திவ்ய நற்கருணை நவநாள் ஜெபம் - முதல் நாள்

இயேசு பேசுகிறார்:

என்னிடம் வா, உன்னுடைய பெயர் எனக்குத் தெரியும். உனது தாயின் கருப்பையில் நீ உருவானபொழுது நான் அங்கிருந்தேன். நீ பிறப்பதற்கு முன்பே நான் உன்னைக் கண்டேன். நான் என்றென்றும் உன்னை நேசிக்கின்றேன். சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள், நான் உங்களை இளைப்பாற்றுவேன், உங்களுக்கு ஆறுதல் அளிப்பேன்.

என்னுடனிருந்து எனக்குச் செவிகொடு. இது எனது இல்லம். இங்கு நீ தாராளமாக வரலாம். உன்னை நான் மிகவும் விரும்புகிறேன். எனது அன்பை நீ உய்த்துணர வேண்டுமென ஆசைப்படுகின்றேன். பகை, வெறுப்பு, தற்பெருமை முதலான பாவங்களைச் சுட்டெரிக்கும் அக்கினி போன்றது எனது அன்பு. எனது சமாதானத்தாலும் மகிழ்ச்சியினாலும் உனது வாழ்க்கையை நிரப்ப நான் ஆவல் கொண்டுள்ளேன். இதோ எனது இல்லத்திலேயே சிறை வைக்கப்பட்டவனாய் உனது முன்னிலையில் இருக்கின்றேன். உனது இதயத்தில் என்னை எடுத்துக்கொள். உனது இல்லத்துக்கும், உனது பாடசாலைக்கும், உனது வேலைத்தலத்திற்கும், நீ செல்லும் வீதிகளெங்கும், களியாட்ட மண்டபங்களுக்கும் என்னைக் கொண்டுசெல். புண்பட்ட இவ்வுலகுக்கு எனது அன்பை நீ எடுத்துச்செல்வதற்கு உனது பாதங்களும், உனது கரங்களும், உனது குரலும், உனது இதயமும் எனக்குத் தேவை. தயவுசெய்து உனது இருதயத்தில் என்னை எடுத்துச்செல்.

சிந்தனை:

இசையாஸ் 61 : 1-4

1 ஆண்டவரின் ஆவி என்மேலே, ஏனெனில் ஆண்டவர் என்னை அபிஷேகம் செய்துள்ளார், எளியோர்க்கு நற்செய்தி அறிவித்து, உள்ளம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும்: சிறைப்பட்டவர்களுக்கு விடுதலைச் செய்தியும், கட்டுண்டவர்களுக்கு மீட்புச் செய்தியும் அறிவிக்கவும்,

2 ஆண்டவர் தம் அருளைத் தரும் ஆண்டையும், நம் கடவுள் பழிவாங்கும் நாளையும் தெரிவிக்கவும், அழுகிறவர்கள் அனைவர்க்கும் ஆறுதல் அளிக்கவும்,

3 சீயோனில் அழுகிறவர்களை மகிழ்விக்கவும், சாம்பலுக்கு பதிலாய் மணிமுடியையும், அழுகைக்குப் பதிலாய் மகிழ்ச்சியின் தைலத்தையும், நைந்த உள்ளத்திற்குப் பதிலாய்ப் புகழ் என்னும் போர்வையையும் தரவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அவர்கள் நீதியில் அசையாதிருக்கும் மரங்கள் எனவும், ஆண்டவரை மகிமைப்படுத்த அவரால் நடப்பட்டது எனவும் அழைக்கப் படுவார்கள்.

4 பன்னெடுங்காலம் பாழாய்க் கிடந்தவற்றைக் கட்டுவார்கள், பண்டைக் காலத்திலிருந்து இடிந்து கிடந்தவற்றை எழுப்புவார்கள், பாழாய்க் கிடந்த பட்டணங்களைப் பழைய நிலையில் ஏற்படுத்தி, தலைமுறை தலைமுறையாய்ச் சிதறுண்டவற்றைச் சீர்ப்படுத்துவார்கள்.

தியானம்:

ஆண்டவரே நீர் ஏன் வந்தீர்?

மறைநூல் வாசகங்கள் உம்மைப்பற்றி எனக்கு எடுத்துரைப்பது யாது? உமது வார்த்தைகளை நான் வாசிக்கும்போது நீர் மக்களைத் தொட்டு அவர்களை எவ்வாறு குணப்படுத்தினீர் என்பதைக் காணமுடிகின்றது. பெருந்திரளான மக்களுக்கு உணவளித்தீர். சிறைப்பட்டிருந்தவர்களை விடுவித்தீர். ஆன்மாக்களைப் புதுப்பித்தீர். உமது ஒரு வார்த்தை, உமது ஒரு பார்வை, உமது ஸ்பரிசம் மனிதனை முழுமையாக்கப் போதுமானது.

ஆண்டவரே இப்பொழுது நீர் எங்கிருக்கின்றீர்?

பலவீனர்களைத் திடப்படுத்தி, உடைந்த உறவுகளை நலமாக்கி, நொறுங்கிய உடல்களைப் புதுப்பித்த உமது பார்வை, உமது ஸ்பரிசம் எங்கே? நான் பார்க்க வேண்டும் ஆண்டவரே! உம்மை எனக்குக் காண்பித்தருளும்.

இயேசு பேசுகிறார்.

குழந்தாய், இதோ எனது பதில். ஒப்பற்றதும், தனித்துவமான முறையிலும் நற்கருணையில் மறைந்திருக்கின்றேன். மரித்தவரை தொட்டு உயிரளித்த அதே கரங்கள், தண்ணீரை ஆசீர்வதித்து மதுர இரசமாக்கிய அதே கரங்கள், குருடரைத் தொட்டு பார்வையளித்த அதே கரங்கள், இதோ சகலவித நோய்களைக் குணப்படுத்தவும், உனது வாழ்வின் புயல்களை அடக்கி அமைதியளிக்கவும் வல்லமையுடையவனாக இதோ இருக்கின்றேன்.*

என்னை உனது இல்லத்துக்கும், நீ வேலை செய்யும் இடத்துக்கும் எடுத்துச்செல்லு என்று மீண்டும் ஒரு முறை உன்னிடம் கேட்கின்றேன். பிறருக்கு நீ ஒரு வரப்பிரசாதமாக விளங்கும்படி நான் உன்னை ஆசீர்வதிப்பேன். என்னை உன்னோடு எடுத்துச்செல்வாயா?*

செபம்:

இயேசுவே வாரும். என்னோடு நடந்து வாரும். எனது இதயப் பீடத்தை உமக்குக் காணிக்கையாக்குகின்றேன். ஆண்டவரே உம்மை நான் வரவேற்கின்றேன். என்னுள் வாழ்ந்து என்னை உமது கருவியாக்க நீர் விரும்புவது உமது பேரன்பன்றோ, எனது பிரச்சினைகள், கஷ்டங்கள், நோய்கள், அனைத்தையும் நானே சுமந்துகொண்டு எனக்காக இந்தத் தெய்வீக அனுமானத்தில் நீர் காத்திருப்பதை நினையாதவனாய் நீண்டகாலம் தொலைவில் இருந்துவிட்டேன்.

இந்த நற்கருணையில் உமது அன்பையும் உமது ஆற்றலையும் நான் கண்டுகொண்டமைக்காக ஆண்டவரே உமக்கு நன்றி. ஆம் ஆண்டவரே, நான் உம்மை மற்றவர்களுக்கு கொண்டுசெல்வேன். வாரும், வந்து என்னில் வாழ்ந்து பிறருடைய வாழ்க்கையை நீர் தொடுவதற்கு என்னை உமது கருவியாக்கியருளும்.

ஆமென்.