1. சர்வேசுரனைப் பரிசோதித்தல் என்றால் என்ன?
நல்ல காரணம் இல்லாதபோது, சர்வேசுரன் நமக்காக ஒரு புதுமை செய்யப் போகிறார், நமது விஷயங்களை அதிசயத்துக்குரிய விதமாய் நடத்தப்போகிறாரென்று வீணாய் எண்ணி, எதிர்பார்த்திருப்பது சர்வேசுரனைப் பரிசோதித்தலாம்.
2. “நல்ல காரணம் இல்லாதபோது” என்று சொல்வானேன்?
நமது அவசரங்களில் நம்மால் செய்யக் கூடியவைகளை எல்லாம் செய்து, தக்க வழிவகைகளை உபயோகித்த பிறகு, சர்வேசுரனை நம்பி, அவர் நமக்கு உதவியையும், நமக்காக புதுமையையும் முதலாய் செய்வாரென்று காத்திருப்பது, சர்வேசுரனைப் பரிசோதித்தலாய் ஆகாமலிருப்பதுடன் புண்ணியமுமாகும்.
3. அப்பாவத்தைக் கட்டிக் கொள்ளுகிறவர்கள் யார்?
(1) சர்வேசுரன் கட்டாயம் தன் உயிரைக் காப்பாற்றுவாரென்று தன்னை மரண ஆபத்துக்கு உட்படுத்திக் கொள்கிறவனும்,
(2) கடும் வியாதி சமயத்தில் தக்க மருந்துகளை வேண்டாமென்று தள்ளி, சர்வேசுரனே தனக்குச் செளக்கியம் கொடுப்பார் என்று நம்புகிறவனும்,
(3) வேத கலாபனைக் காலத்தில், சர்வேசுரனின் விசேஷ ஏவுதலின்றி வேதசாட்சிய முடிபெறும்படி வேதவிரோதிகளுக்குத் தன்னைத் தானே கையளிக்கிறவனும்,
(4) தன் தன் குற்றமின்மையை எண்பிப்பதற்குத் தனி யுத்தம் செய்கிறவர்களும், அல்லது நெருப்பின்மேல் நடக்கிறவர்களும், கொதிக்கிற எண்ணெயில் கைவிடுகிறவர்களுமாம்.
4. அது எப்பேர்ப்பட்ட பாவமாகும்?
தன்னிலேதானே சாவான பாவமாகும். ஆனால் கவனக் குறைவினாலும், அறியாமையினாலும் அற்பப் பாவமாயிருக்கக் கூடும்.
5. எப்படிப் பாவமாயிருக்கிறது?
மேற்சொன்னபடி நமது அவசியங்களில் சர்வேசுரனை நம்பி, அவரை நோக்கி வேண்டிக் கொள்ளுகிறது நாமெல்லோரும் செய்ய வேண்டிய புண்ணியம். ஆனால் தக்க உதவிகளை உபயோகிக்காமல், ஒரு புதுமை தவறாது கட்டாயம் நடக்க வேண்டுமென்று வீண் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருப்போமாகில், அது மகிமைப் பிரதாபம் நிறைந்த சர்வேசுரன் மட்டில் மரியாதைக் குறைவாய் நடப்பதாகும். எனென்றால், அப்படி எண்ணுகிறவர்கள் சர்வேசுரன் மெய்யாகவே வல்லமையுள்ளவரும், கிருபையுள்ளவரும், ஞானமுள்ளவருமாய் இருக்கிறாரா இல்லையாவென்று ஒருவிதமாய்ச் சோதிக்கிறார்கள்.