தேவ ஆட்கள்

17. பிதா என்பதற்கு அர்த்தமென்ன?

தகப்பன்.


18. சுதன் என்பதற்கு அர்த்தமென்ன?

குமாரன், மகன்.


19. இஸ்பிரீத்துசாந்து என்பதற்கு அர்த்தமென்ன?

பரிசுத்த அரூபி  அல்லது பரிசுத்த ஞான ஆவியானவர்.


1. அர்ச். திரித்துவத்தின் முதலாம் ஆள் யார்?

பிதாவாகிய சர்வேசுரன்.


2. பிதாவை அர்ச். திரித்துவத்தின் முதல் ஆள் என்பது ஏன்?

பிதாவானவர் வேறே ஒருவரிடத்திலுமிருந்து தேவ சுபாவத்தை அடையாமல் நித்தியமாய்த் தம்மில் தாமாய் இருக்கிறதைப் பற்றியே.


3. முதல் ஆளுக்குப் பிதா என்கிற பெயர் எப்படிப் பொருந்தும்?

தமக்கு எல்லாவற்றிலும் சரிசமானமாயிருக்கும் இரண்டாம் ஆளாகிய சுதனை நித்தியமாய்ப் பிறப்பிக்கிறதினாலே அவர் பிதாவென்று சொல்லத் தகும்.


4. பிதா சுதனை நித்தியமாய்ப் பிறப்பிக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

வேதாகமத்தினின்று இவ்விசுவாச சத்தியம் நமக்குத் தெரியும்.  “விடியற்காலத்தின் நட்சத்திரத்திற்கு முன் உம்மை நம் அகத்தில் நின்று ஜெனிப்பித்தோம்” (சங்.109:3). “என் நேச குமாரன் இவரே” (மத். 3:17; 17:5). “நீரே என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜெனிப்பித்தேன் என்றும் மீளவும்: நான் அவருக்குப் பிதா வாயிருப்பேன்; அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும் அவர் எக்காலத்திலாவது தூதர்களில் யாருக்காகிலும் சொன்னதுண்டோ?” (எபி. 1:5).


5. அர்ச். திரித்துவத்தின் இரண்டாம் ஆள் யார்?

சுதன்.


6. சுதனை அர்ச். திரித்துவத்தின் இரண்டாம் ஆள் என்பது ஏன்?

சுதன் பிதாவினின்று ஜெனித்தவராகையால், அவரை அர்ச். தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆள் என்கிறோம்.


7. இரண்டாம் ஆள் பிதாவினுடைய சுதன் என்கிறபோது, உலகத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பிறப்பிக்கிறதுபோலவே, பிதாவானவர் அவரைப் பிறப்பிக்கிறாரென்று கண்டுபிடிக்க வேண்டுமா?

நிச்சயமாகக் கண்டுபிடிக்கவே கூடாது.


8. அப்படியானால் இரண்டாம் ஆளாகிய சர்வேசுரன் தமது பிதாவினின்று எப்படி ஜெனிப்பிக்கப்படுகிறார்?

நமது புத்தியினின்று ஒரு நினைப்பு புறப்படுகிறது போல சுதன் பிதாவினின்று புத்தி வழியாகப் புறப்படுகிறார்.  பிதா வாகிய சர்வேசுரன் தம்மை நித்தியமாய் அறிகிறதினால், தமக்குச் சரியயாத்த சாயலாகிய சுதனை அநாதியாய்ப் பிறப்பிக்கிறார்.  ஆகையினாலே வேதாகமங்களிலும், வேதபாரகர் எழுதின புஸ்தகங்களிலேயும் இரண்டாமாளாகிய சர்வேசுரன் தேவ வார்த்தை என்றும் தேவ ஞானம் என்றும், சுதன் என்றும் சொல்லப்படுகிறார்.


9. இரண்டாம் ஆளுக்குச் சுதன் என்கிற பெயர் மெய்யாகவே பொருந்துமா?

இரண்டாம் ஆளாகிய சர்வேசுரன் பிதாவினின்று ஜெனிப்பிக்கப்படுகிறதினாலே, சுதன் என்கிற பெயர் அவருக்குப் பொருந்தும்.


10. அர்ச். திரித்துவத்தின் மூன்றாம் ஆள் யார்?

இஸ்பிரீத்துசாந்து.


11. இஸ்பிரீத்துசாந்துவை ஏன் அர்ச். திரித்துவத்தின் மூன்றாம் ஆள் என்கிறோம்?

இஸ்பிரீத்துசாந்துவானவர் பிதாவிடமிருந்தும், சுதனிடமிருந்தும் புறப்படுவதினால், அவரை அர்ச். திரித்துவத்தின் மூன்றாம் ஆள் என்கிறோம்.


12. இஸ்பிரீத்துசாந்துவானவர் பிதாவிடத்தினின்றும், சுதனிடத்தினின்றும் புறப்படுகிறார் என்று நாம் எப்படி அறிவோம்?

வேதாகமத்தினின்றும், பாரம்பரியத்தினின்றும், இவ் விசுவாச சத்தியத்தை அறிகிறோம்.

(1) பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும், பிதாவிடத்தினின்று புறப்படுகிறவருமாகிய இஸ்பிரீத்துசாந்துவானவர்..... (அரு. 15:26) பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள் (அரு.16:15) என்று சொல்லும்போது சேசுநாதர் இஸ்பிரீத்துசாந்துவானவர் பிதாவினின்று மாத்திரமல்ல, தம்மிடத்தினின்றும் கூட புறப்படுகிறாரென்று அறிவித்திருக்கிறார்.

(2) அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்து திருச்சபை அந்தச் சத்தியத்தை விசுவசித்துப் படிப்பித்து வருகிறது. 

(அத்தனாசியார் விசுவாசப் பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது)


13. இஸ்பிரீத்துசாந்து பிதாவிடத்தினின்றும், சுதனிடத்தினின்றும் எப்படி புறப்படுகிறார்?

பிதாவும் சுதனும் தங்களிடத்திலுள்ள அளவில்லாத நன்மைத்தனத்தைக் கண்டு, தங்களை நித்தியமாய்ச் சிநேகித்து, தேவ சிநேகமாகிய மூன்றாம் ஆளைப் புறப்படச் செய்கிறார்கள். அநாதியாயிருக்கிற இந்தத் தேவசிநேகமானது இஸ்பிரீத்துசாந்து என்று சொல்லப்படும். அவர் புத்தியின் வழியாகப் பிறக்காமல், மனதின் வழியாய்ப் புறப்படுகிறார்.


14. இஸ்பிரீத்துசாந்துவுக்குச் சுதன் என்கிற பெயரை ஏன் கொடுக்கக்கூடாது?

இரண்டாம் ஆளைப்போல இஸ்பிரீத்துசாந்துவானவர் ஜெனிப்பிக்கப்படாமல், பிதாவிடத்தினிலிருந்தும் சுதனிடத் திலிருந்தும் புறப்படுகிறபடியால், இவரை சுதன் என்று சொல்லக் கூடாது. இரண்டாம் ஆள் மாத்திரம் ஜெனிக்கப்பட்டிருப்பதால், இவரை மாத்திரம் ஏக சுதன் என்று அழைக்கலாம்.


15. இஸ்பிரீத்துசாந்து என்னும் பெயர் மூன்றாம் ஆளுக்கு எப்படிப் பொருந்தும்?

இஸ்பிரீத்துசாந்து என்பதற்கு ஞான ஆவியயன்று அர்த்த மாம். பிதா சுதனுக்குள்ள அளவில்லாத அந்நியோன்னிய சிநேகமாய் அவர் இருக்கிறதினாலே, அந்த நேசத்தினால் அவர் வீசப்படுகிறார். ஆகையினாலே அவர் தேவ ஆவி என்று சொல்வது நியாயமே.


16. சுதனை ஜெனிப்பிக்கிற பிதா முதலாம் ஆள் என்றும், ஜெனிப் பிக்கப்பட்ட சுதன் இரண்டாம் ஆள் என்றும், பிதாவினின்றும் சுதனினின்றும் புறப்படும் இஸ்பிரீத்துசாந்து மூன்றாம் ஆள் என்றும் சொல்லுகிறதினால் அவர்களில் மூத்தவர், நடுவிலவர், இளையவர் உண்டென்று நினைக்கலாமா?

நிச்சயம் நினைக்கவே கூடாது. உண்டாக்கப்பட்ட வஸ்துக் களுக்குள்ளே தகப்பன் பிள்ளைக்கு முந்தினவனாயும், பிள்ளை தகப்பனுக்குப் பிந்தினவனாயும் இருக்கவேண்டியது. ஆனால் அர்ச். தமதிரித்துவ வி­யத்தில் அப்படியல்ல,  சர்வேசுரனிடமுள்ள எல்லாவற்றிற்கும் துவக்கமும், முடிவுமில்லை. பிதாவும், சுதனும், இஸ்பிரீத்துசாந்துவும் அனாதியாயிருக்கிறார்கள். ஏனென்றால், ஒருபோதும் பிதா தம்மைத்தாமே அறியாமலும், பிதாவும் சுதனும் ஒருவர் ஒருவரைச் சிநேகியாமலும் இருக்கமுடியாது. தேவவார்த்தையாகிற  சுதனும், தேவ சிநேகமாகிற இஸ்பிரீத்துசாந்துவும் பிதா வைப் போலவே ஊழியுள்ள காலமாயிருக்கிறபடியால், அவர் களுக்குள் மூத்தவரும் இல்லை. நடுவிலவரும் இல்லை, இளைய வரும் இல்லை; மூன்று தேவ ஆட்களும் துவக்கமின்றி எப்போது மிருக்கிறார்கள்.


17. அந்த வேத சத்தியத்தை விளக்கிக்காட்ட ஒரு உதாரணம் சொல்லு.

ஒரு விளக்கைக் கொளுத்தும்போது உடனே சுவாலை, வெளிச்சம், சூடு ஆக இம்மூன்று குணங்களும் கூடவே உண்டா கிறது. இவைகளுக்குள்ளே ஒன்று முந்தியும் மற்றொன்று பிந்தியும் உண்டாகிறதில்லை. அவ்வாறே அர்ச். திரித்துவத்தின் வி­யத்தில் முதலில் பிதாவையும், பிறகு சுதனையும், கடைசியாய் இஸ்பிரீத்து சாந்துவையும் வரிசையாகச் சொல்லும்போது, கால வரிசை யிலாவது, மகிமையிலாவது, முந்தின பிந்தின இடம் குறிக்கிறதற் காக அல்ல. அர்ச். தமதிரித்துவத்தில் நித்தியமாய் நடக்கிற செய்கைகளை மனிதருக்குள்ளே இயல்பாய் உண்டாகிற முறையின் படி காட்டுவதற்காக மாத்திரம் இப்படிச் சொல்லுகிறோம். ஆனால் சர்வேசுரனிடத்தில் முந்தினதும், பிந்தினதும் யாதொன்றுமில்லை. பெரியதும் சிறியதும் யாதேனுமில்லை.


20. (6) பிதா சர்வேசுரனோ?

சர்வேசுரன்.

பிதா சர்வேசுரன் என்று நாம் எப்படி அறிவோம்?

சேசுநாதர் சுவாமி தாமே அதை நமக்கு அறிவித்தார். அவர் உயிர்த்தபின் அர்ச். மரியமக்தலேனம்மாளுக்குத் தரிசனையாகி நீ என் சகோதரியிடத்திற்குப் போய்: நான் என் பிதாவும், உங்கள் பிதாவும், என் சர்வேசுரனும், உங்கள் சர்வேசுரனுமாயிருக் கிறவரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்று திருவுளம்பற்றினார் (அரு.20:17).


21. (7)  சுதன் சர்வேசுரனோ?

சர்வேசுரன்.

இச்சத்தியம் நமக்கு எப்படித் தெரியும்?

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று சேசு நாதர் தாமே சொல்லியிருக்கிறார். (அரு. 10:30) சேசுநாதர் சுவாமி தம்மைச் சர்வேசுரனுடைய குமாரனாக்கினதினாலேதான் யூதர்கள் அவரை மரணத்திற்குத் தீர்வையிட்டார்கள் (அரு.19:7).

(“சேசுநாதருடைய தெய்வீகம்” என்ற பிரிவைக் காண்க.)


22. (8) இஸ்பிரீத்துசாந்து சர்வேசுரனோ?

சர்வேசுரன்.

இதற்கு அத்தாட்சி என்ன?

வேதாகமமே இதற்கு அத்தாட்சி. அதெப்படி யயன்றால் அனனியா என்னும் ஓர் மனிதன் தன் நிலத்தை விற்று, அந்த நிலக் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சகமாய் வைத்துக் கொண்டு, மீதியை அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான். அப்போது அர்ச். இராயப்பர் அவனை நோக்கி:  “நீ இஸ்பிரீத்து சாந்துவுக்குப் பொய் சொன்னாய்... மனு­ருக்கு அல்ல, சர்வேசுரனுக்கே பொய் சொன்னாய்” என்றார் (அப். நட. 5:1-4).

(இஸ்பிரீத்துசாந்து யார்? என்னும் 77-ம் வினாவைக் காண்க.)


23. (9) மூவரும் மூன்று சர்வேசுரனோ, ஒரே சர்வேசுரனோ?

ஒரே சர்வேசுரன்.


24. (10)  எப்படி ஒரே சர்வேசுரன்?

இந்த மூன்றாட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருக்கிறபடியினாலே, மூவரும் ஒரே சர்வேசுரன்தான்.


1. மூன்றாட்களும் ஒரே சர்வேசுரனாயிருக்கிறபடியால், ஒவ்வொரு தேவ ஆளும் சர்வேசுரனுடைய ஒரு பாகமாய் அல்லது பங்காய் இருக்கிறாரோ?

இல்லை.  ஒவ்வொருவரும் தேவசுபாவம் முழுதும் உடைத்தானவராயிருக்கிறார்.


2. ஒவ்வொரு ஆளும் சர்வேசுரனானால், மூன்று ஆட்களும் மூன்று சர்வேசுரன்தானே?

நிச்சயமாக இல்லை.  மூன்று தேவ ஆட்களும் ஒரே ஒரு தேவனாயிருக்கிறார்கள்.


3. அது எவ்விதம்?

ஒரு வீட்டில் ஒரு பாட்டனும், அவனுடைய மகனும், பேரப்பிள்ளையும் இருக்கும்பட்சத்தில், அவ்வீட்டில் ஒரே மனிதன் மாத்திரம் இருக்கிறதாகச் சொல்லாமல், மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுவோம்.  ஏனென்றால், அம்மூவருடைய மனிதசுபாவம் தனித்தனியாய் வேறுபட்டு இருக்கிறது.  ஒவ்வொரு மனிதனுடைய சுபாவமும் மற்ற மனிதர் சுபாவங்களோடு கலந்து ஒன்றாயிருப்பதாகச் சொல்ல முடியாது.  அம்மூன்று மனிதர்களுக்கும் மூன்று வெவ்வேறான சொந்த சுபாவம் இருக்கிறபடியால், அவர்கள் மூன்று மனிதர்களாயிருக்கிறார்கள் என்று அகத்தியமாய்ச் சொல்ல வேண்டும்.

மூன்று தேவ ஆட்களோவென்றால், அப்படியல்ல.  அவர்கள் தனித்தனியே வெவ்வேறான தேவசுபாவத்தைக் கொண்டிராமல், ஒரே தேவசுபாவத்தைத் தங்களுக்குச் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள்.  சுதனுக்கு இருக்கிற தேவசுபாவம் பிதா வினுடைய தேவ சுபாவம்தான். இஸ்பிரீத்துசாந்துவுக்கு இருக்கிற சுபாவம் பிதா சுதனுடைய சுபாவமே.  மூன்று ஆட்களுக்கும் ஒரே ஒரு தேவசுபாவம் இருக்கிறதினால், மூவரும் ஒரே சர்வேசுரன் என்று சொல்ல வேண்டியது.


4. அது எப்படியாகக் கூடும்?

அதுதான் திரித்துவத்தின் பரம இரகசியம். 


25. (11)  இவர்களுக்குள்ளே வல்லபம் மகிமை முதலான இலட்சணங்களில் வித்தியாசமுண்டோ?

இல்லை.  மூவரும் எல்லாவற்றிலும் சரிசமானமாயிருக்கிறார்கள். 


1.  அதெப்படி?

மூன்று தேவ ஆட்களுக்கும் ஒரே ஒரு தேவசுபாவம் இருப்பதால், அவர்களுக்குரிய இலட்சணங்களிலும், அவர்கள் செய்யும் வெளிக்கிரியைகளிலும் எவ்வித வித்தியாசமும் இருக்க முடியாது.  தேவ இலட்சணங்களெல்லாமும் அவர்கள் செய்யும் வெளிக்கிரிகைகள் எல்லாமும் அவர்களுக்குப்   பொதுவாக இருக்க வேண்டும். ஆகையினாலே மூன்றாட்களும் அநாதியாயிருக் கிறார்கள். மூன்றாட்களும் ஒரே சர்வ வல்லபர், ஒரே  உத்தமர்,சகல நன்மையுடையவர், அளவில்லாத இரக்கமுடையவர், ஒரே கர்த்தர், ஒரே சிருஷ்டிகர், ஒரே காப்பாற்றுகிறவர்.


2. வெளிக்கிரியைகள் என்று சொல்லுவது ஏன்?

சர்வேசுரனிடத்தில் இருவித கிரிகைகள் உண்டு.

1-வது--வெளிக்கிரிகைகள்: அதாவது சர்வேசுரன் தமது சுபாவத்துக்கு வெளியே செய்யும் கிரியைகள்.  உதாரணமாய் சிருஷ்டிப்பு, பராமரிப்பு.  இந்த வெளிக்கிரியைகள் ஒவ்வொரு ஆளும் தனித்தனியே செய்வதில்லை. ஆனால் அவைகள் மூன்றாட்களுக்கும் பொதுவாயிருக்கின்றன.

2-வது--உட்கிரியைகள்: அதாவது சர்வேசுரன் சுபாவத்துக்குள் நித்தியமாய் உண்டாகும் கிரியைகள்.  இப்படியே பிதா சுதனை நித்தியமாய் ஜெனிப்பிக்கிறார். சுதன் பிதாவாலே நித்திய மாய் ஜெனிப்பிக்கப்படுகிறார்.  பிதா சுதனிடத்தினின்று இஸ்பிரீத்து சாந்து புறப்படுகிறார்.  அப்படியிருக்க ஜெனிப்பிக்கிறது பிதாவுக்கு மாத்திரம் செல்லும்.  தம்மை ஜெனிப்பிக்கிறவருடைய சாயலாக ஜெனிப்பிக்கப்படுகிறது சுதனுக்கு மாத்திரம் பொருந்தும். காற்றைப் போல் வீசப்படுவது இஸ்பிரீத்துசாந்துவுக்கு மாத்திரம் பொருந்தும்.


3. அப்படியானால் விசுவாசப் பிரமாணத்தின் முதல் பிரிவில், பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தவர் பிதாவாகிய சர்வேசுர னென்று சொல்லியிருக்கும்போது பிதா மாத்திரம் உலகத்தை உண்டாக்கினாரென்று எண்ணலாமா?

நிச்சயமாக இல்லை. அப்படி எண்ணுவது தப்பறையான காரியம்.


4. எப்படி தப்பறையான காரியம்?

மேற்சொன்னபடி சர்வேசுரனால் செய்யப்படும் வெளிக் கிரியைகள் அனைத்தும் மூன்றாட்களுக்கும் பொதுவா யிருக்கின்றன. ஆகையினாலே பிதாவைப்போல் சுதனும், இஸ்பிரீத்துசாந்துவும் எல்லாம் வல்லபமுள்ளவர்களாயும், சகலத்தையும் படைக்கிறவர்களாயும் இருக்கிறார்கள்.


5. இதிப்படியிருக்க, உலக சிருஷ்டிப்பு ஏன் பிதாவுக்கு மாத்திரம் குறிக்கப்பட்டிருக்கிறது?

அர்ச். திரித்துவத்தின் மூன்றாட்களாலேயும் செய்யப்பட்ட வெளிக் கிரியைகளுக்குள் வல்லபத்துக்கடுத்த கிரியைகளைப் பிதாவுக்கு மாத்திரம் குறித்துச் சொல்வது வழக்கம்.


6. இதைச் சில உவமைகளால் விளக்கிக் காட்டு.

ஒரு குடும்பத்தார் எல்லோரும் சேர்ந்து செய்த கிரியையை அந்தக் குடும்பத்தின் தலைவனுக்கே குறித்துச் சாட்டுகிறது முறை.  ஓர் சேனை முழுதும் சண்டை செய்திருந்தாலும், அதன் ஜெயத்தைச் சேனாதிபதிக்கே செலுத்துகிறோம்.


7. வல்லபத்துக்கடுத்த கிரியைகளைப் பிதாவுக்கு மாத்திரம் குறித்துச் சொல்லுகிறதற்கு முகாந்தரம் என்ன?

அர்ச். திரித்துவத்தின் மூன்றாட்களும், சிருஷ்டிப்பின் வல்லமையையும் சரிசமானமாய்க் கொண்டிருந்தாலும், பிதாவானவர் சகலமும் புறப்படுவதற்கு ஊற்றாக இருக்கிறார்.


8. மற்ற தேவ ஆட்களுக்கும் ஏதாவது சில வெளிக் கிரியைகளைக் குறித்திருக்கிறதா?

குறித்திருக்கிறது.  அப்படியே சுதன் பிதாவினின்று புத்தி வழியாகப் புறப்படுகிறதினாலே புத்தி ஞானத்துக்கு முக்கியமாய் அடுத்த கிரியைகள் அவருக்கும், இஸ்பிரீத்துசாந்து பிதா சுதனுக்குள்ள சிநேகமாயிருக்கிறபடியால் நன்மைத்தனமும், அர்ச்சியசிஷ்டதனமும், தேவசிநேகத்தால் மனிதருக்காகச் செய்யப் படுவதெல்லாமுமே அவருக்கும் குறிக்கப்பட்டிருக்கின்றன.


9. மூன்றாட்களுக்கும் பொதுவாயிருக்கிற இலட்சணங்களை ஒரு ஆளுக்கு மாத்திரம் குறிக்கும் வழக்கத்துக்குக் காரணமென்ன?

மூன்றாட்களுக்கும் தேவ சுபாவத்தில் மெய்யான வித்தியாசமில்லையயன்றாலும், அவர்களுக்குள்ளே மெய்யாக வித்தியாசத்தை அதிகத் தெளிவாய் நமக்குத் தெரிவிக்கும்படியே.


10. மூன்றாட்களுக்கும் தேவசுபாவத்தில் மெய்யான வித்தியாசம் இல்லையயன்றாலும், அவர்களுக்குள்ளே மெய்யான வித்தியாசம் ஒன்று மில்லையா?

தேவ சுபாவத்தில் யாதொரு வித்தியாசமில்லையயன் றாலும், ஆள்வகையில் மெய்யான வித்தியாசம் உண்டென்பது வேத சத்தியம்.


11. இந்த வித்தியாசத்துக்குக் காரணம் என்ன?

தேவ ஆட்கள் புறப்படுகிற விதமே காரணம்.


12. அதெப்படி?

பிதாவாகிய சர்வேசுரன் அநாதியாய்ச் சுதனை ஜெனிப் பிக்கிறார். ஆதலால் சுதன் அநாதியாய்ப் பிதாவினால் ஜெனிப்பிக்கப்படுகிறார்.  பிதா சுதனிடத்திலே நின்று இஸ்பிரீத்துசாந்து அநாதியாய்ப் புறப்படுகிறார். அப்படியிருக்க ஜெனிப்பிக்கிறது பிதாவுக்கு மாத்திரம் செல்லும், தம்மை ஜெனிப்பிக்கிறவருடைய சாயலாக ஜெனிப்பிக்கப்படுகிறது சுதனுக்கு மாத்திரம் செல்லும், காற்றைப் போல் வீசப்படுகிறது இஸ்பிரீத்துசாந்துவுக்கு மாத்திரம் செல்லும்.  இதனாலேதான் மூன்றாட்களுக்குள்ளே இருக்கிற வித்தியாசம் உண்டாகிறது.