1. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய கடமைகள் எவை?
அவர்கள் குடும்பத்தின் பொது நன்மைக்கும், பாக்கிய சந்தோஷத்துக்குமுரிய வழிபாடுகளை உபயோகித்து, கிறீஸ்தவர்களுக்குரிய விதமாய் ஜீவிக்க ஒருவர் ஒருவருக்குத் தூண்டுகோலாயிருந்து, தங்கள் அவசியங்களில் உதவி ஒத்தாசை செய்துகொள்ளக் கடவார்கள்.
2. சகோதரர் சகோதரிகள் ஒருவர் ஒருவர்மட்டில் செலுத்த வேண்டிய கடமைகள் எவை?
ஒருவர் ஒருவரை சிநேகித்து,வேண்டிய உதவிகள் புரிந்து, சகித்து, பொறுத்து, சமாதானமாய் ஜீவிக்கக் கடமைப்பட்டிருக் கிறார்கள்.
3. மாமனாருக்கும் மாமியாருக்கும் தங்கள் மருமகள் மட்டிலுள்ள கடமைகள் எவை?
அவர்கள் மருமகள்களைத் தங்கள் சொந்தப் பிள்ளைகளைப் போலே நேசிக்கவும், நடத்தவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆகையால், செய்யமுடியாத வேலைகளை மருமகள் மேல் சுமத்தி, அவள் சீவியத்தை நிர்ப்பாக்கியம் உள்ளதாக்குதல் மகா பெரிய அநியாயமே.
4. மருமகளுக்குத் தனது மாமியார் மட்டிலுள்ள கடமைகள் எவை?
மருமகள் தனது மாமியாரைத் தாயைப்போல் சிநேகித்து, பொறுமையுள்ளவளாயும், கீழ்ப்படிதலுள்ளவளாயும், வேலைமேல் கருத்துள்ளவளாயும் நடந்துகொள்ள வேண்டியது.