111. (50) சாவுக்குப் பின் சம்பவிக்கிறதென்ன?
தனித்தீர்வை.
112. தனித்தீர்வை என்பதென்ன?
அவனவன் மரித்த உடனே தான் செய்த பாவ புண்ணியங்களின் பேரில் சர்வேசுரன் செய்யும் தீர்ப்பே தனித்தீர்வையாம்.
1. தனித்தீர்வை இருப்பது நிச்சயமா?
(1) மனிதர்கள் ஒரே தரம் மரித்து, அதன்பின் தீர்ப்பிடப்பட வேணுமென்று விதித்திருக்கிறதென்று அர்ச். சின்னப்பர் எழுதியிருக்கிறார் (எபி. 9:27).
(2) சாவுக்குப் பின் மனிதன் தீர்ப்பிடப்படுவான் என்பதை ஆதியிலிருந்தே திருச்சபை போதித்து வருகிறது.
2. இந்தத் தீர்ப்பை தனித்தீர்வையென்று சொல்லுவது ஏன்?
இந்தத் தீர்வையில் ஆத்துமம் தனியே இருக்குமே யன்றி, வேறு யாரும் இருக்கமாட்டார்களென்பதைப் பற்றி, இந்தத் தீர்ப்பைத் தனித்தீர்வையென்று அழைக்கிறோம்.
3. இந்தத் தீர்வை எப்போது நடக்கும்?
ஆத்துமம் சரீரத்தைவிட்டுப் பிரிந்த க்ஷணத்திலே சேசு நாதருடைய நீதி ஆசனத்தின் முன் நிற்கும்.
4. எவ்விடத்தில் தனித்தீர்வை நடக்கும்?
மனிதன் மரித்தவுடனே, அவன் படுத்து இருக்கும் இடத்திலேயே தீர்வை நடக்கும்.
5. நமக்குத் தீர்வையிடுகிறவர் யார்?
நம்முடைய பாவ புண்ணியங்களையெல்லாம் தவறு ஒன்றுமின்றி அறிகிற சேசுநாதர்தான். “பிதாவானவர் நியாயத் தீர்வையிடும் அதிகாரத்தைத் தேவசுதனுக்கு முழுமையும் கொடுத்திருக்கிறார்” (அரு. 5:22-27).
6. தனித்தீர்வையில் ஆத்துமத்திடம் எதைப் பற்றிக் கணக்கு கேட்கப்படும்?
(1) தனித்தீர்வையில் ஆத்துமம் தனது நினைவு, வாக்கு, கிரியைகளினால் கட்டிக் கொண்ட சகல பாவங்களைப் பற்றியும் கணக்கு கேட்கப்படும்;
(2) தான் செய்யக் கடமைப்பட்டிருந்தும் தன் தப்பிதத்தால் செய்யாமல் விட்டுவிட்ட நன்மைகளைப் பற்றியும் கணக்கு கேட்கப்படும்.
7. சேசுநாதர் கண்டிப்பான கணக்கு கேட்பாரா?
“மனிதர்கள் பேசியிருக்கும் ஒவ்வொரு வீண் வார்த்தையின் பேரிலும் தீர்வை நாளில் கணக்கு சொல்லுவார்கள்” என்று சேசுநாதர் திருவுளம்பற்றினார் (மத். 12:36).
8. அச்சமயத்தில் சுவாமியிடம் மன்னிப்பு கேட்க முடியுமா?
முடியாது. ஏனென்றால் தீர்வைநாள் நீதியின் காலமேயன்றி, தயவின் காலமல்ல.
9. இந்தத் தீர்வை நடக்க எவ்வளவு நேரம் செல்லும்?
ஒரு கண நேரத்திலே முடியும். ஏனெனில் அப்போது மனச்சாட்சி தெய்வீக வெளிச்சத்தின் பிரகாசத்தினால் ஒரு வினாடிப் பொழுதில் தான் செய்த நன்மை தின்மை யாவையும் நுணுநுணுக்கமாய் அறிந்துகொள்ளும்.
10. அதற்குப் பிறகு சேசுநாதர் என்ன செய்வார்?
ஆத்துமம் தான் செய்த பாவ புண்ணியங்களை அறிந்து கொண்டவுடனே, சேசுநாதர் தீர்ப்பு விதிப்பார்.
11. என்ன தீர்ப்பு விதிப்பார்?
பாவிகளுக்கு நரகமென்றும், முழுதும் பரிசுத்த நீதிமான்களுக்கு மோட்சமென்றும், உத்தரிக்க வேண்டிய நீதிமான்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலமென்றும் சேசுநாதர் தீர்ப்பு விதிப்பார்.
113. (51) தனித்தீர்வைக்குப் பிறகு சாவான பாவமுள்ள ஆத்துமங்கள் எங்கே போகிறார்கள்?
நரகத்திற்குப் போகிறார்கள்.
ஏன் நரகத்துக்குப் போகிறார்கள்?
சாவான பாவமுள்ள ஆத்துமாக்கள் பசாசுக்கு அடிமைகளா யிருக்கிறார்கள். மேலும் அப்பேர்ப்பட்ட ஆத்துமாக்கள் சர்வேசுரனுக்கு விரோதிகளாயிருக்கிறபடியால், அவர்கள் மோட்சத்துக்குப் போகமுடியாது.
114. (52) பரிசுத்த ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?
மோட்சத்துக்குப் போகிறார்கள்.
1. பரிசுத்த ஆத்துமம் எது?
இவ்வுலகத்தில் தன் பாவங்களுக்காக முழுதும் உத்தரித்து, அற்பப்பாவம் முதலாய் இல்லாத ஆத்துமம்.
2. நேராக மோட்சத்துக்குப் போகிறவர்கள் அநேகரா?
வெகு கொஞ்சம்பேர். ஏனெனில் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலிருந்து இறந்துபோகிறவர்களுக்குள் பெரும்பாலானோர் தங்கள் பாவங்களுக்காக முழுதும் உத்தரியாமல் சாகிறார்கள்.