ஐந்தாம் கற்பனை கற்பிப்பது

143. ஐந்தாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்குக் கற்பிக்கிற தென்ன?

பிறர் செய்த குற்றங்களை மன்னிக்கவும், நமது பகையாளிகளோடு சமாதானமாய்ப் போகவும், கூடினவரையில் எல்லோருக்கும் உதவி தர்மங்களைச் செய்யவும் வேண்டுமென்று கற்பிக்கிறார்.


1. பகையாளிகள் மட்டில் நமக்குள்ள முதல் கடமை என்ன?

அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதுதான்.


2. இந்தக் கடமை கண்டிப்பான கடமையா?

பிறருடைய குற்றங்களை மன்னிக்காதவர்கள் சர்வேசுரனிடத்தில் மன்னிப்பு அடையமாட்டார்களென்று சேசுநாதர் பல தடவை சொல்லியிருக்கிறார் (மத். 7:35; 5:23,26).


3. இரண்டாம் கடமை என்ன?

அவர்களோடு சமாதானமாய்ப் போகவேண்டும்; “நீ பீடத்தண்டையில் உன் காணிக்கையைச் செலுத்தும்பொழுது உன் சகோதரன் உன்மேல் ஏதோ மனத்தாங்கலா யிருக்கிறானென்று அங்கே நினைவுகூர்வாயாகில், உன் காணிக்கையை அங்கே பீடத்தின் முன்பாக வைத்துவிட்டு, முந்த முந்த உன் சகோதரனோடு உறவாடப் போ; பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” என்று சேசுநாதர் திருவுளம்பற்றினார் (மத். 5:23,24).


4. மூன்றாம் கடமை என்ன?

கூடினவரையில் எல்லோருக்கும் உதவி நன்மை செய்ய வேண்டும்.


5. அது கண்டிப்பான கடமையா?

பொதுத் தீர்வை நாளிலே பிறருக்கு உதவி நன்மை செய்யாதவர்கள் சபிக்கப்படுவார்களென்று சேசுநாதர் நமக்கு அறிவித்திருக் கிறார் (மத்.25:41).