சேசுநாதருடைய தெய்வீகம்

54. சேசுகிறீஸ்துநாதர் மெய்யான சர்வேசுரனா?

ஆம். பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் ஒரே தேவ சுபாவம் உடையவராயிருக்கிறதினாலே மெய்யான சர்வேசுரன்தான்.


1. சேசுநாதர் சர்வேசுரனைப் போல் பரிசுத்தமுள்ளவராய் மாத்திரமா இருக்கிறார்?

அவர் சர்வேசுரனைப் போல் பரிசுத்தராய் மாத்திரம் அல்ல, ஆனால் தேவ சுபாவம் உடையவராயிருக்கிறபடியால் பிதாவுக்கும், இஸ்பிரீத்துசாந்துவுக்கும் சமானமாய் அவரும் மெய்யான சர்வேசுரன்தான்.  “மானிட சரீரத்தை எடுத்த கிறீஸ்து நாதரிடத்திலோ தெய்வீகமானது பரிபூரணமாய் வசிக்கின்றது” (கொலோ. 2:9).


2. சேசுகிறீஸ்துநாதர் மெய்யான சர்வேசுரன் என்று எப்படி எண்பிக்கலாம்?

(1) திருச்சபையின் மாறாத போதகத்தினாலும்,

(2) பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களாலும்,

(3) பிதாவாகிய சர்வேசுரனுடைய அத்தாட்சியாலும்,

(4) அவர் தம்மைப் பற்றிச் சொன்ன வார்த்தைகளாலும்,

(5) அவருடைய பரிசுத்த சீவியத்தாலும்,

(6) அவர் சொன்ன தீர்க்கதரிசனங்களாலும், செய்த புதுமைகளாலும் விசேஷமாய் தாம் உயிர்த்து எழுந்த புதுமையினாலும்,

(7) அப்போஸ்தலர்களுடைய போதனைகளாலும்,

(8) எண்ணிறந்த வேதசாட்சிகளின் அத்தாட்சியாலும்,

(9) அவர் ஸ்தாபித்த திருச்சபையின் ஆச்சரியமான பரம்புதலாலும், பராமரிப்பினாலும்,

சேசுநாதர் மெய்யான சர்வேசுரன் என்று ஒப்பிக்கலாம்.


3. திருச்சபையின் போதகம் யாது?

திருச்சபையானது அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்து தொடர்ச்சியாக வரும் பூர்வீக பரம்பரையை ஸ்திரப்படுத்தி, சேசு கிறீஸ்துநாதரின் தெய்வீகத்தை விசுவசியாத சகலத்தையும் சபித்து தனக்கு புறம்பாக்கிவிட்டது. மேலும் “நீசே” என்னும் பொதுச் சங்கமானது சேசுகிறீஸ்துநாதர் மெய்யான சர்வேசுரன் என்று தீர்மானித்ததும் தவிர, அவர் சர்வேசுரனுடைய ஏக குமாரன் என்றும் போதித்திருக்கின்றது.


4. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் சேசுநாதர் மெய்யான சர்வேசுரன் என்று எப்படி எண்பிக்கிறது?

“மெசியாஸ்” என்கிற மெய்யான சர்வேசுரனாயிருக்கும் ஒரு இரட்சகர் அனுப்பப்படுவார் என்று பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள் தெளிவாய் வெளிப்படுத்துகின்றன.


5. மெசையா என்பதற்கு அர்த்தம் என்ன?

“மெசையா” என்னும் எபிரேய பாஷைப் பதமானது அபிஷேகம் பெற்றவர் என்று அர்த்தமாம், “மெசையா என்பதற்கு கிறீஸ்து (அதாவது அபிஷேகம் பெற்றவர்) என்றர்த்தமாம்” (அரு. 1:14).

இது சர்வேசுரன் அனுப்புவதாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகருக்கு யூதர்களால் கொடுக்கப்பட்ட பெயர்.


6. மெசையா என்னும் இரட்சகர் மெய்யான சர்வேசுரன் என்று நமக்குத் தெரியும்?

தீர்க்கதரிசிகள் மெசையா வருவாரென்று மாத்திரம் சொல்லாமல், அவர் சர்வேசுரனாயிருப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள்.  இதினிமித்தம் அந்த இரட்சகரைப் பற்றிப் பின்வருமாறு உரைத்தார்கள்: “அது எம்மானுவேல் என்னும் நாமம் பெறும்” (இசை.7:14).  (அதற்கு “சர்வேசுரன் நம்மோடு” என்றர்த்தமாம்) (மத்.1:23),  “அர்ச்சியசிஷ்டவர்களில் அர்ச்சியசிஷ்டவர்” (தானி. 9:24), “ஆண்டவர் பூமிமீது வந்து நம்மை இரட்சிப்பார்” (இசை. 35:4), “பரம ஆண்டவர் என்று அழைக்கப்படுவார்” (இசை. 9:6), “ஜெகோவா” (எரே. 22:16) (இதுதான் யூதர்களால் சர்வேசுரனுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்.)


7. சேசுகிறீஸ்துநாதர் மெய்யாகவே மெசையாவாயிருக்கிறாரா?

பழைய ஏற்பாட்டில் மெசையாவைப் பற்றித் தீர்க்கவசனமாய்ச் சொல்லப்பட்டவைகள் சேசுநாதரிடத்தில் ஒன்றும் தவறாமல் சம்பூரணமாய் நிறைவேறின.  யூத ஜனங்களுக்குள் வேறு  எவரிடமும் இவைகளெல்லாம் இவ்விதமாக நிறைவேறவில்லை.  உதாரணமாக:

(1) தாவீது இராஜா கோத்திரத்தில் அவருடைய பிறப்பு (2 அரச. 7:12; இசை. 11:1; மத். 20:30).

(2) கன்னிகையிடத்தினின்று பிறப்பு (இசை. 7:14;லூக். 11:7).

(3) பெத்லகேமில் பிறப்பு (மிக். 5:12; மத். 2:1).

(4) மூன்று ராஜாக்கள் நட்சத்திரம் (எண். 24:17; மத். 2:2).

(5) எஜிப்து தேசம் போதல் (ஓசி. 6:1; மத். 2:14).

(6) கழுதையின் மீது ஏறுதல் (சக்க. 9:9; மாற்.11:7).

(7) அவருடைய பாடுகள் (இசை. 1:6, மத். 26, 27;அதி.).

(8) கல்வாரியில் கொடுக்கப்பட்ட காடியும், பிச்சும் (சங்.18:22; மத். 27:34).

(9) உத்தானம் (சங். 16:15; மத். 28:6).

(10) ஆரோகணம். (சங். 109:1; அப். நட. 2:24).

ஆகையால் வாக்களிக்கப்பட்ட மெசையா சேசுநாதர் தான் என்று தீர்மானிக்க வேண்டும்.


8. சேசுகிறீஸ்துநாதர் மெய்யான சர்வேசுரன் என்று பிதாவாகிய சர்வேசுரன் அத்தாட்சி கொடுத்தாரா?

(1) சேசுநாதர் ஞானஸ்நானம் பெற்ற சமயத்திலும், “என் நேச குமாரன் இவரே” (மத். 3:7),

(2)  அவர் தபோர் என்னும் மலையில் மறுரூபமான போதும் (மத். 17:5) இவர் “தமது பிரிய குமாரன்” என்று பிதாவாகிய சர்வேசுரன் வெளிப்படுத்தினார்.


9. சேசுநாதர் தம்மைப் பற்றி போதித்ததென்ன?

(1) பரலோகத்திலும், பூலோகத்திலும் (மத்.8:26; 28:18), மனிதர் பேரிலும் (அரு. 13:2; மத். 28:20), சர்வ வல்லமையுள்ளவராகவும், மோட்சத்துக்கும், அருபிகளுக்கும் (மத். 16:19, 27; 26:64), சர்வ கர்த்தராகவும், பரம நீதிபோதகராகவும் (மத். 5:22,28,32,34; அரு. 14:15,21), இராஜாவாகவும் (மத்.25:34; அரு.18:37) தம்மைக் குறிக்கிறார்.

(2) தமது பெயராலேயும், சொந்த வல்லமையினாலே யும் அநேக புதுமைகளைச் செய்து (மாற். 1:27; 5:8; 12:11; 14:58; அரு. 2:19), தமது சீ­ர்களுக்கு அவைகளைச் செய்யவும் வல்லமை கொடுக்கிறார் (மத். 10:8; மாற். 3:15; 6:7; லூக். 9:1).

(3) பாவங்களைப் பொறுக்கவும் (மத்.9:2; லூக். 5:20; 7:48), இருதய இரகசியமானவைகளை அறியவும் (மத். 9:4; லூக். 5:22; 7:40; 9:47; அரு. 1:47-50; 6:15,72; 16:19), ஞான உயிரையும், சரீர உயிரையும் கொடுக்கவும் (அரு.4:13,14,; 5:21,40; 6:52; 10:28), செத்துப் போனவர்களையும் (அரு.5:21,25,28) தம்மையும் (அரு. 2:19; 10:18) உயிர்ப்பிக்கவும் தமக்கு வல்லமை இருப்பதாகச் சொல்கிறார்.

(4) தாம் சர்வலோகத்தின் பரம நீதிபதியாகவும் (மத். 25:31-46; அரு. 5:22), நித்திய சீவியத்தைக் கொடுப்பவராகவும் (அரு. 6:47; 10:28; 11:26), சர்வ சத்தியமும், ஒளியும், ஜீவனுமா யிருப்பதாகவும் (அரு. 5:26; 8:12; 11:23; 14:6), நித்தியமாயிருந்து (அரு. 8:25,58), எங்கும் வியாபித்திருந்து (அரு.3:13), சகலத்தையும் அறிகிறவராயிருப்பதாகவும் (மத். 11:27; அரு. 3:11,12) குறிக்கிறார்.

(5) இஸ்பிரீத்துசாந்துவை அனுப்புகிறவர் தாம்தான் என்கிறார் (அரு.16:7).

(6) தாம் பிதாவாகிய சர்வேசுரனுக்குச் சமமாயிருக் கிறதாகவும் (அரு.5:17,19,21,26; 19:7), “என்னைக் காண்கிறவன் என் பிதாவையும் காண்கிறான்” (அரு. 14:9), பிதாவின் சுபாவம் தமக்கும் இருப்பதாகவும் (அரு.14:1), “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (அரு.10:30), பிதாவைச் சங்கிக்கிறது போல் தம்மையும் சங்கிக்க வேண்டும் என்றும் சாதிக்கிறார் (அரு.5:23).

10. சேசுநாதர் தாம் சர்வேசுரன் என்று விசேஷித்த விதமாய்ச் சாதிக்கவில்லையா?

தம்முடைய அப்போஸ்தலர்கள், யூத ஜனங்கள், நீதி ஸ்தலத்திலிருந்த கைப்பாஸ் முதலானவர்கள் முன்பாக தாம் சர்வேசுரன் என்று விசேஷித்த விதமாய் அவர் சாதித்திருக்கிறார்.


11. அதெப்படி?

(1) அவரைப் பார்த்து, அர்ச். இராயப்பர்: “தேவரீர் சீவனுள்ள சர்வேசுரனின் சுதனாகிய கிறீஸ்து” என்று சொன்ன போது, அர்ச். இராயப்பர் சொன்னது பிசகென்று சொல்லாமல், அவர் சொன்ன வார்த்தைகள் சர்வேசுரனால் அவருக்கு அறிவிக்கப் பட்டதென்று காட்டும்படியாக:  “நீ பாக்கியவானாயிருக்கிறாய், ஏனெனில், மாமிசமும், இரத்தமும் அல்ல, பரமண்டலங்களிலிருக் கிற என் பிதாவானவரே இதை உமக்கு வெளிப்படுத்தினார்” என்று வசனித்தார் (மத். 16:16,17).

(2) மீளவும் பிரதான ஆசாரியனாகிய கைப்பாஸ் அவரை நோக்கி: “சுயஞ்ஜீவியராகிய சுவாமி பேரால் ஆணையிட்டு: நீ தேவ சுதனாகிய கிறீஸ்துநாதராயிருக்கிறாயோவென்று சொல்” எனக் கேட்க, அவர்: “நீர் உள்ளபடியே சொன்னீர்” என்று பதில் தந்தார் (மத். 26:63,64).


12. சேசுநாதர் தமது தெய்வீகத்தை ஸ்திரப்படுத்தினாரா?

அவர் தமது பரிசுத்த சீவியத்தினாலும், தீர்க்கதரிசனங்களாலும், புதுமைகளாலும், விசேஷமாய்த் தாம் உயிர்த்தெழுந்த புதுமையினாலும் தம்முடைய தெய்வீகத்தை ஒப்பித்திருக்கிறார்.


13. சேசுநாதர் தாம் சர்வேசுரன் என்று தமது பரிசுத்த சீவியத்தினால் எப்படி ஸ்திரப்படுத்தினார்?

அவருடைய போதகமானது மனிதனால் நினைக்கக் கூடிய சகல உன்னத போதகங்களையயல்லாம் பார்க்க அதிக ஆச்சரியத்துக்குரியதாயிருப்பதுமன்றி, அவருடைய பரிசுத்த சீவியமும், சாங்கோபாங்க நடத்தையும், ஒரு மனிதனுங் காண்பிக்கக் கூடாத அதியுன்னத நன்மாதிரிகையாயிருந்தது என்பதற்குச் சந்தேக மில்லை.  ஆனதினால்தான் அவர் அஞ்சாமல் தமது எதிரிகளை நோக்கி, “என்னிடத்திலே பாவம் உண்டென்று உங்களில் எவன் என்னைக் குற்றஞ்சாட்டக் கூடும்?” என்று சொல்லக்கூடியவரா யிருந்தார் (அரு. 8:46).

14.சேசுநாதர் தாம் சொன்ன தீர்க்கதரிசனங்களால் தமது தெய்வீகத்தை எப்படி ஒப்பித்தார்?

மனுஷன் தன்னிஷ்டப்படி செய்யவும், செய்யாமலிருக் கவுங் கூடிய ஒரு காரியத்தை நிச்சயமாகவும், திட்டமாகவும், வெகு காலத்துக்கு முன்னேதானே தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுவது, சர்வேசுரன் ஒருவரால் மட்டுமே முடியக்கூடிய செயல்.  சேசுநாதர் யூதாசுடைய சதி துரோகத்தையும், அர்ச். இராயப்பரின் மறுதலிப் பையும், தமது பாடுகளையும், உயிர்த்தலையும், ஜெருசலேமின் அழிவையும் முன்னறிவித்தார்.


15. புதுமை என்பது எது?

சிருஷ்டிக்கப்பட்ட இயற்கை ஒழுங்கு முழுவதற்கும் உட்படாமல் சர்வேசுரன் வல்லமையினால் மாத்திரம் நடைபெறும் அதிசயச் சம்பவமே புதுமை அல்லது அற்புதம் எனப்படும்.


16. சேசுநாதர் மறுக்கமுடியாத புதுமைகளால் தமது தெய்வீகத்தை எண்பித்தாரா?

புதுமையானது சர்வேசுரன் ஒருவராலேயே ஆகக் கூடுமொழிய மனிதன் சொந்த சக்தியால் ஆக முடியாது.  சர்வேசுரன் மாத்திரம் செய்யக்கூடிய கணக்கற்ற புதுமைகளை சேசுநாதர் செய்ததுமல்லாமல், அவைகளைத் தமது தேவ அனுப்புதலுக்கும், தாம் சர்வேசுரனுடைய சுதன் என்பதற்கும் அத்தாட்சிகளாகக் கொடுத்திருக்கிறார்.

சேசுநாதர் தாம் தேவசுதன் என்று சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைத் தூஷணித்துப் பேசும்போது, அவர் மறுமொழி யாக உரைத்ததாவது: “என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்து வருகிற கிரியைகளே என்னைக் குறித்துச் சாட்சி சொல்லுகின்றன.  நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவசிக்க வேண்டாம்... அவைகளைச் செய்கிறேனாகில், என்னை விசுவசிக்க உங்களுக்கு மனமில்லாத போதிலும், என் கிரியைகளை விசுவசியுங்கள்” (அரு. 10:25,37,38).


17. சேசுநாதருடைய உத்தானம் அவருடைய தெய்வீகத்தை எப்படி எண்பிக்கிறது?

முன்னதாகவே சொல்லியபடி சேசுநாதர் மரித்தபின் கல்லறையைவிட்டுத் தமது சொந்த வல்லமையால் உயிர்த்தெழுந்த போது தமது தெய்வீகத்தை அதிகமாய்த் துலங்கச் செய்தார்.


18. அப்போஸ்தலர்கள் சேசுநாதர் மெய்யான சர்வேசுரன் என்று எப்படி ஸ்திரப்படுத்தினார்கள்?

அப்போஸ்தலர்கள் சேசுகிறீஸ்துநாதர் மெய்யான சர்வேசுரன் என்று கண்டுபிடித்து, அவருடைய தெய்வீகத்தைப் பற்றிப் பிரசங்கித்து, எழுதி வைத்ததுமல்லாமல், அதை எண்ணிக்கையில்லாத புதுமைகளால் நிரூபித்தார்கள்.  கடைசியாய்  இச்சத்தியத்திற்காகத் தங்கள் உயிரையே கொடுத்தார்கள்.


19. வேதசாட்சிகள் எப்பேர்ப்பட்ட அத்தாட்சி கொடுத்தார்கள்?

இலட்சக்கணக்கான வேதசாட்சிகள் சேசுநாதரின் தெய்வீகத்தை மறுதலிக்கும்படி கட்டாயம் பண்ணப்பட்ட போதிலும், அப்போஸ்தலர்களின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, பல்லாண்டு அளவாய், இன்று வரையிலும் கூட அவர்கள் சகலவித அகோர வேதனைகளைப் பொறுமையோடு அநுபவித்து, தங்கள் உயிரை முதலாய்ப் பலிகொடுத்து, அவர் சர்வேசுரன் என்று அத்தாட்சி கொடுத்திருக்கிறார்கள்.


20. திருச்சபையின் ஸ்தாபகமும், அதின் விருத்தியும், சேசுநாதர் மெய்யான சர்வேசுரன் என்று எப்படி எண்பிக்கின்றன?

சேசுநாதர் தமது திருச்சபையை ஸ்தாபிக்கும்படி கல்வி சாஸ்திரிகளையும், ஆஸ்திக்காரரையும், மனுஷருக்கு முன் மதிப்புள்ளவர்களையும் தெரிந்து கொள்ளாமல், அறிவீனரும், கல்வியறிவு இல்லாதவர்களும், ஏழைகளும், மனிதருக்கு முன் மதிப்பற்றவர் களும் கபடில்லாதவர்களுமான பன்னிரண்டு மனிதரைத் தெரிந்து கொண்டார். சேசுநாதரின் வாக்கின்படி இவர்களே உலகத்தின் எத்திசை யிலும் திருச்சபை ஸ்தாபிக்கப்படுவதற்குக் காரணமானார்கள்.


21. சேசுநாதர் சர்வேசுரன் என்று திருச்சபையின் பராமரிப்பு எப்படி எண்பிக்கிறது?

திருச்சபைக்கு விரோதமாய் வைராக்கியம் கொண்ட கணக்கற்ற விரோதிகள் எப்படியாகிலும் இதை நிர்மூலமாக்க வேணு மென்று உறுதியாக தீர்மானித்துக்கொண்டு, இடைவிடாமல் தங்க ளால் கூடிய முயற்சியயல்லாம் எடுத்தும், எண்ணிக்கையில்லாத இந்த ஆபத்துகளின் மத்தியில் எப்போதும் திருச்சபை ஜெயசீலி யாய் வளர்ந்து வந்திருக்கிறது. தாம் சர்வேசுரன் என்று சேசுநாதர் சொன்னது மெய்யாயில்லாவிட்டால், அவர் ஸ்தாபித்த திருச்சபையை சர்வேசுரன் இவ்வாறு காப்பாற்றியிருப்பாரோ? ஒருபோதுமில்லை.