நாம் இப்போது அறிவித்துள்ளதை இன்னும் அதிகத் தெளிவுள்ளதாக்கும்படி, அர்ச்சியசிஷ்டவர்களும், பரிசுத்த வேதபாரகர்களும் கூறியவைகளை இங்கு மேற்கோள் காட்டுவோம்.
அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் : "பூசையைப் போல மிக மேலான, கடவுளுக்கு மிகப் பிரியமான, நமக்கு மிகப் பயனுள்ள ஜெபமோ, நற்செயலோ உலகில் வேறு எதுவுமில்லை.''
அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் : "பூசையை விட அதிக பரிசுத்தமானதும், அதிக நல்லதும், அதிக மேலானது மான எதையும் கடவுளாலும் கூட செய்ய முடியாது.''
அர்ச். அக்குயினாஸ் தோமையார், பூசை என்பது கல்வாரிப் பலியை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்றும், அது பீடத்தின் மீது புதுப்பிக்கப்படும் கல்வாரிப் பலியே என்றும், ஒவ்வொரு பூசையும் சிலுவைப் பலி தருகிற அதே நன்மைகளை மனிதர்களுக்குக் கொண்டு வருகிறது என்றும் நமக்குக் கற்பிக்கிறார்.
அர்ச். க்றீசோஸ்தோம் அருளப்பர் : ''பூசையானது கல்வாரிப் பலி கொண்டுள்ள அதே மதிப்பைத் தானும் கொண்டுள்ளது.''
அர்ச். பொனவெந்தூர்: ''பூசை என்பது கடவுளின் முழு சிநேகத்தினுடையவும், அவர் மனிதர்களுக்குத் தரும் சகல நன்மைகளுடையவும் தொகுப்பாக இருக்கிறது. சேசுநாத ருடைய மனிதாவதாரப் பரம இரகசியத்தால் மனிதர்கள் மீது பொழியப்பட்ட நன்மைக்கு எந்த விதத்திலும் குறையாத நன்மைகளை ஒவ்வொரு பூசையும் உலகின்மீது பொழிகிறது.''
கொலோனின் மேற்றிராணியாரான அர்ச். ஹேனான் என்பவர் ஒருமுறை பூசையின் தேவ வசீகரத்தின் போது வார்த்தைக் கெட்டாத பேரழகுள்ள ஓர் ஒளியுருண்டை யையும், திரு இரத்தப் பாத்திரத்தைச் சுற்றி ஒரு மிகப் பிரகாசமான ஒளி வட்டத்தையும் கண்டார். அதன்பின் அவை திருப்பாத்திரத்தினுள் நுழைவதையும் அவர் கண்டார். இது அவரை எந்த அளவுக்கு ஒரு பரிசுத்தமான அச்சத்தால் நிரப்பியது என்றால், தொடர்ந்து பூசை வைக்க முடியாமல் அவர் பயத்தால் தடுமாறிப் போனார். ஆனால் நம் மனிதக் கண்களுக்குத் தெரியாவிட்டாலும், இது ஒவ்வொரு உண்மையான பூசையிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று கடவுள் அவருக்கு வெளிப்படுத்தினார்.
திவ்விய அப்பம் என்பது தமது கம்பீர மகத்துவத்தால் பரலோகத்தை நிரப்புகிறவராகிய மாபெரும், நித்திய, சர்வ வல்லபரான சர்வேசுரனே தவிர வேறு ஒன்றுமில்லை. இதை ஏன் நாம் உணர்வதில்லை?
க்ளூனியின் அர்ச். ஓடோ : "உலகத்தின் மகிழ்ச்சி திவ்விய பலிபூசையிலிருந்தே வருகிறது.''
ஜெருசலேமின் திமோத்தேயு : ''பூசை என்பது இல்லாமல் இருந்திருந்தால், மனிதருடைய பாவங்களின் காரணமாக உலகம் மிக நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப் பட்டிருக்கும்."
''பூசையின் அளவுக்கு கடவுளின் கடுஞ்சினத்தை சாந்தப்படுத்துவதும், இவ்வளவு அதிகமான தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தருவதுமான காரியம் வேறு எதுவுமில்லை .''
அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் : ''பூசையிலிருந்து நாம் பெறும் ஏராளமான நன்மைகளையும், ஆசீர்வாதங் களையும் விளக்கிக் கூற எந்த மனித நாவாலும் இயலாது. பாவியான மனிதன் பாவ மன்னிப்புப் பெறுகிறான், நல்ல மனிதன் அதிக பரிசுத்ததனம் அடைகிறான், நம் குற்றங்கள் திருத்தப்படுகின்றன. நம்மிடமுள்ள தலையான பாவங்கள் பூசை காண்பதன் மூலம் வேரறுக்கப்படுகின்றன."
ஃபோர்னேரியஸ் : ''மிக நீண்டவையும், மிகுந்த வேதனை தருபவையுமான திருயாத்திரைகளின் மூலம் நாம் சாதிப் பதை விட அதிகமாக, தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் நாம் பங்குபெறும் ஒரே ஒரு பூசையின் மூலம் நாம் கடவு ளுக்கு அதிக மகிழ்ச்சி தர முடியும், நமக்கும் அதிக நன்மை களையும், உபகாரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.''
மார்ஷாந்த்: ''சகல அர்ச்சியசிஷ்டவர்களுடையவும் அனைத்து தவ முயற்சிகளையும், எல்லா ஜெபங்களையும், எல்லா நற்செயல் களையும் நாம் பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு ஒப்புக்கொடுத் தாலும், பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடையவும், கோடிக்கணக் கான வேதசாட்சிகளுடையவும் இரத்தத் தாரைகள் முழுவதையும் நாம் ஒப்புக்கொடுத்தாலும், அவையெல்லாம் ஒரே ஒரு பூசையை விடக் குறைந்த மகிமையையும், மகிழ்ச்சியையுமே அவருக்குத் தரும்! ஏன்? ஏனெனில் பூசை உண்மையாகவே கல்வாரிப் பலியாக இருக்கிறது. பூசையில் சேசுக்கிறிஸ்துநாதர் தமது திருப்பாடுகள் மற்றும் திருமணம் ஆகியவற்றின் சகல வேதனைகளையும், நிந்தை அவமானங்களையும், அளவற்ற பேறுபலன்களையும் தம் நித்திய பிதாவுக்குப்பலியாக ஒப்புக்கொடுக்கிறார்.''
பூசை நமக்கு மிக மிகப் பெரிய ஞான, சரீர வரப்பிர சாதங்களையும், ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நமக்குப் பெற்றுத் தருகிறது. வேறு எந்த வழியிலும் நாம் பெற்றுக் கொள்ளவே இயலாத வரப்பிரசாதங்கள் இவை.
அது நம்மை எண்ணற்ற ஆபத்துக்களிலிருந்து காப் பாற்றி, நம்மை அச்சுறுத்துகிற தீமைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது.
இதெல்லாவற்றிற்கும் என்ன காரணம் என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் கேட்கிறார். அதன்பின் அவரே பதிலும் தருகிறார்: ''பூசை அளவற்ற மதிப்புடையது; ஆனால் சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்கள் ஆகியோரின் சகல ஜெபங்களும், நற்செயல்களும் மிக ஏராளமான பேறுபலனைக் கொண்டுள்ளன என்றாலும், அவை உரைக்க இயலாத மகிமையைக் கடவுளுக்குத் தருகின்றன என்றாலும், அவை அளவுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. ஆகவே பூசையின் அளவற்ற திவ்விய பலி யோடு ஒப்பிட அவை தகுதியில்லாதவையாக இருக்கின்றன."
படைப்பு முழுவதும், வானங்களும், பூமியும், சூரியனும், நிலவும், நட்சத்திரங்களும், மலைகளும், பெருங்கடல்களும், சகல மனிதர்களும், சம்மனசுக்களும் கடவுளோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லாமையாக இருப்பது போலவே, எந்த நற்செயல்களும், அவை எவ்வளவு பரிசுத்தமானவையாக இருந்தாலும் ஒரே ஒரு பூசைக்கு அவை நிகரானவை அல்ல. பூசை என்பது கடவுளேயன்றி வேறெதுவுமல்லை.