1. விசுவாசப் பிரமாணத்தின் 10-ம் பிரிவைச் சொல்லு.
“பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.”
2. பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன் என்பதினால் என்ன விசுவசிக்கிறோம்?
சேசுநாதர் தமது திருச்சபைக்குப் பாவங்களை மன்னிக் கும் வல்லமையைக் கொடுத்திருக்கிறராரென்று விசுவசிக்கிறோம்.
103. பாவப் பொறுத்தல் ஆவதென்ன?
சகல பாவங்களையும் பொறுப்பதற்கு சேசுநாதர் தமது திருச்சபைக்குக் கொடுத்திருக்கும் அதிகாரமாகும்.
1. பாவங்களைப் பொறுக்க யாருக்கு அதிகாரமுண்டு?
அப்பேர்ப்பட்ட அதிகாரம் சர்வேசுரனுக்கு மாத்திரம் உண்டு. “சர்வேசுரன் ஒருவரையன்றிப் பாவங்களை மன்னிக்கத் தக்கவர்கள் யார்?” (மாற். 2:7).
2. சேசுநாதருக்கு இந்த அதிகாரமுண்டா?
பிதாவின் குமாரனாயிருக்கிற சேசுநாதர் சர்வேசுரன் ஆகியமட்டும் இந்த அதிகாரத்தைத் தமது பிதாவோடு நித்திய காலம் உடையவராயிருக்கிறாரென்பதற்குச் சந்தேகமில்லை. மனித அவதாரஞ் செய்த பிறகும் அவருக்கு இந்த அதிகாரமிருந்தது. ஏனென்றால் அவருடைய மனுஷ சுபாவத்தோடு தேவ சுபாவம் ஐக்கியமாய் ஒன்றித்திருந்தது.
3. சேசுநாதர் இவ்வுலகத்தில் இருந்த போது, அவ்வதிகாரம் தமக்கு இருக்கிறதாகச் சாதித்து எண்பித்தாரா?
சுவிசேஷத்தில் சொல்லியிருக்கும் திமிர்வாதக்காரன் குணப்படுத்தப்பட்டது இதற்கோர் ஏற்ற அத்தாட்சி.
சேசுநாதர் கப்பர்னாவும் என்னும் ஊரிலுள்ள ஒரு விட்டிலிருந்து போதித்துக் கொண்டிருக்கையில் சில மனிதர் ஒரு திமிர்வாதக்காரனை ஒரு கட்டிலில் சுமந்து கொண்டு வந்தார்கள். ஆனால் ஜனக்கும்பலினிமித்தம், அவர்கள் அவனை சேசுநாதர் கிட்டக் கொண்டுபோகக் கூடாதபடியால், வீட்டின்மேல் ஏறி, ஓடுகளைப் பிரித்து, அந்த வழியாய்க் கட்டிலோடு அவனை சேசு நாதர் முன்பாக இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு சேசுநாதர் “மகனே, உன் பாவங்கள் உனக்குப் பொறுக்கப் பட்டன” என்றார். அப்போது அங்கு கூடியிருந்த பரிசேயரும், வேதபாரகரும்: “தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? கடவுள் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கக் கூடியவர் யார்?” என்று சொல்லி, யோசிக்கத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களுடைய புத்தியிலிருந்த யோசனைகளை நமது கர்த்தர் அறிந்து: “ஏன் உங்கள் இருதயத்தில் தீங்கானதை நினைக்கிறீர்கள்? பாவங்கள் உனக்குப் பொறுக்கப்பட்டன என்பதோ, அல்லது நீ எழுந்து நட என்பதோ, எது அதிக எளிதானது? பூமியிலே பாவங்களைப் பொறுக்கும்படி மனுமகனுக்கு வல்லமை உண்டென்று உங்களுக்குக் காட்டும்படி அவ்வாறு சொன்னேன்” என்று வசனித்து, சேசுநாதர் திமிர்வாதக் காரனைப் பார்த்து: “இதோ உனக்குச் சொல்லுகிறேன், நீ எழுந்து உன் கட்டிலை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்றார். உடனே அவன் எழுந்து தன் கட்டிலை எடுத்துக்கொண்டு எல்லா ருக்கும் முன்பாகப் போனான் (மாற். 2, லூக். 5, மத். 9).
4. சேசுநாதர் மேற்கூறிய சமயத்தில் மாத்திரம் அந்த அதிகாரத்தை செலுத்தினாரா?
அவர் பல தடவைகளில் பாவப் பொறுத்தல் கொடுத் திருக்கிறாரென்று சுவிசேஷத்தில் வாசித்துப் பார்க்கலாம். உதாரணமாக: பாவியான ஸ்திரீக்கும் (லூக். 7:48), விபசார ஸ்திரீக்கும் (அரு;. 8), நல்ல கள்ளனுக்கும் (லூக். 23:43).
5. சேசுநாதர் இந்த மேலான அதிகாரத்தை யாருக்கு அளித்தார்?
தமது திருச்சபைக்கு மாத்திரம் அவ்வதிகாரத்தைக் கொடுத்தருளினார். அவர் உயிர்த்தபிறகு ஒருநாள் தமது அப்போஸ்தலர்களுக்குத் தரிசனையாகி, “எவர்களுடைய பாவங் களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னிக்கப்படும்” என்றார் (அரு. 20:23).
6. திருச்சபையில் இவ்வதிகாரம் யாருக்குக் கொடுக்கப்பட்டிருக் கிறது?
எல்லா விசுவாசிகளுக்கும் கொடுக்கப்படாமல், அப்போஸ்தலர்களுக்குப் பின் நியாய முறைமைப்படி வரும் குருக்களுக்கு மாத்திரம் இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது.
7. பிரிவினைக்காரருக்கும், பதிதருக்கும் பாவத்தை மன்னிக்கும் வல்லமையுண்டா?
அவர்களுக்கு அப்பேர்ப்பட்ட வல்லமையில்லை.
8. எப்பேர்ப்பட்ட கனமான பாவங்களையும் மன்னிக்கத் திருச்சபைக்கு அதிகாரமிருக்கிறதா?
சேசுநாதர் தமது திருச்சபைக்குக் கொடுத்த அதிகாரத்துக்கு மட்டுக்கட்டு இல்லாததினால், எவ்வளவு பெரிய பாவங்களை ஒருவன் கட்டிக் கொண்டிருந்தாலும், எத்தனை விசை அவைகளைச் செய்திருந்தாலும், மெய்யான மனஸ்தாபப்பட்டால், அவனுக்குப் பாவப் பொறுத்தல் கொடுக்கத் திருச்சபைக்கு சர்வ அதிகாரம் உண்டு.
101. திருச்சபையில் எப்படி பாவப் பொறுத்தல் அடையலாம்?
விசேஷமாய் ஞானஸ்நானம், பச்சாதாபம் என்கிற தேவ திரவிய அநுமானங்களாலேதான்.
1. ஞானஸ்நானம், பச்சாத்தாபம் என்கிற இவ்விரண்டு தேவத் திரவிய அநுமானங்கள் வழியாய்ப் பாவப் பொறுத்தல் அளிக்கப்படுமென்று சொல்லுவானேன்?
ஏனென்றால், இவ்விரண்டு தேவத்திரவிய அநுமானங்கள் பாவ மன்னிப்புக்காக சேசுநாதரால் திருச்சபையில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
1. ஞானஸ்நானம்: இந்தத் தேவத்திரவிய அநுமானத்தால் சென்மப்பாவம் மாத்திரமல்ல, சகல கர்மப் பாவங்களும், பாவத்தின் சகலவித ஆக்கினையும் நிவிர்த்தியாகின்றன.
2. பச்சாதாபம்: தக்க ஆயத்தத்தோடு இந்தத் தேவத்திரவிய அநுமானம் பெறுகிறவர்களுக்கு, ஞானஸ்நானம் பெற்ற பிறகு செய்த சகல பாவமும் பொறுக்கப்படுகின்றது. ஆனால் நித்திய ஆக்கினை நீங்கினாலும், சாதாரணமாய் அநித்திய ஆக்கினை முழுதும் நீங்குகிறதில்லை.
2. விசேஷமாய் என்று சொல்லுவானேன்?
ஏனென்றால் ஒரு சில சமயங்களில் வேறுவிதமாக நாம் பாவப் பொறுத்தல் அடையலாம். இப்படியே:
(1) பாவசங்கீர்த்தனம் செய்வேன் என்னும் கருத் தோடு உத்தம மனஸ்தாபப்பட்டால், பாவங்கள் மன்னிக்கப்படும்.
(2) மரண அவஸ்தையின்போது, பாவசங்கீர்த்தனம் செய்யச் சாத்தியப்படாத சந்தர்ப்பத்தில் தன் பாவங்களுக்காக உத்தம மனஸ்தாபப்பட்டால், அவஸ்தைப் பூசுதல் பாவங்களை நீக்கிப் போடக் கூடும்.
(3) மேலும் அற்பப் பாவங்களுக்கு மற்ற தேவத் திரவிய அநுமானங்களாலும், தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் செய்யும் நற்கிரியைகள் முதலியவைகளாலும் மன்னிப்படையலாம்.
3. யாருடைய பேறுபலன்களினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன?
நமக்காகச் சிலுவையில் மரித்த சேசுகிறீஸ்துநாதருடைய பேறுபலன்களினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.