தேவசினேகப் புண்ணியம்.

188, தேவசினேகம் ஆவதென்ன?

எல்லாத்தையும் பார்க்க சர்வேசுரனையும், அவரைப்பற்றி நம்மைப் போல் புறத்தியாரையும் நேசிக்கச் செய்யும் மேலான புண்ணியமே தேவசினேகம்.


189. சர்வேசுரனை சகலத்தையும் பார்க்க சினேகிக்க வேண்டும் என்பதற்கு முகாந்திரமென்ன? 

அவர் தம்மில்தானே அளவில்லாத சகல நன்மையும் நிறைந்த வராயும் நமக்கு உபகார சகாயங்களையெல்லாம் புரிகிறவராயும், நம்மை அப்படி சினேகிக்கக் கற்பித்தவராயும் இருப்பதினாலேதான். 


190. தேவசினேக முயற்சியைச் சொல்லு.

என் சர்வேசுரா சுவாமி தேவரீர் மட்டில்லாத நேசத்திற்குப் பாத்திரமாயிருப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். மேலும் உம்மைப்பற்றி என்னை நான் நேசிக்கிறது போல மற்ற எல்லாரையும் நேசிக்கிறேன் - ஆமென். 


191. தேவசிநேகத்துக்கு நேர்விரோதமான பாவங்கள் எவை?

சர்வேசுரனைப் பகைக்கிறதும், அவரைவிட யாரையாவது, எதையாவது, நேசிக்கிறதும், பொதுவிலே எந்தச் சாவானப்பாவத்துக்கும் உள்ளாகிறதும் தேவசினேகத்துக்கு நேர் விரோதம். 


192. நம்மைப்போல் புறத்தியாரைச் சினேகிக்க வேண்டும் என்பதற்கு அர்த்தம் என்ன? 

நாம் நமக்கே விரும்பும் நன்மையைப் புறத்தியாருக்கும் விரும்ப வேண்டும் என்றும் நமக்கே வேண்டாமென்கிற தின்மையைப் புறத்தியாருக்கும் செய்யக்கூடாது என்றும் அர்த்தமாகும். 


193. நம்மிடத்தில் பிறர்சிநேகம் உண்டென்பதற்கு திருஷ்டாந்தம் என்ன? 

ஆத்தும விஷயத்திலாவது சரீரவிஷயத்திலாவது புறத்தியாருக்கு உதவியான தர்மக் கிரியைகளைச் செய்வதேயாம்.