திருப்பலியில் ஆழமான முறையில் பங்கேற்க வேண்டுமெனில், அதைப்பற்றி நாம் ஆழமாக கற்க வேண்டும். எனவே இந்த பதிவின் ஊடாக நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவின் சீடர்களாக உருமாற்றம் காண அழைப்பு தருகின்றது.
இன்று திருப்பலிக்குச் சென்று வீடு திரும்பும் பலரிடம் எங்கே போயிட்டு வாறீங்க? என்றால், பூசை பார்த்துவிட்டு வாறோம் என்பார்கள். அதேவேளை பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று வருபவரை கேட்டால் 'Birthday Party'க்கு போய் வருகிறேன் என்பார்கள். இதிலிருந்து ஒர் உண்மை புலனாகிறது. நாம் இன்னும் திருப்பலி பற்றிய உண்மைகளைப் புரிந்து கொள்ளவில்லை.
திருப்பலி ஒரு பொருள் அல்ல நாம் பார்த்துவிட்டு வர. மாறாக அது ஒரு நிகழ்வு. ஆகவே நாம் பார்க்க போவது இல்லை. மாறாக பங்கேற்க கொண்டாட போகின்றோம். பிறந்த நாள் உற்சவத்துக்கு செல்லும் நாம், ஒரு போதும் பிறந்தநாள் நிகழ்வுக்கு போனோம் என்று சொல்வதை விடுத்து, Birthday Partyக்கு போனோம் என்றே சொல்வது வழமை.
ஆக பல வேளைகளில் நமது திருப்பலி உயிரற்ற ஒன்றாக, இதயம் தொடாத வழிபாடாகவே மாற்றிவிட்டோம். திருப்பலி வெறும் சடங்காக மாறிவிட்டது.
கடவுளை அனுபவிக்க, சுவைக்க வழி சமைத்த அப்பம் பிட்கும் நிகழ்வு, இன்று உயிர்த்த இயேசுவை கண்டுணர முடியாதவாறு திருப்பலியை மழுங்கடித்துவிட்டோம். ஏனென்றால் நாம் நம் இயேசுவின் இலட்சியத்தை ஆழ்ந்த அமைதியிலும், சிந்தனையிலும் நமதாக்க தவறியிருக்கின்றோம்.
திருப்பலி என்பது ஓர் பார்வைப் பொருள் அல்ல. அது வெறும் சடங்கும் அல்ல. இந்த மனநிலையை நம்மில் இருந்து அகற்ற வேண்டும்.
ஒவ்வொரு திருப்பலியும் கடவுளும், மனிதரும் இணைந்து நடத்தும் கூட்டுச் செயற்பாடு என்பதை ஆழ்ந்து உணர வேண்டும்.
'இதை என் நினைவாகச் செய்யுங்கள்" (1கொரி 11:24) எதனை தன் நினைவாகச் செய்ய ஆண்டவர் கட்டளை இடுகின்றார்?
அவர் அப்பத்தை பிட்டு, தம் சீடர்களுக்கு கொடுத்து, 'இது என் உடல்" என்றார். பின் திராட்சை இரசம் கொண்ட கிண்ணத்தை எடுத்து 'இது என் இரத்தம்" என்றார். ஆக ஓர் சடங்கை தன் நினைவாக தொடர்ந்து செய்ய கிறிஸ்து கட்டளையிட்டாரா?
திருப்பலி என்பது என்ன? திருப்பலிக்கு கொடுக்கப்படும் பெயர்கள் தான் என்ன? திருப்பலி ஒர் கொண்டாட்டம், திருப்பலி ஒர் விருந்து, திருப்பலி ஒர் நினைவுப்பலி, அப்பம் பிட்குதல், நற்கருணை விருந்து, நன்றி வழிபாடு என்று பல விதமாக அழைக்கலாம்.
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்து வழிபடும் வழிபாடு திருப்பலி. நற்கருணை என்பது கிறிஸ்துவின் தியாக அன்பினை வெளிப்படுத்தும் ஒர் அருள் அடையாளம்.
இந்த நற்கருணை கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும், உச்சியுமாக இருக்கின்றது (திருச்சபை எண் 11) என்கிறது சங்க ஏடு.
இந்த நற்கருணை வெறும் உணவு மாத்திரமல்ல, விருந்தாகவும் தருகின்றார் இயேசு. 'உணவை தனித்து உண்ணலாம்" ஆனால் விருந்தை சேர்ந்துதான் உண்ண வேண்டும்.
எனவேதான் 'நற்கருணை திருச்சபையை உருவாக்குகிறது. திருச்சபை நற்கருணையை உருவாக்குகின்றது" எனச் சொன்னார் மறைந்த திருத்தந்தை 2ம் ஜோன் போல்.
இறைமக்கள் சமூகம் ஒன்று கூடுமிடத்தில் நற்கருணை ஏற்படுத்தப்படுகிறது. அதேபோன்று நற்கருணை நம்மை ஒன்று சேர்க்கின்றது. ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் அர்த்தம் புரிந்து திருப்பலியில் ஈடுபாட்டோடு பங்கேற்கவும்.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நோக்கம் இதுவே. எனவே தான் திருவழிபாட்டு கொள்கைத்திரட்டு (எண் 14) 'இறைமகன் திருவழிபாட்டில் முழுமையாக, உணர்வுப்பூர்வமாக செயலூக்கமான முறையில் பங்கேற்க வழி வகை செய்யப்பட வேண்டும்" என அழைப்புத் தருகின்றது.