1. வார்த்தைப்பாடு நீங்கிப் போகக் கூடுமா?
தன்னாலேயாவது அதிகாரமுள்ளவராலேயாவது வார்த்தைப்பாடு நீக்கப்படவும் அல்லது நிறுத்தி வைக்கப்படவும் கூடும்.
2. வார்த்தைப்பாடு தன்னாலே நீங்கிப்போகிறதெப்படி?
(1) எதைப்பற்றி வார்த்தைப்பாடு செய்தோமோ, அது பிறகு, பிரயோசனமில்லாததாகப் போனாலும்; உதாரணமாக: நமது தாய்க்கு நோய் குணமாகும்படி ஒரு மாதம் ஒருசந்தி பிடிக்க வார்த்தைப்பாடு கொடுத்து, அதற்குள் தாய் இறந்துபோனால், வார்த்தைப்பாடு நீங்கிப் போகும்.
(2) எதைப்பற்றி வார்த்தைப்பாடு செய்தோமோ, அது பிறகு, கெடுதலாக மாறிப்போனாலும்; உதாரணமாக: தினம் பூசை காண்பேனென்று ஓர் வாலிபப் பெண் கொடுத்த வார்த்தைப்பாடானது, அவள் கலியாணம் செய்தபிறகு தன் வீட்டுக் கடமையைச் சரியாய் நிறைவேற்றத் தடையாயிருந்தால், அப்படிப்பட்ட வார்த்தைப்பாடு கெடுதலாக மாறிப்போயிற்று. ஏனென்றால், முதன்முதல் அவள் தன் வீட்டு வேலையை நிறைவேற்றக் கடமையுள்ளவளாயிருக்கிறாள்.
(3) வார்த்தைப்பாட்டின் விஷயம் சிறிதேனும் அனுசரிக்கக் கூடாமல் போனாலும்; உதாரணமாக: ஒருவன் இன்ன நாளிலே கோவிலுக்குப் போய் பூசை காண்பேன் என்று வார்த்தைப்பாடு கொடுத்த பிறகு, காய்ச்சலாய் விழுந்து வெளியே போகக் கூடாத வனாயிருக்கிறான்.
அப்போது வார்த்தைப்பாட்டை நிறைவேற்றுவதற்குள்ள கடன் தன்னாலே நீங்கிப் போகிறது.
3. வார்த்தைப்பாட்டை நீக்கிப் போடவும், நிறுத்தி வைக்கவும் யாருக்கு அதிகாரமுண்டு?
வார்த்தைப்பாடு செய்பவர்கள் பேரிலாகிலும், செய்யும் காரியத்தின் பேரிலாகிலும், அதிகாரமுள்ளவர்கள் அதை ஒன்றில் முழுதும் தள்ளிப் போடலாம், அல்லது தற்காலத்துக்கு நிறுத்தி வைக்கலாம்.
4. அப்படியானால், தங்கள் பிள்ளைகள் செய்யும் வார்த்தைப்பாட்டைத் தள்ளிப்போடவும், நிறுத்தி வைக்கவும் பெற்றோருக்கு அதிகாரம் உண்டா?
(1) கலியாணம் செய்யும் வயது வருமுன் பிள்ளைகள் தங்கள் பெற்றோருடைய உத்தரவின்றி செய்யும் வார்த்தைப்பாடுகளைத் தாய் தகப்பன் முழுவதும் தள்ளிப் போடலாம்.
(2) கலியாணம் செய்யும் வயது அடைந்தபின்னும் பெற்றோருக்கு முழுதும் அடங்கியிருக்கும்போது, வீட்டின் நன்மைக்குத் தடையாயிருக்கும் விஷயங்களில், பிள்ளைகளின் வார்த்தைப்பாடுகளைப் பெற்றோர்கள் தற்காலத்துக்கு நீக்கி வைக்கலாம்.
5. எஜமான்களுக்குத் தங்கள் ஊழியர் செய்த வார்த்தைப்பாட்டின் மேல் இருக்கும் அதிகாரம் எப்படிப்பட்டதாயிருக்கின்றது?
எஜமான் தன் வேலைக்குத் தடையான விதமாய் ஊழியன் செய்திருக்கும் வார்த்தைப்பாடுகளின் தன்மைப்படி அவைகளைத் தள்ளிப்போட அல்லது நிறுத்திவைக்கக்கூடும். அப்படியே, தினம் பூசை காண்பேனென்றும், வருஷத்தில் பல தடவை ஒருசந்தியா யிருப்பேனென்றும் ஊழியன் வார்த்தைப்பாடு செய்து வேலைக்குத் தடையுண்டாக்கினால், அவன் தன்னிடம் வேலை செய்யுமளவும் அவைகளை அனுசரியாதிருக்கும்படி எஜமான் கட்டளை கொடுக் கலாம். இன்ன திருநாளில் தூரமான கோவிலுக்குப் போவேன் என்று ஊழியன் வார்த்தைப்பாடு கொடுத்து வேலைக்குத் தடை யுண்டாக்கினால், எஜமான் அதை நீக்கிப் போடலாம்.
6. கணவனுக்கு இருக்கும் அதிகாரமென்ன?
மனைவி தன் கணவனுக்குத் தெரியாமல் வீட்டு விஷயமாக நஷ்டம் உண்டாக்கும் காரியங்களிலும், தன் அந்தஸ்துக்கு விரோத மான காரியங்களிலும் செய்யும் வார்த்தைப்பாடுகளைக் கணவன் தள்ளிப்போடலாம்.
7. மனைவிக்கு இருக்கும் அதிகாரமென்ன?
கணவன் கலியாணக் கடமைகளுக்கு விரோதமாய்ச் செய்யும் வார்த்தைப்பாட்டைப் மனைவி தள்ளிப்போடலாம்.
8. வார்த்தைப்பாட்டை முழுதும் நீக்கிப்போடக்கூடிய திருச்சபை அதிகாரிகள் யார்?
(1) சர்வேசுரனுக்குச் செய்த சகல வார்த்தைப்பாடுகளையும் நீக்குவதற்கு அர்ச். பாப்பானவருக்கு வல்லமையுண்டு.
(2) அர்ச். பாப்பானவர் தமது அதிகாரத்துக்குள் வைத்துக் கொண்ட வார்த்தைப்பாடுகளைத் தவிர, மற்றவைகளையெல்லாம் மேற்றிராணிமார்கள் தக்க காரணத்தினிமித்தம் நீக்கக் கூடும்.
(3) அர்ச். பாப்பானவரிடத்திலிருந்து அதிகாரம் பெற்ற குருவானவர்களும், தங்கள் அதிகாரத்திற்குத் தகுந்தாற்போல், தக்க காரணத்தினிமித்தம் சில வார்த்தைப்பாடுகளை நீக்கக் கூடும்.
9. வார்த்தைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாமா?
(1) வார்த்தைப்பாட்டை நீக்க அதிகாரமுள்ளவர்கள் மட்டும் அதை மாற்றி அதற்குப் பதிலாய் வேறே காரியம் செய்ய உத்தரவு கொடுக்கலாம்.
(2) செய்த வார்த்தைப்பாட்டை ஓர் உயர்ந்த புண்ணிய முயற்சியாகத் தான்தானே மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக: மூன்று செபமாலை சொல்லுவேனென்று வார்த்தைப்பாடு கொடுத்தவன் மூன்று தடவை திவ்விய நன்மை வாங்குவேனென்று தான் தானே மாற்றிக் கொள்ளக்கூடும்.