1. சீமோனியம் என்பது என்ன?
இயல்பான ஞான காரியங்களையாவது, அல்லது அவைகளோடு சம்பந்தப்பட்ட இலெளகீக காரியங்களையாவது, உலக வியாபார ரீதியில் விலைக்கு வாங்க, அல்லது விற்க வேண்டுமென்கிற தீர்மானமே சீமோனியம் எனப்படும் (தி.ச.727).
2. “வேண்டுமென்கிற தீர்மானம்” என்று சொல்வானேன்?
ஏனெனில், மேற்கூறியவைகளை விற்க அல்லது வாங்க வெறும் முயற்சி செய்தாலும் கூட அப்பாவம் கட்டிக் கொள்ளப்படும்.
3. இந்தப் பாவம் ஏன் சீமோனியம் என்று அழைக்கப்படுகிறது?
ஏனெனில், இப்பாவத்தை மாந்திரிக வித்தைக்காரனான சீமோன் என்பவன் முதன்முதல் கட்டிக் கொண்டபடியால், இது சீமோனியம் என்று அழைக்கப்படுகிறது.
சரித்திரம்
அப்போஸ்தலருடைய கரம் நீட்டுதலினாலே இஸ்பிரீத்துசாந்து கொடுக்கப்படுகிறதை மாயவித்தைக்காரனான சீமோன் என்பவன் கண்டு, அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, அப்பேர்ப்பட்ட வல்லமையைத் தனக்குத் தர வேண்டுமென்று கேட்டான். அப்போது அர்ச். இராயப்பர் அவனை நோக்கி: “சர்வேசுரனுடைய வரத்தைப் பணத்தால் கைக்கொள்ளலாமென்று எண்ணினபடியால், உன்னுடைய பணம் உன்னோடுகூட அழிந்துபோவதாக! ஆகையால் உன்னுடைய இந்த துர்க்குணத்தை விட்டு, நீ மனஸ்தாபப்பட்டுச் சர்வேசுரனை மன்றாடு. உன் இருதயத்திலுள்ள இந்தச் சிந்தனை, ஒருவேளை உனக்கு மன்னிக்கப்படலாம்” என்றார் (அப். நட. 8:18-22).
4. இப்பாவத்தின் தோஷம் எதில் அடங்கியிருக்கிறது?
பரிசுத்த காரியங்களை இலெளகீக காரியங்களுக்கு ஒப்பிட்டுச் சரிப்படுத்துவதில் அடங்கியிருக்கிறது.
5. இப்பாவம் எப்படிப்பட்டதாயிருக்கிறது?
விற்கும் அல்லது விலைக்கு வாங்கும் காரியம் அற்பமாயிருந்தாலும் சரி, கனமாயிருந்தாலும் சரி, எப்போதும் சாவான பாவமாயிருக்கும். மேலும் அந்தப் பரிசுத்த காரியங்களுக்கு அளிக்கப்பட்ட ஞானப்பலன்கள் முழுதும் நீங்கிப் போகும் (தி.ச.924, எண் 2).
6. இப்பாவத்தைக் கட்டிக் கொள்கிறவர்கள் யார்?
(1) அர்ச்சியசிஷ்ட பண்டங்களை விற்கிறவர்களும், வாங்குகிறவர்களும்,
(2) பரிசுத்த காரியங்கள், உதாரணமாக: விபூதி, வர்த்தி, குருத்து, செபமாலை முதலியவைகள் மந்திரிக்கப்பட்டிருக்கிறபடியால், அவைகளை அதிக விலைக்கு விற்கிறவர்களும், வாங்குகிற வர்களுமாம்.
7. அப்படியானால் மந்திரிக்கப்பட்ட செபமாலை, சுரூபங்கள் முதலியவைகளை விலைக்கு விற்க அல்லது வாங்க ஒருக்காலும் கூடாதோ?
இலாபம் சம்பாதிக்காமல், பெருமான விலைக்கு அவைகளை விற்பது அல்லது வாங்குவது சீமோனியமல்ல. ஆனால் அவ்வப்போது அந்தப் பொருட்களுக்கு அளிக்கப்பட்ட ஞானப் பலன்கள் முழுதும் நீங்கிப் போகும்.