நரகம்

இன்று கடவுளின் இரக்கத்தை மட்டுமே பேசுகிற ஒரு தவறான போதனை பரவி வருகிறது. கடவுள் அளவுகடந்த இரக்கம் உள்ளவர் என்கிறோம்.

ஆனால் ஒன்றை மறந்து போகிறோம். அவர் அளவு கடந்த இரக்கம் உள்ளவராய் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு . அவர் அளவுகடந்த நீதியும் உள்ளவர் என்பதாலும், நாம் நரக நெருப்புக்குள் சென்று விடக்கூடாது என்பதாலும், அவர் அளவு கடந்த இரக்கம் உள்ளவராய் இருக்கிறார்.

ஒரு காலம் வரும். அப்போது அவரது இரக்கம் நின்று போகும். அது நமது மரணம். அதற்குப் பின் அவரிடம் நீதி மட்டுமே இருக்கும். ஒன்று நரகம் அல்லது மோட்சம் என்று தீர்மானிக்கப்படும்.

நரகம் என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்டவர் சிலுவை மட்டும் தம்மைத் தாழ்த்திக் கொடூர மரணமடைந்து இருக்க மாட்டார்.

நரகம் இல்லையென்று சொல்வோர் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். அதாவது அலகையின் வலையில் விழுந்து விட்டார்கள். அவர்களுக்கு எதிரணியில் ஆண்டவரும் மாதாவும் புனிதர்களும் திருச்சபையும் இருப்பார்கள்.

ஒரு வகையில் பார்த்தால் மற்ற எல்லாவற்றையும் விட பைபிளில் மிக அதிகமாக வலியுறுத்தப்பட்டிருப்பது நரகமே. மத்தேயு 8-12, மத்தேயு 22:13, மத்தேயு 25:30, மத்தேயு 25:41, இசையாஸ் 33:14, இசையாஸ்1:28, மாற்கு 9:43-48, 2 இராயப்பர் 2:4, லூக்கா 16:23, 24, திருவெளி, 19:20, திருவெளி 20:10, திருவெளி. 20:15.

உயிர்ப்புப் பெருவிழா நள்ளிரவு பூசையில் ஞானஸ்நான வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிக்கும் போது கேட்கப்படும் கேள்விகளில் முதலில் வருவது கடவுளை விசுவசிக்கிறீர்களா? என்பது அல்ல, மாறாகப் பசாசை விட்டு விடுகிறீர்களா என்பதுதான்.

ஆண்டவர் நம்மை மீட்கப் பாடுபட்டார் என்கிறோம். எதிலிருந்து மீட்க? பசாசிடமிருந்தும், நரகத்திலிருந்தும் மீட்கத்தான்.

பாத்திமாவில் மாதா காட்சி கொடுத்தபோது நரகத்தைக் காட்டினார்கள். அதைக் கண்ட பிறகுதான் காட்சி பெற்ற குழந் தைகள் கடும் ஜெப, தப, பரிகாரத்தில் அதிகம் ஈடுபட்டார்கள்.

நரகம் இல்லை என்போமாகில் நாம் பரிதாபத்திற்கு உரிவர்கள். இயேசுவின் பாடுகளை மறுப்பவர்கள். இயேசுவின் போதனைக்கு எதிரிகள்.