1. மேற்சொல்லிய விஷயங்களுக்கும், பொருத்தனைக்கும் உள்ள தொடர்பு என்ன?
தேவதூஷணம், சாபம், பொய்ப்பிரமாணம் ஆகிய இவைகள் சர்வேசுரனுடைய திருநாமத்தைப் பழிக்கிறவைகள், பொருத்தனையோ அதை ஸ்துதிக்கிறது.
2. பொருத்தனை அல்லது வார்த்தைப்பாடு ஆவதென்ன?
தகுந்த யோசனை செய்து இரண்டு காரியங்களுள் எது அதிக நன்மையான காரியமோ, அதைச் செய்வதாகவும், அதைச் செய்யத் தவறினால், பாவமாகும் என்றும் தீர்மானித்து, மனசார சர்வேசுர னுக்கு வாக்களிப்பதே வார்த்தைப்பாடாகும்.
3. வார்த்தைப்பாடு எவ்விதமான முயற்சி?
வார்த்தைப்பாடு தேவ ஆராதனைக்குரிய ஒரு முயற்சி. ஆகவே சர்வேசுரனைக் குறித்து மாத்திரம் கொடுக்கலாம். ஆனதுபற்றி நாம் அர்ச்சியசிஷ்டவர்களுக்கு வார்த்தைப்பாடு கொடுக்கும்போது, அவர்களுடைய பேரால் சர்வேசுரனுக்கே வார்த்தைப்பாடு கொடுக் கிறோமென்று அறிந்து கொள்ள வேண்டும்.
4. வார்த்தைப்பாட்டின் பிரதான பிரிவுகள் எவை?
(1) ஆளைப் பற்றிய அல்லது பொருளைப்பற்றிய வார்த்தைப் பாடு;
(2) நித்திய அல்லது அநித்திய வார்த்தைப்பாடு;
(3) ஆடம்பர அல்லது சாதாரண வார்த்தைப்பாடு.
(4) நிபந்தனையான அல்லது நிர்ணயமான வார்த்தைப்பாடு.
5. ஆளைப்பற்றிய வார்த்தைப்பாடு ஆவதென்ன?
வார்த்தைப்பாட்டின் விஷயம் ஆளைச் சார்ந்ததாயிருந்தால், ஆளைப்பற்றிய வார்த்தைப்பாடாகும். உதாரணமாக: விரத்தத்துவம் அனுசரிக்கிறது; ஒருசந்தியாயிருக்கிறது இவை முதலியன.
6. பொருளைப்பற்றிய வார்த்தைப்பாடு ஆவதென்ன?
மற்ற வார்த்தைப்பாடுகளாம். உதாரணமாக: ஏழைகளுக்குத் தர்மம் கொடுப்பதாக பொருத்தனை செய்கிறது.
7. நித்திய வார்த்தைப்பாட்டுக்கும், அநித்திய வார்த்தைப்பாட்டுக்குமுள்ள வித்தியாசமென்ன?
மரணம் வரைக்கும் கட்டுப்படுத்தும் வார்த்தைப்பாடு நித்திய வார்த்தைப்பாடு என்று சொல்லப்படும். மற்ற வார்த்தைப்பாடு களோ அநித்திய வார்த்தைப்பாடுகளாம்.
8. ஆடம்பர வார்த்தைப்பாடு ஆவதென்ன?
ஆடம்பர வார்த்தைப்பாடாக திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட வார்த்தைப்பாடாம். உதாரணமாக துறவற சபையில் சேர்ந்திருக்கும் சந்நியாசிகள் செய்யும் வார்த்தைப்பாடு.
9. சாதாரண வார்த்தைப்பாடு எது?
மற்ற எல்லா வார்த்தைப்பாடுகளாம்.
10. நிபந்தனையான வார்த்தைப்பாடு ஆவதென்ன?
ஒரு காரியத்தில் குறிக்கப்பட்ட நிபந்தனை நிறைவேறின பிறகு தான் அநுசரிப்பதாகக் கொடுக்கும் வார்த்தைப்பாடே நிபந்தனை யான வார்த்தைப்பாடாம். உதாரணமாக: வியாதி குணப்பட்டால் மூன்று பூசை செய்விப்பேன்.
11. நிர்ணயமான வார்த்தைப்பாடு ஆவதென்ன?
யாதொரு நிபந்தனையுமில்லாமல் செய்கிற வார்த்தைப்பாடாம். உதாரணமாக: குருக்கள் விரத்தத்துவம் அனுசரிக்கக் கொடுக்கும் வார்த்தைப்பாடு.
12. மெய்யான வார்த்தைப்பாட்டுக்கு அவசியமானவை எவை?
1-வது.--வார்த்தைப்பாடு கொடுக்கிறவன்:
(1) தான் செய்வது என்னவென்று நன்றாய் அறிந்து, வார்த்தைப்பாடு கொடுக்க மனதாயிருக்க வேண்டும்;
(2) அதை யாருடைய கட்டாயமுமின்றித் தன் சுயமனதாரக் கொடுக்க வேண்டும்;
(3) அதை மீறுவதினால் அற்பப் பாவமாவது, சாவான பாவ மாவது கட்டிக்கொள்வதாகத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
2-வது.--கொடுக்கிற வார்த்தைப்பாடானது:
(1) நிறைவேறக்கூடியதாயிருக்கவேண்டும்;
(2) வார்த்தைப்பாட்டின் விஷயம் நல்லதாயிருக்க வேண்டும்;
(3) அன்றியும் இரண்டு எதிரிடையான காரியங்களுள் எது அதிக மேலான நன்மையோ, அதைத்தான் தெரிந்துகொண்டு வார்த்தைப்பாடு கொடுக்கவேண்டும்.
13. வார்த்தைப்பாட்டுக்கு வேண்டிய அறிவு மனது எது?
சாவான பாவம் கட்டிக்கொள்வதற்கு அறிவு, கவனம், சம்மதம் இருக்க வேண்டியதுபோல வார்த்தைப்பாட்டுக்கும் இருக்க வேண்டியது. ஆகையால் புத்தி விவரமில்லாதவன் மெய்யான வார்த் தைப்பாடு கொடுக்க முடியாது.
14. பிறருடைய கட்டாயத்தினால் கொடுக்கிற வார்த்தைப்பாடு செல்லுமா?
பிறருடைய கட்டாயத்தால் கொடுக்கிற வார்த்தைப்பாடு கடனற்ற வார்த்தைப்பாடு. ஏனென்றால், நாம் வார்த்தைப்பாட்டினால் நமது மேல் ஒரு கடமையைச் சுமத்திக் கொள்ளுகிறோம். அக்கடமையால் நாம் கட்டுப்படுவதற்காக அதை மனதார நம்மேல் சுமத்திக் கொள்ள வேண்டும்.
15. பயத்தால் கொடுக்கும் வார்த்தைப்பாட்டை நிறைவேற்றக் கடனுண்டா?
வெளிக்காரணங்களினிமித்தம் உண்டாகும் அநியாயமான பெரும் பயத்தினால் கொடுக்கும் வார்த்தைப்பாடு செல்லாத வார்த்தைப்பாடாகும். ஏனென்றால், வார்த்தைப்பாடு கொடுக்கிற தற்கு மனச்சுயாதீனம் முழுதும் அவசியம். மேலும் அப்பேர்ப்பட்ட சமயத்தில் கொடுத்த வார்த்தைப்பாட்டைச் சர்வேசுரன் அங்கீகரிக்க மாட்டார்.
16. வெளிக்காரணங்களினிமித்தம் உண்டாகும் பயம் என்று சொல்லுவானேன்?
ஏனென்றால், நமது மனதில் தானாய் உண்டாகும் பயம், புத்தி முழுவதையும் மயக்காமலிருக்கும்போது, கொடுக்கும் வார்த்தைப்பாடு செல்லும்; ஏனெனில், அப்பேர்ப்பட்ட சமயத்தில் முழு சுயாதீனம் இருக்கிறது. உதாரணமாக: ஆபத்துக்குப் பயந்து கொடுக்கும் வார்த்தைப்பாடு.
17. பெரும் பயத்தினால் என்று சொல்லுவானேன்?
ஏனென்றால், அற்பப் பயமானது நமது மனச்சுயாதீனத்தைத் தடுக்கிறதில்லை.
18. வார்த்தைப்பாடு கொடுக்கும்போது, தான் அதை மீறினால் பாவம் கட்டிக் கொள்வதாக ஏன் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்?
ஏனென்றால், வார்த்தைப்பாடானது, நம்மேல் சுமத்திக் கொண்ட ஒரு கற்பனைக்குச் சமானமாயிருக்கிறது. ஆகையால் இந்தத் தீர்மானம் செய்யாவிட்டால், நாம் கொடுப்பது சாதாரணமான பிரதிக்கினை அல்லது வாக்குத்தத்தமே ஒழிய தேவ வார்த்தைப் பாடல்ல. ஆனாலும் வார்த்தைப்பாட்டின் விஷயம் சொற்பமா யிருக்கும்போது அதை மீறுவதால் சாவான பாவம் கட்டிக்கொள் வதாகத் தீர்மானித்தாலும் செல்லாது. ஏனெனில் சொற்ப விஷய மானது கனமான கடமையை உண்டாக்க முடியாது.
19. அப்படியானால் வார்த்தைப்பாட்டுக்கும், சாதாரண வாக்குத் தத்தத்துக்குமுள்ள வித்தியாசம் என்ன?
வார்த்தைப்பாடு கொடுப்பதினால் நம்மேல் ஒரு கண்டிப்பான கடனைச் சுமத்திக் கொள்கிறோம். ஆகையினாலே அதை மீறினால் பாவமாகும். வாக்குத்தத்தமோவென்றால் அப்படியல்ல. அது ஒரு கடமையாயிராமல், ஒரு பிரதிக்கினைக்கு ஒப்பாயிருக்கிறது. ஆகை யால் ஒரு பிரதிக்கினையை அனுசரிக்காதவன் எப்படிப் பாவம் செய்கிறதில்லையோ, அப்படியே தான் செய்த வாக்குத்தத்தத்தை அநுசரியாதவன் பெரும்பாலும் பாவம் கட்டிக் கொள்ள மாட்டான்.
20. பெரும்பாலும் என்று சொல்லுவது ஏன்?
ஏனென்றால், சபலப்புத்தி, அருவருப்பு, அசட்டையினிமித்த மாக வாக்குத்தத்தத்தை அனுசரியாதவன் அற்பப்பாவங் கட்டிக் கொள்ளுகிறான்.
21. தான் கொடுத்த வாக்குத்தத்தம், மெய்யான வார்த்தைப்பாடோ அல்லது சாதாரண வாக்குத்தத்தமோ என்று சந்தேகமாயிருந்தால், என்ன நினைக்க வேண்டும்?
அது மெய்யான வார்த்தைப்பாடல்ல என்று நினைக்க வேண்டும்.
22. கொடுக்கும் வார்த்தைப்பாடானது ஏன் நிறைவேறக் கூடியதாயிருக்க வேண்டும்?
ஏனென்றால், கூடாத காரியத்தைச செய்ய ஒருவனுக்குங் கடனில்லை. ஆகையால் ஒருவன் தன் சீவிய காலமுழுவதும் ஒரு சின்னக் குற்றம் முதலாய் ஒருபோதும் செய்யமாட்டேனெனறு வார்த்தைப்பாடு கொடுத்தால், அப்பேர்ப்பட்ட வார்த்தைப்பாடு செல்லாத வார்த்தைப்பாடாயிருக்கும். ஆனால் சாவான பாவத்தைச் செய்ய மாட்டேன, மனதுபொருந்தி அற்பப்பாவத்தைச் செய்ய மாட்டேனென்று வார்த்தைப்பாடு கொடுத்தால் அது செல்லும். ஏனெனில், சர்வேசுரனுடைய தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு அப்பேர்ப்பட்ட வார்த்தைப்பாட்டை நிறைவேற்றக்கூடும்.
23. வார்த்தைப்பாட்டின் விஷயம் ஏன் நல்லதாயிருக்க வேண்டும்?
ஏனென்றால், முன் சொன்னபடி வார்த்தைப்பாடானது தேவ ஸ்துதிக்குரிய முயற்சியாம். நன்மையும் தீமையும் அல்லாத சாரமற்ற காரியத்தைச் செய்வதினால், நாம் சர்வேசுரனை ஸ்துதிக்க மாட்டோம். உதாரணமாக: தினந்தோறும் கால்மணி நேரம் அளவாக சரீரப் பயிற்சி செய்வேன்; தேவமாதா தரிசனம் அளித்த குகையைப் பார்க்க லூர்து பட்டணத்துக்குப் போவேன் என்பவை முதலியன.
24. வார்த்தைப்பாட்டின் விஷயம் நல்லதாயிருந்தாலும் அதன் நோக்கம் கெட்டதாயிருந்தால், வார்த்தைப்பாடு செல்லுமா?
வார்த்தைப்பாட்டின் விஷயம் நல்லதாயிருந்தாலும் அதன் நோக்கம் கெட்டதாயிருந்தால், வார்த்தைப்பாடு செல்லாது. ஏனெனில், கெட்ட நோக்கமானது விஷயத்தையும் கெடுக்கின்றது. உதாரணமாக: திருடப் போகிறவன் தன் காரியம் அனுகூலப்படும் படி அர்ச். அந்தோணியாருக்கு நேர்ந்துகொள்ளும் பொருத்தனை செல்லாது.
25. முழுதும் கெட்டதாயிருந்தால் என்று சொல்லுவானேன்?
ஏனென்றால், கெட்ட நிபந்தனையோடு ஒரு நல்ல நோக்கம் சேர்ந்திருக்கும்போது, வார்த்தைப்பாடு செல்லும். உதாரணமாக திருடப் போகிறவன் தான் அகப்படாதிருக்கும் பொருட்டு தர்மம் செய்வதாக வார்த்தைப்பாடு கொடுத்தால், அது செல்லும்.
26. வார்த்தைப்பாட்டின் விஷயம் நல்லதாக மட்டுமல்ல, அதற்கு எதிரிடையானதைவிட அதிக நன்மையானதாகவுமிருக்க வேண்டுமென்று சொல்லுவானேன்?
ஏனென்றால், ஒரு காரியத்தைச் செய்யாதிருப்பதைவிட அதைச் செய்வது மேலானதாய் இல்லாத பட்சத்தில், அதைச் செய் வதாலும் சர்வேசுரனை ஸ்துதிக்க மாட்டோம். ஆகையினாலே வார்த்தைப்பாடு கொடுக்கும்போது இரண்டு எதிரிடையான காரியங்களுள் எது அதிக மேலான நன்மையோ, அதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக: கலியாணம் செய்வது நல்ல காரியம்தானே: ஆனாலும் கலியாணம் செய்துகொள்வேன் என்று வார்த்தைப்பாடு கொடுப்பது செல்லாது. ஏனெனில், கலியாணத்தைவிட விரத்தத்துவம் உயர்ந்த அந்தஸ்து.
27. ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிற ஒரு கற்பனையை அனுசரிக் கும்படி வார்த்தைப்பாடு கொடுக்கலாமா?
அதற்குத் தடையில்லை. உதாரணமாக: ஞாயிற்றுக்கிழமை தோறும் பூசை காண்பேனென்று வார்த்தைப்பாடு கொடுக்கலாம். இப்படிச் செய்வதால், திருச்சபையின் கட்டளையை அனுசரிக்க அதிகப் பிரமாணிக்கமும், ஜாக்கிரதையும் உண்டாகின்றது.