48. தேவ வெளியீடு என்றால் என்ன?
மக்கள் மோட்ச வீட்டை அடைவதற்குரிய வழி வகைகளாக. இறைவன் மக்களுக்குத் தேவையான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவ்விதம் இறைவனால் வெளிப் படுத்தப்பட்ட சில உண்மைகள் சுபாவத்துக்கு மேலானவை. இவற்றை தேவ வெளியீடு அல்லது தேவ அறிக்கை என்கிறோம்.
49. தேவ வெளியீடு அவசியமா?
ஆம்; மனிதன் தன் சுயபுத்தியை பயன்படுத்தி, சுபாவ முறைக்கடுத்த சில மூல சத்தியங்களையும், சில பொதுக் கடமைகளையும் அறிந்துகொள்ளக்கூடும். இதை ஒருவரும் மறுப்பதில்லை உதாரணமாக சிருஷ்டிகர் ஒருவர் உண்டு, அவரே ஆதியும் அந்தமுமாகிய தனி முதற்கடவுள் என்று நமமைச் சுற்றியிருக்கும் படைப்புப் பொருட்களைக்கொண்டு நமது சுபாவ புத்தியின் வெளிச்சத்தால் நிச்சயமாய் அறியலாம்.
ஆனால், தேவ அறிக்கையின்றி சுபாவத்துக்கு மேலான சத்தியங்களையும், கடமைகளையும் கடவுளின் தன்மையையும் அறிந்துகொள்ள இயலாது. உலகம் உண்டான நாளிலிருந்து மனிதனின் வாழ்க்கையே இதற்குச் சான்று. உலக மக்கள் எத்தனை தவறுகளையும், அபத்தங்களையும் கடைப் பிடித்து வந்தார்கள்! சிலர் படைக்கப்பட்ட சூரிய சந்திரனைக் கடவுள் என்று கருதினார்கள். சில ஜாதி மக்கள் முதியோராகிய பெற்றோரைக் கொன்றார்கள் வேறு சில மக்கள் கடவுளுக்குப் பலியென தங்கள் பாலர்களைக் கொன்றார்கள். கிரேக்கர், ரோமர் முதலியவர்கள் மிகுந்த நாகரீகமுடைய வர்களாக இருந்தபோதிலும் எத்தனையோ தகாத காரியங்களைத் தேவ வணக்கம் என்று நடத்தி வந்தனர். நமது நாட்டு மக்கள் இடையில் இருக்கும் மூடக்கொள்கை, நம்பிக்கை, ஆசாரம் இவைகளைப் பற்றி நமக்குத் தெரியும்.
50. இதிலிருந்து நாம் அறிவதென்ன?
மனிதன் சகலவித இச்சைகளுக்கும் இணங்கும் தன்மை யுள்ளவன். அதனால் சொந்தப் புத்தியின்படி விட்டுவிட்டால், சுபாவ வேதத்துக்கடுத்த கடமைகளைக்கூட முழுதும் தெளிவுடன் அறியமாட்டான். ஆதலால், தப்பு தவறு ஒன்றுமில்லாமல், கலப்பில்லா உண்மையை அறிந்து கொள்ள கடவுள் தாமே தமது தேவ அறிக்கையைப் போதிக்க வேண்டும்.
மேலும், சுபாவத்துக்கு மேலான முறைக்கடுத்த எந்த உண்மையையும், கடமையையும் மனிதன் சுயபுத்தியினால் அறிந்து கொள்ள முடியவே முடியாது. சுபாவ முறைக்கடுத்த எல்லா சத்தியங்களையும் கடமைகளையும் கண்டறியவே. அவனால் முடியாது என்று கவனித்தோம்; அப்படியானால சுபாவத்துக்கு மேற்பட்டவைகளைப்பற்றி அவன் அறிவது எப்படி? எனவே, தேவ அறிக்கை இன்றியமையாதது என்பது தெளிவாகிறது.
51. தேவ அறிக்கையை நாம் விசுவசிக்க வேண்டுமா?
கடவுள் நமது இறைவன். அவருக்குச் சித்தமான போது அவர் உண்மைகளையும், சத்தியங்களையும் வெளிப் படுத்தக்கூடும் அவருடைய திருச்சித்தம் என்று அறிந்தவுடனே நாம் அதற்கு இணங்க வேண்டும். தவறாத வரத்தையுடைய சத்திய சொரூபியாகிய சர்வேசுரன் நமக்கு ஒரு சத்தியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று தெரிந்தால் போதும். அதுவே, நாம் அந்த சத்தியத்தை விசுவசிப்பதற்குப் போதிய காரணமாகும் கடவுள் நம்மை ஒரு போதும் ஏமாற்றமாட்டார் அவர் ஏமாறுகிறவரும் அல்ல. இவ்வுலகில் விஞ்ஞானிகளும், தத்துவ சாஸ்திரிகளும் கூறுகிறார்கள் என்று நாம் எத்தனை காரியங்களை ஏற்றுக்கொள்ளுகிறோம். நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறி, நமக்கு வளர்ச்சியைக் கொடுக்கிறதே, இதை சரிவர அறிந்த மக்கள் எத்தனை பேர்? இதை யாராகிலும் மறுக்கிறார்களா? ஆகையால், அறிவுக்கெட்டாத சத்தியங்களை சர்வேசுரன் மனிதருக்கு அறிவித்தல் கூடும். மனிதன் அந்த சத்தியம் சர்வேசுரனால் அறிவிக்கப்பட்டதென அறிந்த உடனே, அதை விசுவசிக்க கடமைப்பட்டிருக்கிறான்.
52. பாரம்பரை என்றால் என்ன?
ஏட்டில் எழுதப்படாமல் செவி வழிச் செய்தியாகத் தொன்று தொட்டு, இன்றுவரை பழக்கத்தில் இருக்கும் உண்மைகள் பாரம்பரை எனப்படும். ஒவ்வொரு மதத்தினரும் கடவுளைப்பற்றியும், அவருக்கு வழிபாடு செய்தலைப் பற்றியும் அதற்குரிய வழிவகைகளையும் தம் முன்னோரிடமிருந்து கேட்டறிந்து. பகுத்தறிவுக்கு விரோதமில்லாத வகையில், அவ்வுண்மைகளை நடைமுறையில் வம்சவாரியாக கையாண்டு வருவதே பாரம்பரை எனப்படும்.