58. ஆகையால் அர்ச். கன்னிமரியம்மாளைத் தேவமாதா என்று அழைக்கலாமோ?
ஆம். அவர்கள் தேவனாகிய சேசுநாதரைப் பெற்ற தாயானதால், அவர்களைத் தேவதாய் என்று அழைக்கத்தான் வேண்டும்.
1. அர்ச். கன்னிமரியம்மாள் சர்வேசுரனுடைய தாய் என்பது வேத சத்தியமா?
(1) இது ஒரு விசுவாச சத்தியம் என்று அப்போஸ்தலர்களுடைய விசுவாசப் பிரமாணம் என்னும் மந்திரத்தில் சொல்லியிருக்கிறது.
(2) இச்சத்தியம் திருச்சபையால் எப்போதும், எங்கும் விசுவசிக்கப்பட்டதுமன்றி, எபேசென்னும் பட்டணத்தில் கூடிய திருச்சபையின் பொதுச்சங்கத்தால் விசுவாச சத்தியமாகவும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.
(3) சகல கிறீஸ்தவர்களும் இத்தீர்மானத்துக்கேற்க செபிக்கும்படியாகவே, மங்களவார்த்தை செபத்தின் கடைசி பாகம் திருச்சபையால் சேர்க்கப்பட்டது.
2. அர்ச். கன்னிமாமரி தேவமாதா என்பதால், அவர்கள் சர்வேசுரனுக்கு உயிர் கொடுத்தார்கள் என்று சொல்லலாமா?
சொல்லக் கூடாது. ஏனென்றால், தம்மில் தாமாயிருக்கப்பட்ட சர்வேசுரனுக்கு அர்ச். கன்னிமரியம்மாள் உயிர் கொடுக்க முடியாது. அவர்கள் தேவ சுபாவத்துக்குத் தாயல்ல. ஆனால் சர்வேசுரனாகிய சேசுநாதருடைய சரீரத்தைத் தமது சரீரத்தினின்று அவருக்குக் கொடுத்ததால் அவர்கள் தேவதாய் என்று சொல்ல வேண்டும்.
3. அதெப்படி?
ஆத்துமமும் சரீரமும் அடங்கிய நம்மைச் சர்வேசுரன் நமது தாயின் வயிற்றில் படைத்து, அவள் நம்மைப் பெற்றாளேயன்றி நமக்கு அவள் உயிர் கொடுக்கவில்லை. அவ்வாறே கன்னி மரியம்மாளின் உதரத்தில் இஸ்பிரீத்துசாந்துவின் அற்புதமான செய்கையால் உண்டான சரீரத்தையும் ஆத்துமத்தையும் ஒன்றாக்கி, அதோடு தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சர்வேசுரன் ஒன்றித்தார். இவ்வாறு ஒன்றிக்கப்பட்டவரை கன்னிமாமரி பெற்றபடியால் அவர்களைத் தேவமாதா என்கிறோம்.
4. சர்வேசுரனுடைய தாய் என்னும் பட்டத்தால் அர்ச். கன்னி மரியம்மாளுக்கு மகிமை உண்டானதா?
சர்வேசுரனுடைய தாய் என்னும் பட்டத்தால், அர்ச். கன்னிமாமரிக்கு வரும் உன்னத மகிமைக்கு நிகரான மகிமை பரலோகத்திலும், பூலோகத்திலும் கிடையாது.
அர்ச். அக்வீனாஸ் தோமையார் சொல்வதுபோல்: “தேவமாதா சர்வேசுரனுடைய தாயாராயிருக்கிறதினால், அவர்களுக்குக் கிடைத்த மகிமை ஓர் விதத்தில் அளவற்றதெனத் தகும்.” பின்னும் அர்ச். பொனவெந்தூர் சொல்லுவதாவது: “இம்மகிமை எவ்வளவு மேலானதென்றால், இதைவிட மேலான மகிமை எந்த ஒரு சிருஷ்டிக்கும் கிடைக்க முடியாது. சர்வேசுரன் தாமே இதை விட உன்னதமான மகிமையை உண்டாக்க முடியாது. இப்போது இருப் பதைவிட மேலான உலகத்தை உண்டாக்கலாம். ஆனால் சர்வேசுரனுடைய தாயாரை விட உயர்ந்த தாயாரைச் சிருஷ்டிக்க முடியாது.”
5. சர்வேசுரனுடைய தாய் என்பதால், தேவமாதாவுக்குச் சர்வேசுரனோடு உண்டான சம்பந்தம் என்ன?
(1) சுதனாகிய சர்வேசுரனோடு அவர்களுக்கு மெய்யாகவே இரத்த உறவு உண்டானது. ஏனெனில், சேசுநாதருடைய சரீரம் அவர்களுடைய சரீரமென்றும், அவருடைய இரத்தம் அவர் களுடைய இரத்தமென்றும் மெய்யாகவே சொல்ல வேண்டும்.
(2) பிதாவாகிய சர்வேசுரனோடும் அவர்களுக்கு விசேஷ சம்பந்தம் உண்டானது. ஏனென்றால், அவருடைய பிதாத் துவத்தில் அவர்களும் பங்கு அடைந்திருக்கிறார்கள். பிதாவாகிய சர்வேசுரன் நித்தியமாய் ஜெனிப்பிக்கிற தேவ சுதனையே, கால நிறைவேற்றத்தில் மனுஷாவதாரத்தில் அவர்களும் ஜெனிப்பித்தார்கள். அவர்களும், பிதாவும் ஒரே குமாரனையே தங்கள் குமாரன் என்று அழைக்கிறார்கள்.
(3) இஸ்பிரீத்துசாந்து அர்ச். கன்னிமரியம்மாளின் இரத்தத்தைக் கொண்டு சுதனாகிய சர்வேசுரனுக்கு ஓர் சரீரத்தை உருவாக்கினதினால், தேவமாதாவை இஸ்பிரீத்துசாந்துவின் ஞானப் பத்தினி என்று வாழ்த்துகிறோம்.
6. தேவமாதா சர்வேசுரனுடைய தாய் என்பதைப் பற்றி, இஷ்டப் பிரசாத ஒழுங்கில் அவர்களுக்கு உண்டான மற்ற மகிமை பெருமைகளும் விசேஷ சுதந்தரங்களும் எவை?
(1) சகல சம்மனசுகளையும், மோட்சவாசிகளையும் விட அதிகமாய் தேவ இஷ்டப்பிரசாதம் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டது.
(2) ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்துப் பிறந்தார்கள்.
(3) எப்போதும் பழுதற்ற கன்னியாஸ்திரீயாயிருந்து யாதொரு குற்றம் குறையின்றி, அற்ப மாசுமில்லாமல் முற்றிலும் அழகுடையவர்களாயிருந்தார்கள்.
(4) இஷ்டப்பிரசாதத்தில் எப்போதும் நிலைநின்று, பாவஞ்செய்யக் கூடாதவர்களாயும் இருந்தார்கள்.
7. சுபாவ ஒழுங்கில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரங்கள் எவை?
(1) தேவமாதா ஆசாபாசமில்லாமல் இருந்ததுமன்றி, அவர்களது ஐம்புலன்களெல்லாம் மேலாங்கிமாகிய புத்திக்குக் கீழ்ப்படிந்திருந்தது. ஆனால் கஸ்தி, துன்பப்படாமை, சாகாமை என்கிற வரங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஏனெனில், இவ்விஷயத்தில் மனுக்குலத்துக்காகப் பாடுபட்டு மரிக்க வேண்டியிருந்த தமது திருக்குமாரனுக்கு ஒப்பாயிருந்தார்கள்.
(2) ஆதித்தாய் தகப்பன் சிருஷ்டிக்கப்பட்ட கணத்திலேயே, சர்வேசுரன் அவர்களுக்குத் தெரிய வேண்டிய சகல காரியங்களின் அறிவையும் கொடுத்திருந்தார். தேவ மாதாவுக்கோ வெனில் ஆதாமுக்குக் கொடுத்ததைவிட மேலான அறிவை அளித்தருளினார். அவர்களுக்குச் சகலமும் தெரிந்திராமல் போதிலும், சுபாவ விஷயத்திலும் சுபாவத்துக்கு மேலான விஷயத்திலும், தன் செயல்களெல்லாம் சரியாய்ச் செய்வதற்கு அவசியமானவைகள் யாவையும் அறிந்திருந்தார்கள். மேலும் மனுஷ சுபாவத்துக்குரிய வழிமுறைகளைப் பிரயோகித்து நாளாவட்டத்தில் புதுக் காரியங்களை அறியக் கூடியவர்களாயுமிருந்தார்கள்.
8. மகிமை ஒழுங்கில் அவர்கள் பெற்ற மகிமை எவ்வளவு?
அதைப்பற்றி ஒன்பதாம் பத்திநாதர் என்னும் அர்ச். பாப்பரசர் சொன்னதாவது: “அர்ச். கன்னிமரியம்மாளிடத்தில் பரிசுத்ததனமும், அர்ச்சியசிஷ்டதனமும் எவ்வளவு பூரணமாய் அமைந்திருந்ததென்றால், சர்வேசுரனுக்குப் பிறகு அவர்களைவிட மேலானதொன்றும் நம்மால் நினைக்கவும், கருதவும் கூடாது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது இத்தன்மையானதென்று அதைக் கொடுத்த சர்வேசுரனுக்கு மாத்திரமே தெரியும்.”
9. மோட்சத்தில் அவர்கள் அடைந்து அநுபவிக்கிற மகிமையும் பாக்கியமும் எவ்வளவு?
மோட்ச மகிமையும், பாக்கியமும் ஒவ்வொருவன் பெற்ற இஷ்டப்பிரசாதத்துக்கும், அதைக் கொண்டு அவன் அடைந்த பேறு பலன்களுக்கும் தகுந்ததாயிருக்கும். ஆகையால் தேவமாதாவின் பரலோக மகிமை சகல சம்மனசுகளுக்கும் அர்ச்சியசிஷ்டவர்களுக் கும் கிடைத்த மகிமையைவிட அதிக மேலானதென்பது நிச்சயம்.
10. மோட்சத்தில் தேவமாதா அதிகாரத்திலும், வல்லபத்திலும் மற்ற மோட்சவாசிகள் சகலருக்கும் மேற்பட்டவர்களா யிருக்கிறார்களா?
இருக்கிறார்கள். அவர்கள்தான் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும், பாதாள லோகத்துக்கும் இராக்கினி. ஏனெனில், அவர்கள்தான் நரகப் பாம்பின் தலையை நசுக்கினவர்கள். ஆகவே தனது திருக்குமாரனுக்குச் சகல வஸ்துக்களின் மேலுள்ள அரசுரிமையில் பங்கடைந்தவர்களாய் அவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.