து உலகம் சீக்கிரம் அழியட்டும் என்றால் இந்நிலை தாராளமாக தொடரலாம்..
இன்னும் ஒரு சில இடங்களில் விசுவாசக்குறைவு, நவீன தாக்கம் இல்லாமல் திருப்பலி நிறைவேற்றப்படுவதால்தான் உலகம் உருண்டுகொண்டிருக்கிறது...
நற்கருணை நாதரின் புனிதத்தை உணர்வோம்; அசட்டை செய்வதையும்; நம்மையும் அறியாமல் அவசங்கை செய்வதையும் தவிர்ப்போம்; நம் ஆண்டவர் நம் கடவுள் நமக்காக தன்னையே தருகிறார். அவரை சரியாக பயன்படுத்திக்கொள்வோம்.